யார் இந்த நாமல் குமார? – திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டார் ராஜித

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ ஆகியோரைக் கொலை செய்யும் சூழ்ச்சிகள் தொடர்பாகத் தகவல்களை வெளியிட்ட நாமல் குமார என்பவர் பொலிஸாருக்கு உளவுத் தகவல்களை வழங்குபவரே எனத் தெரிவித்துள்ள அமைச்சரவைப் பேச்சாளரான ராஜித சேனாரட்ன, இதனால் இவர் தொடர்பாக அரசு ஆராய்ந்து வருவதுடன் இவரால் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பாக விசாரணைகளை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

அரச தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின்போது ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அந்த செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விகளும் அமைச்சரின் பதில்களும் வருமாறு:-

கேள்வி:- ஜனாதிபதியையும் மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளரையும் கொலை செய்யும் சூழ்சிகள் தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் கதைக்கப்பட்டதா? இது தொடர்பாக விசாரணை நடவடிக்கைகள் எவ்வாறு நடக்கின்றன.

பதில்:- இது தொடர்பாக அமைச்சரவையில் கலந்துரையாடப்படவில்லை. எவ்வாறாயினும் இந்த விடயம் தொடர்பாக முழுமையான விசாரணைகளை சி.ஐ.டி முன்னெடுத்து வருகின்றது. அத்துடன் பொலிஸ்மா அதிபர் ஜனாதிபதிக்கும் மற்றும் பிரதமருக்கும் இது தொடர்பான அறிக்கைகளை வழங்கியுள்ளார். இந்த விடயத்தில் குற்றச்சாட்டை முன்வைக்கும் நபர் தொடர்பாகவும் சில விடயங்களில் ஆராய வேண்டியுள்ளது. பொலிஸ் உளவுப்பிரிவில் செயற்படுவராக அவர் இருக்கின்றார். அவருக்கு ரோஹிங்கியா விடயத்தில் உளவுத் தகவல்களை வழங்கியமைக்காக 5 இலட்சம் ரூபா செலுத்தப்பட்டுள்ளது. அந்த நபர் அவர்களுடன் இருந்துகொண்டே அவர்களுக்கு எதிராக உளவுத் தகவல்களை வழங்கியுள்ளார்.

அதேபோன்று கண்டி சம்பவத்தின்போதும் அந்தக் கடமையை செய்துள்ளார். இதற்கான பணம் இன்னும் செலுத்தப்படவில்லை எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறான விடயங்களும் இருக்கின்றன.

மறுபக்கத்தில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டும் பாரதூரமானதே. இதனால் இந்த விடயம் தொடர்பாக முழுமையாக விசாரணைகள் நடத்தப்படுகின்றன.

அதேவேளை, இந்த விடயம் வெளிவரக் காரணமாக இருந்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வாவுக்கு இடமாற்றமும் வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை முறைப்பாட்டை முன்வைத்த நபரிடமும் வாக்குமூலங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

கேள்வி:- குற்றச்சாட்டை முன்வைக்கும் நபர் மற்றும் குறித்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் இந்தியாவின் உளவுப் பிரிவுடன் (‘றோ’) தொடர்புபட்டுள்ளதாக இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான தகவல்கள் இருக்கின்றனவா?

பதில்:- பல்வேறு கருத்துக்கள் கூறப்படுகின்றன. விசாரணைகள் நடக்கின்றனதானே.

கேள்வி:- சம்பந்தப்பட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரை இடமாற்றம் செய்வதை விடுத்து அவரைக் கைதுசெய்ய வேண்டுமென நாடாளுமன்றத்திலும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளனவே. இது தொடர்பில் தங்கள் கருத்து என்ன?

பதில்:- எவர் மீதும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கலாம். குற்றச்சாட்டை முன்வைக்கின்றார்கள் என்பதற்காக கைதுசெய்ய முடியாது. நாலக டி சில்வா பிரதிப் பொலிஸ்மா அதிபர். இதனால் விசாரணை நடத்தி அது உண்மையா பொய்யா என்பதை அறிய வேண்டும். அதன் பின்னரே கைதுசெய்ய முடியும். குற்றச்சாட்டை முன்வைக்கும் போதெல்லாம் சேவையில் இருந்து நீக்கப் போனால் அரச சேவையை நடத்திச் செல்ல முடியாத நிலைமையே ஏற்படும்.

கேள்வி:- விசாரணை நடத்தும் சி.ஐ.டியினர் பொலிஸ்மா அதிபருக்கே அறிக்கையை வழங்குவர். ஆனால், நேற்றைய தினம் பொலிஸ்மா அதிபர் குற்றச்சாட்டுக்கு இலக்காகியுள்ள பிரதிப் பொலிஸ்மா அதிபரை களனி விகாரைக்கு அழைத்துச் சென்றுள்ளார். இவ்வாறு இருவரும் ஒன்றாக இருக்கும்போது எப்படி விசாரணைகளை முறையாக முன்னெடுக்க முடியும்?

பதில்:- அவர் இன்னும் பிரதிப் பொலிஸ்மா அதிபர்தானே. அவருடன் பொலிஸ்மா அதிபருக்கு கதைக்க முடியாதா? இந்த விசாரணையை பொலிஸ்மா அதிபர் செய்வதில்லை. இப்போது பொலிஸ் ஆணைக்குழு இருக்கின்றது. ஆனால், நீங்கள் ராஜபக்‌ஷ காலத்தைப் போன்று இருக்க வேண்டுமென்றே நினைக்கின்றீர்கள். உங்களுக்கு ஏற்றால் போன்றோ நீங்கள் நினைப்பதைப் போன்றோ தண்டனை வழங்க முடியாது. இது அரச சேவையே. ஆரம்ப விசாரணைகள் இன்றி எப்படித் தண்டனை வழங்க முடியும்?

கேள்வி:- பொலிஸ் உளவாளியாகச் செயற்படும் நாமல் குமார என்பவர் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் வெளியே வந்தது ஏன்?

பதில்:- ஒரு பக்கத்தில் அவருக்குப் பணம் செலுத்தப்படாமை.

கேள்வி:- இவர் பொலிஸ் உளவாளியென்றால் இவர் வெளியிடும் ஒலிப்பதிவு உண்மையானதாக இருக்கலாம்தானே?

பதில்:- அது தன்னுடைய குரல் பதிவு அல்லவென அவர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிராகரித்துள்ளார்.

கேள்வி:- பொலிஸ்மா அதிபரின் செயற்பாடுகள் தொடர்பாக குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. இது தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்குமா? அண்மைக்காலமாக ஆடுகின்றார், பாடுகின்றார்… இவ்வாறாக இவர் நகைச்சுவையான பாத்திரமாகியுள்ளார்.

பதில்:- பொலிஸ்மா அதிபர் என்ற ரீதியில் அவரின் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு நானும் இணங்குவதில்லை.

கேள்வி:- குறித்த ஒலிப்பதிவில் பிரதமரை ஊதிப் பெருப்பிக்க வேண்டும் என்று கூறப்படுகின்றது. இந்தக் கருத்தின் உள்ளே அரசியல் தொடர்பு உள்ளதா?

பதில்:- நான் விசாரணை செய்யவில்லையே. இப்படி நீங்கள் நினைத்தால் விசாரணைப் பிரிவுக்குச் சென்று கூறுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *