வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய இலங்கை அரசு மீது கடும் நடவடிக்கை! – ஐ.நா. அதிரடி அறிவிப்பு

“ஐ.நா. மனித உரிமைகள் சபையில் வழங்கிய உறுதிமொழிகளுக்குச் செயல்வடிவம் கொடுப்பதற்கு இலங்கை தவறியுள்ளது. இது கண்டிக்கப்பட வேண்டியது. இதற்காக இலங்கை மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.”

– இவ்வாறு இலங்கை தொடர்பில் தனது கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கின்றார் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்லே பச்செலெட்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத் தொடர் சுவிஸ் தலைநகரான ஜெனிவாவில் நடைபெற்று வருகின்றது.

இதில் இலங்கை தொடர்பான அறிக்கையை எதிர்வரும் 20 ஆம் திகதியே ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அவையில் உத்தியோகபூர்வமாக சமர்ப்பிக்கவுள்ளார். எனினும், குறித்த அறிக்கை ஆய்வுக்காக இன்று வெளியானது.

அந்த அறிக்கையில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் கூறியுள்ளவை வருமாறு:-

”2015ஆம் ஆண்டில் ஐ.நா. தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கியதன் மூலம் , கடந்தகால சம்பவங்களுக்குத் தீர்வைக் காணவேண்டியதன் அவசியத்தை – கடப்பாட்டை இலங்கை ஏற்றுக்கொண்டது.

எனினும், இதை நிறைவேற்றுவதற்குரிய தீர்க்ககரமான நடவடிக்கைகள் இன்னும் எடுக்கப்படவில்லை. இதனால் கடும் அதிருப்தியடைகின்றோம். எனவே, இலங்கை தொடர்ந்தும் கண்காணிக்கப்படும்.

இலங்கையில் இடம்பெற்ற சித்திரவதைகள், பலவந்தமாக காணாமல் ஆக்கப்படுதல், போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் போன்றவற்றில் ஈடுபட்டவர்களை சர்வதேச சட்டங்களுக்கு உட்படுத்தி விசாரணை செய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்பட்டால் அதனை முன்னெடுக்க வேண்டும்.

நம்பகத்தன்மை மிக்க உள்ளூர் பொறிமுறைகள் காணப்படாத பட்சத்தில் பொறுப்புக் கூறப்படுவதை உறுதி செய்வதற்காக ஏனைய வழிமுறைகளை ஆராய வேண்டும்.

இலங்கையில் மனித உரிமைகள் நிலவரத்தை கண்காணிப்பதற்காக முழுமையான அலுவலகத்தை ஏற்படுத்துவதற்காக இலங்கை மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்துக்கு அழைப்பு விடுக்க வேண்டும்” – என்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *