குற்றம் இழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்! – கோடீஸ்வரன் எம்.பி. வலியுறுத்து

“நாட்டின் இறைமை பாதுகாக்கப்படவேண்டும் என்றால் குற்றம் இழைத்தவர்கள் கைதுசெய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். இல்லையேல் சர்வதேச நீதிமன்றம் அமைக்கப்பட்டு நீதி விசாரணைகள் இடம்பெற வேண்டும்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“இந்த நாட்டின் ஜனாதிபதியைக் கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டப்படுவதாக ஊடகங்கள் வாயிலாக நான் அறிந்தேன். நாட்டுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள பாரிய அச்சுறுத்துலாகவே இந்தத் தகவலைக் கருதுகின்றேன். ஆகவே, இதற்குப் பின்னணியில் இருப்பவர்களை அடையாளம் காண வேண்டிய கட்டாயத்தில் நாம் அனைவரும் உள்ளோம்.

இந்தத் தகவல் எதிர்காலத்தில் மக்கள் பயந்து வாழும் ஒரு சூழ்நிலை உருவாகும். இதன் மூலம் நாட்டில் பாதுகாப்பு இல்லை எனும் பிழையான சிந்தனை சர்வதேச மட்டத்தில் உருவாகும்.

அதேநேரம், புஸ்பராஜா எனும் ஒரு நபரின் பெயரில் இக்கொலையைச் செய்வதற்கு முயற்சி எடுக்கப்பட்டது எனவும் கருத்துக்கள் வெளியாகியுள்ளன. இது தமிழ் – சிங்கள மக்களுக்கிடையே ஒரு முரண்பாட்டைத் தோற்றுவிக்கும் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழர்களைப் பயங்கரமானவர்களாகச் சித்தரிப்பதற்கும் சிலர் முயற்சிக்கின்றனர்.

சட்டம், ஒழுங்கு என்பது அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். இந்த நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும் ஒரு சட்டமே இருக்க வேண்டும்.

அடிமட்டத்தில் வாழும் மக்களுக்கு ஒரு சட்டம், உயர் பதவிகளில் இருப்பவர்களுக்கு இன்னுமொரு சட்டம் என இரு சட்டங்கள் இருக்க முடியாது. இதனை ஒரு மனித உரிமை மீறலாகவும் பார்க்க முடியும்.

தற்போது ஜனாதிபதிக்கே அச்சுறுத்தல் விடுக்கும் நிலை ஏற்பட்டால் பாமர மக்களின் நிலை என்ன?” – என்று கேள்வி எழுப்பினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *