‘மொட்டு’ச் சின்னத்தைக் கைவிட மஹிந்த, கோட்டா, பஸில் மறுப்பு! – மைத்திரியுடனான நேற்றைய பேச்சும் தோல்வி; சு.க. நாளை தீர்க்கமான முடிவு

ஜனாதிபதித் தேர்தலை தாமரை மொட்டுச் சின்னத்திலும், நாடாளுமன்றத் தேர்தலைப் பொதுச் சின்னத்திலும் எதிர்கொள்வதற்கான யோசனையை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி நேற்று முன்வைத்துள்ளது. எனினும், இதற்கு எந்த இணக்கப்பாட்டையும் மைத்திரி தெரிவிக்கவில்லை.

சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், பொதுஜன முன்னணியின் தலைவர் மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையிலான முக்கியத்துவமிக்க சந்திப்பு நேற்றுப் பிற்பகல் ஜனாதிபதியின் இல்லத்தில் நடைபெற்றது.

பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச, அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச ஆகியோரும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர். சுமார் ஒருமணிநேரம் வரை நீடித்த இந்தக் கலந்துரையாடலின்போது அரசியல் கூட்டணி, சின்னம், பதவிப் பங்கீடு உட்பட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.

ஜனாதிபதித் தேர்தலைப் பொதுச் சின்னத்தின்கீழ் எதிர்கொள்ள முன்வருமாறு இதன்போது பொதுஜன முன்னணிக்கு ஜனாதிபதி மைத்திரி அழைப்பு விடுத்ததுடன், சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் குறித்தும் தெளிவுபடுத்தினார். எனினும், தாமரை மொட்டுச் சின்னத்தை கைவிடுவதற்கு ராஜபக்சக்கள் தரப்பு இணங்கவில்லை.

பெரிய கூட்டணி அமைத்து ஜனாதிபதித் தேர்தலை தாமரை மொட்டுச் சின்னத்திலும், நாடாளுமன்றத் தேர்தலைப் பொதுச் சின்னத்திலும் எதிர்கொள்ளத் தயார் என்று ராஜபக்சக்கள் இதன்போது கூறியுள்ளனர். ஆனால், இதற்கு எந்த இணக்கப்பாட்டையும் மைத்திரி தெரிவிக்கவில்லை. இது தொடர்பில் நாளை திங்கட்கிழமை நடைபெறும் சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் கலந்துரையாடிவிட்டே தமது நிலைப்பாட்டை அறிவிப்பதாக மைத்திரி இதன்போது கூறினார் என அறியமுடிந்தது.

இந்தச் சந்திப்பு தொடர்பில் சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் வீரகுமார திஸாநாயக்கவிடம் வினவியபோது,

“ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்ச தரப்பினருக்கு சு.கவின் நிலைப்பாட்டை பேச்சின் ஆரம்பத்தில் ஜனாதிபதி மைத்திரி தெரிவித்தார். ஆனால், சின்னம் தொடர்பில் இழுபறி தொடர்கின்றது. தாமரை மொட்டுச் சின்னம் வேண்டும் என்பதிலேயே ராஜபக்சக்கள் உறுதியாக இருக்கின்றார்கள். ஆனால், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ‘வெற்றிலை’ சின்னத்தில் அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ‘கை’ சின்னத்தில் அல்லது பொதுச் சின்னத்தில் ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. ஆனால், வெற்றிலை, கை சின்னங்களையோ அல்லது பொதுச்சின்னத்தையோ ஏற்பதில் ராஜபக்சக்கள் பின்னடிக்கின்றார்கள். வெற்றிலை, கை சின்னங்களை ஏற்காவிடின் பொதுச்சின்னத்திலாவது ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்வோம் என்று ராஜபக்ச தரப்பினரிடம் ஜனாதிபதி தெளிவுபடுத்தினார். ஆனால், அவர்கள் அதற்கு இணங்கவில்லை. இந்தநிலையில், ஜனாதிபதித் தேர்தலில் சுதந்திரக் கட்சி தனித்துக் களமிறங்குவதா அல்லது பொதுஜன முன்னணியின் வேட்பாளருக்கு ஆதரவளிப்பதா என்பது குறித்து நாளை திங்கட்கிழமை நடைபெறவுள்ள சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் தீர்க்கமான முடிவொன்று எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. முடிந்தளவு இறுதித் தீர்மானத்தை எடுக்கவே முயற்சிக்கின்றோம்” என்றார்.

மேற்படி சந்திப்பு தொடர்பில் பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்சவிடம் கேட்டபோது, “இன்னமும் இறுதித் தீர்மானத்துக்கு வரவில்லை. சந்திப்பு தொடரும். பொதுஜன முன்னணியின் நிலைப்பாட்டை மைத்திரி தலைமையிலான சுதந்திரக் கட்சி ஏற்கும் என்றே நாம் நம்புகின்றோம்” என்றார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *