இனியாவது பொறுப்பாகச் செயற்படுங்கள்! – எம்.பிக்களிடம் சபாநாயகர் வலியுறுத்து

“கூட்ட நடப்பெண் (கோரம்) இன்மையால் நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கும் நிலைமை இனியும் ஏற்படக்கூடாது. இந்த விடயத்தில் ஆளும், எதிரணி உறுப்பினர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.”

– இவ்வாறு சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்தார்.

நாடாளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் ஒரு மணிக்குக் கூடியபோது, சபாநாயகர் அறிவிப்புவேளையிலேயே இந்த அறிவிப்பு சபாநாயகரால் விடுக்கப்பட்டது.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-

“கூட்ட நடப்பெண் இல்லாததால் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்ட சம்பவங்கள் கடந்த சபை அமர்வின்போது நடந்துள்ளன. இது கவலைக்குரிய விடயமாகும்.

நாடாளுமன்றம் உயரிய சபையாகக் கருதப்படுவதுடன், நாட்டை நிர்வகிப்பதற்குரிய சட்டங்கள் இயற்றப்படும் சட்டவாக்கச் சபையாகவும் அது விளங்குகின்றது. சபை அமர்வுகள் நடைபெறும் நாட்களில் முக்கிய சில பணிகள் இடம்பெறுகின்றன.

அதுமட்டுமல்ல சபை அமர்வுக்காக மக்களின் பணம் செலவிடப்படுகின்றது. அதை வீண்விரயமாக்கும் வகையில் எவரும் செயற்படக்கூடாது. கூட்ட நடப்பெண் விடயத்தில் ஆளும், எதிரணி உறுப்பினர்கள் பொறுப்பாகச் செயற்படவேண்டும். இனியும் இப்படியான சம்பவம் நடக்க இடமளிக்கக்கூடாது” – என்றார்.

நாடாளுமன்றம் கூடி அதன் நடவடிக்கை இடம்பெறுவதற்கு சபைக்குள் குறைந்தது 20 உறுப்பினர்கள் இருக்கவேண்டும். இதுவே கூட்ட நடப்பெண் எனக் கூறப்படுகின்றது. போதியளவு உறுப்பினர்கள் இல்லாத பட்சத்தில் அழைப்பு மணி ஒலிக்கப்படும். குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் 20 உறுப்பினர்கள் சபைக்குள் இருக்காவிட்டால் அவை ஒத்திவைக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *