காஸா எல்லைக்கு திரும்பிய இஸ்ரேலியர்கள் கண்டது என்ன?

இஸ்ரேலைச் சேர்ந்த அய்லெத் கோன் மற்றும் ஷச்சார் ஷ்னுர்மன், ஆகிய இருவரும் தங்கள் வீட்டில் இந்த மாதம் திராட்சைப்பழங்களை அறுவடை செய்துள்ளனர்.

இது கேட்பதற்கு சாதாரணமாக தோன்றலாம். அவர்கள் வசிக்கும் பகுதி கடந்த வருடம் ஹமாஸ் தாக்குதலால் சேதமடைந்தது, எரிந்து கிடக்கும் அண்டை வீடுகளுக்கு நடுவே அவர்கள் இந்த அறுவடையைச் செய்துள்ளனர்.

இஸ்ரேலின் கஃபர் அஸாவில் உள்ள அவர்களது வீட்டில், வாராந்திர பார்பிக்யூ பார்ட்டிகளுக்காக பிளாஸ்டிக் பாட்டில்களில் சேமிக்கப்படுகிறது இந்த திராட்சைச் சாறு. ராணுவ வீரர்கள் மட்டுமே அவர்களின் விருந்தினர்கள்.

காஸாவிலிருந்து 2 கிமீ (1.2 மைல்) தொலைவில் உள்ள கஃபர் அஸா, அக்டோபர் 7 அன்று ஹமாஸ் ஆயுதக்குழுவால் குறிவைக்கப்பட்ட இடங்களில் ஒன்றாகும். ஹமாஸின் இந்த தாக்குதலில் தெற்கு இஸ்ரேலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர், மேலும் 240க்கும் மேற்பட்டோர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர்.

அடுத்தடுத்த நாட்களில், இஸ்ரேலின் பிற பகுதிகளின் ஹோட்டல்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

  • காஸா எல்லைக்கு திரும்ப விரும்பும் இஸ்ரேலியர்கள்
ராணுவ வீரர்கள், நன்கொடையாளர்கள், பத்திரிகையாளர்கள், மனிதாபிமான அமைப்புகளின் உறுப்பினர்கள் கஃபர் அஸா கிராமத்திற்கு வருகிறார்கள்

ஆளில்லாத இஸ்ரேலிய கிராமங்கள்

வெளியேறிய மக்களில், அய்லெத் கோன் மற்றும் ஷச்சார் ஷ்னுர்மன் ஆகிய இருவர் மட்டுமே தங்கள் வீடுகளுக்கு திரும்பி வந்தவர்கள்.

“மாலையில், இங்கு மிகவும் தனிமையாக இருக்கிறது,” அய்லெத் கூறுகிறார். “மக்கள் சாலையில் நடந்து செல்வதையும், நம்மைப் பார்த்து ஹலோ சொல்வதையும் வழக்கமாக பார்க்கலாம். இப்போது எல்லாம் மாறிவிட்டது, இங்கு யாரும் இல்லை.” என்கிறார் அவர்.

பகல் நேரத்தில், ராணுவ வீரர்கள், நன்கொடையாளர்கள், பத்திரிகையாளர்கள், மனிதாபிமான அமைப்புகளின் உறுப்பினர்கள் இந்த கிராமத்திற்கு வருகிறார்கள்.

கஃபர் அஸா ஒரு வகையான அருங்காட்சியகமாக மாறிவிட்டது. அதன் எரிந்த மற்றும் உடைந்த வீடுகள் ஆளில்லாமல் கிடக்கின்றன, அவற்றின் வாசல்கள் கயிறுகளால் தடுக்கப்பட்டுள்ளன, இடிபாடுகள் மற்றும் பொருட்கள் தரையில் சிதறிக்கிடக்கின்றன.

கிராமத்திற்கு வந்த வெவ்வேறு குழுக்கள் வெளியேறிய பிறகு, ​​தம்பதிகள் தங்கள் வராண்டாவில் அமர்ந்தனர். இஸ்ரேலிய இராணுவ ட்ரோன்களின் சிணுங்கல் மற்றும் வெளியேறும் பீரங்கிகளின் வழக்கமான சத்தம் மட்டுமே அங்கே கேட்டது. காலியான வீடுகளோடு இருள் சூழப்பட்டு நிற்கிறது கிராமம்.

எதிரே உள்ள வீட்டையும், சாலையின் மற்றொரு பகுதியில் உள்ள ஒரு வீட்டையும் சுட்டிக்காட்டுகிறார் அய்லெத்.

“எங்கள் பக்கத்து வீட்டுக்காரர், மிகவும் நல்ல நண்பராக இருந்தவர், ஆனால் அவரை கொலை செய்துவிட்டனர்,” என்று அவர் கூறுகிறார். “இது மற்ற அனைவருக்கும் இங்கு நடந்ததைப் பற்றிய ஒரு நினைவூட்டலாக இருக்கும்.” என்கிறார்.

அக்டோபர் 7 அன்று ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து, இங்கு வசித்த பலரால் இன்னும் வெளியே வர முடியவில்லை. காஸாவில் நடந்து கொண்டிருக்கும் போர், அந்த தாக்குதல்களால் தூண்டிவிடப்பட்டது.

காஸாவின் பெய்த் ஹனோன் போன்ற இடங்களில் ஏற்பட்டுள்ள அழிவை இந்த கிராமத்தின் எல்லையிலிருந்து பார்க்கும் அளவுக்கு நெருக்கமாக உள்ளது இந்தப் பகுதி.

  • காஸா எல்லைக்கு திரும்ப விரும்பும் இஸ்ரேலியர்கள்
போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு மறுப்பு தெரிவிக்கும் இஸ்ரேல்

நாட்டின் இடம்பெயர்ந்த சமூகங்களின் செலவுகள், அரசியல் மற்றும் நிதி ரீதியாக மாதந்தோறும் அதிகரித்து வருவதால், மீண்டும் தங்கள் வீடுகளுக்கு திரும்பும் வகையில் அவர்களின் பாதுகாப்பு உணர்வை எவ்வாறு மீட்டெடுப்பது என்பது இஸ்ரேலிய பிரதமரின் சவாலாகும்.

தாக்குதல்களுக்குப் பிறகு, 200,000 மக்கள் இஸ்ரேலின் எல்லைப் பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர், காஸாவின் தெற்கு எல்லை மற்றும் லெபனானின் வடக்கு எல்லை ஆகிய இரண்டு எல்லையிலிருந்தும். ஹமாஸுக்கு ஆதரவாக இரான் ஆதரவுக் குழுவான ஹெஸ்பொலா, இஸ்ரேலியப் படைகளுடன் இந்த பகுதிகளில் போரில் ஈடுபட்டுள்ளது.

பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இஸ்ரேலை அதன் எதிரிகளிடமிருந்து பாதுகாக்கும் ஒரு வலிமையான தலைவராக, தனது அரசியல் வாழ்க்கையை வடிவமைத்தார். ஆனால் காலியான எல்லைப் பகுதிகள், அவர் மக்களை பாதுகாக்கத் தவறியதை தினமும் நினைவூட்டுகின்றன.

“நாங்கள் ஏமாந்து விட்டோம் என்று தான் சொல்ல வேண்டும்,” என்று அய்லெத் கூறுகிறார். “அவர்கள் சொல்வது பொய் எனத் தெரிந்தும், அதை நாங்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டோம்.” என்கிறார்.

போர் முடிந்த பிறகு, ஏதாவது மாற்ற வர வேண்டும் என்று அவர் சொல்கிறார்.

“ராணுவம் ஒழுங்கமைக்கப்பட்ட விதம், பாலத்தீனியர்களை அரசாங்கம் அணுகிய விதம், இந்த போர்ச் சூழலை முழு உலகமும் அணுகும் விதம், என நிறைய மாற வேண்டும்.”

காஸாவில் “முழு வெற்றி” மற்றும் ஹமாஸை முழுமையாக அழிப்பது மட்டுமே எதிர்காலத்தில் இஸ்ரேலுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் என்று நெதன்யாகு வலியுறுத்தியுள்ளார்.

ஆனால் வெற்றி அவ்வளவு எளிதில்லை. ஹமாஸின் சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, இந்தப் போரில் கிட்டத்தட்ட 30,000 காஸா மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் காஸா மக்களின் துன்பங்களைத் தணிக்கவும், ஹமாஸால் சிறைப்படுத்தப்பட்டிருக்கும் 100க்கும் மேற்பட்ட பணயக்கைதிகளை விடுவிக்கவும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை அறிவிக்க பிரதமருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.

ஆனால் இதுவரை அதற்கு பிரதமர் ஒப்புக்கொள்ளவில்லை.

“இஸ்ரேலுக்கு எதிரிகளே இருக்கக்கூடாது என்பது சாத்தியமில்லை. ஹமாஸ் இல்லாவிட்டால், ஹமாஸைப் போல் வேறு ஒரு குழு இருக்கும், அதனால் எனக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லை.” என்று அய்லெத் கூறுகிறார்.

பணயக்கைதிகளுக்கு ஆதரவாக, இந்த தம்பதியினர் தங்கள் வராண்டாவில் ஒரு பெரிய கருப்புக் கொடியைத் தொங்கவிட்டுள்ளனர். பணயக்கைதிகளில் 19 பேர் கஃபர் அஸாவைச் சேர்ந்தவர்கள்.

“கடத்தப்பட்டவர்கள் காஸாவிலிருந்து வீட்டிற்கு திரும்ப வர வேண்டும்” அய்லெட் கூறுகிறார். “அதற்கு ஒரு ஒப்பந்தம் வேண்டும். அவர்கள் போரை நிறுத்த வேண்டும்” என்கிறார்.

காஸாவில் ஒரு தெளிவான திட்டமில்லாமல் போர் தொடரும் நிலையில், இஸ்ரேலின் வடக்கு எல்லையில் மக்களுக்கான பாதுகாப்பை எவ்வாறு உறுதிசெய்வது என்ற கேள்வி இப்போது அதிகமாக எழுகிறது.

  • ஹெஸ்பொல்லாவுடனான போர்
காஸா எல்லைக்கு திரும்ப விரும்பும் இஸ்ரேலியர்கள்

காஸா எல்லையில் இருந்து 200 கிமீ (120 மைல்கள்) தொலைவில், கலிலீ கடற்கரையில் உள்ள ஒரு சுற்றுலா விடுதியில் தங்கியிருக்கும் மைக்கேல் பிஹா, இஸ்ரேலின் எல்லைச் சமூகங்களில் ஏதாவது மாற்றம் தேவை என்பதை ஒப்புக்கொள்கிறார்.

“ஒருவேளை மக்களை வெளியேற்றியது மிகப்பெரிய தவறாக இருக்கலாம்” என்று அவர் கூறுகிறார். “இப்போது வீடுகளுக்கு திரும்பிச் செல்ல முடியாது என்பதை மக்கள் உணர்கிறார்கள்” என்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர், “இதுவரை எங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக எல்லை இருந்தது. சில நேரங்களில் அங்கே அமைதி நிலவும், சில நேரங்களில் பதற்றமாக இருக்கும். நாங்கள் அதற்குப் பழகிவிட்டோம்,” என்று விளக்கினார்.

“ஆனால் இனியும் பெய்ரூட்டில் இருந்து யார் எப்போது துப்பாக்கியால் சுடுவார்கள் என்ற பயத்தில் வாழ முடியாது” என்கிறார் மைக்கேல்.

லெபனான் எல்லையில் இருந்து 3 கிமீ (1.9 மைல்) தொலைவில் உள்ள மலைவாழ் சமூகமான கிப்புட்ஸ் சாஸாவிலிருந்து வெளியேற்றப்பட்ட 400 குடியிருப்பாளர்களில் மைக்கேலும் ஒருவர்.

அங்குள்ள பள்ளி ஒரு ஹெஸ்பொலா ஏவுகணையால் நேரடியாக தாக்கப்பட்டது என்றும், அதிர்ஷ்டவசமாக பள்ளி மூடப்பட்டு மாணவர்கள் வெளியேறிய பிறகு இது நடந்தது என்றும் கூறினார் மைக்கேல்.

கடந்த நான்கு மாதங்களாக, சிறிய விடுதிக் குடிசைகளில் வெளியேற்றப்பட்ட குடியிருப்பாளர்கள் வசித்து வருகின்றனர். ஆனால் இந்தப் பகுதியின் குளிர்கால மழைக்கும் மற்றும் வெளிறிய மூடுபனிக்கும் இக்குடிசைகள் ஏற்றவை அல்ல.

ஒரு மருத்துவமனையுடன் கூடிய கிப்புட்ஸ் பள்ளியும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. சாஸாவில் சமைக்கப்பட்ட உணவு தினமும் இங்கு கொண்டுவரப்படுகிறது, இது இங்குள்ளவர்களுக்கு ஒரு ஆறுதலை அளிக்கும் என்பதால்.

குடியிருப்பாளர்கள் ஜூன் மாத இறுதியில் வீடுகளுக்கு திரும்ப முடியும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் அது எப்படி நடக்கும் என்று யாருக்கும் தெரியவில்லை.

எல்லையில் நிலைமை மோசமடைந்து வருகிறது, இஸ்ரேலின் இராணுவம் மற்றும் அரசியல்வாதிகள் ‘இராஜதந்திர அவகாசம்’ முடிந்துவிட்டதாக எச்சரித்துள்ளனர்.

சர்வதேச மத்தியஸ்தம் பலனைத் தரவில்லை என்றால், இராணுவப் பலத்தைப் பயன்படுத்தி எல்லையின் லெபனான் பக்கத்திலிருந்து ஹெஸ்பொல்லாவைத் தாக்கி பின்வாங்கச் செய்வோம் என அவர்கள் தெளிவாக தெரிவிக்கின்றனர்.

பிரதமர் நெதன்யாகு காஸாவில் இராணுவ நடவடிக்கைகளில் உறுதியாக இருப்பதாகத் தோன்றினாலும், இங்கு வடக்கில், ஹெஸ்பொலாவுடன் போர் என்பது ஒரு கடைசி முயற்சியாக தான் இருக்கும்.

ஹமாஸுடன் ஒப்பிடுகையில் சிறந்த ஆயுதங்களையும் சிறந்த பயிற்சிகளையும் பெற்ற ஹெஸ்பொலா ஒரு வித்தியாசமான எதிரி. எனவே இது வேறு வகையான போராக இருக்கும்.

நாட்டின் வடக்குப் பகுதிகளிலிருந்து இன்னும் பலர் வெளியேற்றப்படுவதால் இஸ்ரேலுக்கான செலவுகள் மிக அதிகமாக இருக்கும். ஆனால் இஸ்ரேலின் எல்லைகளில் மக்களை மீண்டும் குடியமர்த்துவதற்கான அழுத்தம் அதிகரித்து வருகிறது.

“அவர் அதை எப்படி செய்வார் என்பது குறித்து எனக்கு கவலையில்லை. ஆனால் இந்த நிலைமை ஒரு தெளிவான முறையில் முடிவடைய வேண்டும். இதனால் நாம் சாதாரண சூழ்நிலையில் பாதுகாப்பாக வாழ முடியும், எல்லையில் ஏவுகணைகள் இல்லாமல்” என்கிறார் மைக்கேல் பிஹா.

  • காஸா எல்லைக்கு திரும்ப விரும்பும் இஸ்ரேலியர்கள்
வீடுகளுக்கு திரும்ப விரும்பும் இஸ்ரேலியர்கள்

காஸா எல்லையில் உள்ள தெற்கு சமூகங்களில், ஒரு சிலர் வீடுகளுக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர்.

இஸ்ரேலின் கிப்புட்ஸ் இயக்கத்தின் தலைவரான நிர் மீர், இஸ்ரேலின் ஹாரெட்ஸ் செய்தித்தாளிடம், “கிப்புட்ஸ் ஆர் ஹானர் பகுதிக்கு மாத இறுதியில் மக்கள் திரும்பி வருவார்கள் என்றும், இதற்காக பல தரப்பட்ட மக்களிடமிருந்தும் தொடர்ந்து பெருமளவில் விண்ணப்பங்கள் வருவதாகவும்” கூறினார்.

கிப்புட்ஸ் பீரியில், இடிபாடுகள் மற்றும் சேதமடைந்த வீடுகளை அகற்றத் தொடங்கியுள்ளனர். மீண்டும் வீடுகள் கட்டுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

மேலும் கஃபர் அஸாவில், தங்கள் அண்டை வீட்டார் அவ்வப்போது வந்து உடமைகளை சேகரித்துச் செல்வதையும், வீடுகளுக்கு ஏற்பட்ட சேதங்களை ஆய்வு செய்வதையும் அய்லெத் மற்றும் ஷச்சார் காண்கின்றனர்.

“வாரத்திற்கு ஒரு முறை சிவப்பு எச்சரிக்கை சைரனையும், மாதத்திற்கு ஒரு முறை ஏவுகணைத் தாக்குதலையும் பொறுத்து கொள்வதற்கு ஈடாக இந்தச் சமூகங்கள் குறைந்த விலையில் சிறந்த வாழ்க்கைத் தரத்தை வழங்கின” என்று நிர் மீர் கூறினார். “இப்போது ஆபத்து அதிகரித்துள்ளது, மக்கள் படுகொலைக்கான வாய்ப்பும் உள்ளது” என்கிறார்.

“ராணுவம் ஒரு பாடத்தைக் கற்றுக்கொண்டது என்று நாங்கள் நம்புகிறோம், இனியாவது இந்த பகுதிக்கும் காஸாவிற்கும் இடையில் ஒரு சில வீரர்களை நிறுத்தி வைப்பார்கள்” என ஷச்சார் கூறுகிறார்.

“சில மாதங்களில் நிலைமை எப்படி மாறும் என்று யாருக்குத் தெரியும், ஆனால் இப்போதைக்கு எங்களுக்கும் காஸாவிற்கும் இடையில் 10,000 வீரர்கள் உள்ளனர். இது இஸ்ரேலில் மிகவும் பாதுகாப்பான இடம்” என்று கூறுகிறார் ஷச்சார்.

 பிபிசி தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *