இலங்கை Huawei நிறுவனத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்து!

இலங்கையில் மென்பொருள் மற்றும் வன்பொருள் பொறியியலாளர்களை வருடாந்தம் உருவாக்குவதற்கான கற்பித்தல் வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாரென சீன ஹுவாவி (Huawei) நிறுவனத்தின் பிரதித் தலைவர் சைமன் லீன் (Simon Lin) தெரிவித்தார்.

தமது நிறுவனம் தற்போதும் இலங்கைக்குள் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு வசதிகளை பெற்றுக்கொடுக்கும் அதேநேரம், பல்வேறு பல்கலைக்கழகங்களின் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு அவசியமான உதவிகளை வழங்க ஆரம்பித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

சீனாவிற்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான குழுவினர் இன்று (17) பீஜிங் நகரிலுள்ள ஹுவாவி நிறுவனத்தின் ஆய்வு மற்றும் அபிவிருத்திக்கான மத்திய நிலையத்திற்கான சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்த வேளையிலேயே சைமன் லீ இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தான் இம்முறை இலங்கையின் எதிர்காலம் தொடர்பில் கலந்தாலோசிக்கவே ஹுவாவி நிறுவனத்திற்கு வந்திருப்பதாக கூறினார்.

டிஜிட்டல் கல்வி முறைமை மற்றும் பசுமை வலுசக்தி உற்பத்தி தொடர்வில் சீன அரசாங்கம் மற்றும் ஹுவாவி நிறுவனத்தின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானதெனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.

பொருளாதாரத்துடன் இலங்கை மக்களையும் டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் வலுவூட்ட வேண்டியதன் அவசியத்தையும், ஹுவாவி நிறுவனத்தின் சர்வதேச சேவைகள் மற்றும் அவர்களின் நவீன தொழில்நுட்ப செயன்முறைகள் மற்றும் உபகரணங்கள் தொடர்பிலும் இலங்கை தூதுக்குழுவிற்கு விளக்கமளிக்கப்பட்டது.

இதன்போது, இலங்கை பாடசாலைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஒத்துழைப்புக்களை வழங்குவது தொடர்பிலான ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *