ஜனநாயகத்துக்குக் கிடைத்த பெருவெற்றி! ஜனாதிபதி இனியாவது திருந்த வேண்டும்!! – சுமந்திரன் எம்.பி. தெரிவிப்பு

“உயர்நீதிமன்றத்தால் இன்று வழங்கப்பட்ட தீர்ப்பானது ஜனநாயகத்துக்கு கிடைக்கப்பெற்ற மாபெரும் வெற்றி. இதன் மூலம் நீதிமன்றம் சுயாதீனமாகச் செயற்படுகின்றது என்பது மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக உயர்நீதிமன்றம் இன்று மாலை தீர்ப்பு வழங்கிய பின்னர், நீதிமன்ற வளாகத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இன்றைய தீர்ப்பானது இலங்கையின் நீதித்துறை வரலாற்றிலேயே உச்சகட்டத்தை அடைந்த தீர்ப்பு. மிகவும் முக்கியமான தீர்ப்பு. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் செயலை சவாலுக்குட்படுத்தி அது தவறானது – சட்டவலுவற்றது – சட்டவிரோதமானது – அரசமைப்புக்கு முரணானது என்று வழங்கப்பட்ட தீர்ப்பு. சட்டத்துக்கு எல்லோரும் சமன் என்றும், சட்டத்தை மீறி ஜனாதிபதியால் கூட எதனையும் செய்ய முடியாது என்பதையும் இன்றைய தீர்ப்பானது எடுத்துக் காட்டுகின்றது.

மக்கள் எதிர்பார்த்த தீர்ப்பே கிடைக்கப் பெற்றுள்ளது. எதிர்வரும் காலத்திலாவது ஜனாதிபதி அரசமைப்புக்கு மதிப்பளித்து சட்டத்தை உணர்ந்து செயற்பட வேண்டும்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *