அபுதாபியில் மோதி திறந்து வைக்கும் பிரம்மாண்ட இந்து கோவில் – மக்கள் என்ன நினைக்கிறார்கள்?
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் முதல் இந்து கோவில் பக்தர்களுக்காக விரைவில் திறக்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோதி தனது இரண்டு நாள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பயணத்தின் போது, பிப்ரவரி 14 அன்று அபுதாபியில் கட்டப்பட்டுள்ள இந்து கோவிலைத் திறந்து வைக்கிறார்.
இந்தக் கோவிலின் தனிச்சிறப்புகள் என்ன, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் இதைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள பிபிசி குழு இந்த கோவிலுக்குச் சென்றது.
சுமார் 800 கோடி ரூபாய் செலவில் 26 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது. 2019இல் இந்த கோவிலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்த கோவிலின் கட்டுமானத்தில் வெள்ளை பளிங்கு கற்கள் மற்றும் இளஞ்சிவப்பு மணற்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. கோவிலின் சுவர்களில் உள்ள அழகிய சிற்பங்கள் ராமாயணம், சிவபுராணம் மற்றும் ஜகன்னாதர் யாத்திரையின் கதைகளைச் சித்தரிக்கின்றன. கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் இடமும் இந்த கோவிலில் சித்தரிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கோவிலில் பூஜை மற்றும் சடங்குகளுக்கான பிரத்யேக வசதிகள் மட்டுமல்லாது மேலும் பல சிறப்பம்சங்கள் உள்ளன. உதாரணமாக, கோவிலின் ஒரு பகுதியில், வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற படித்துறைகளைப் போன்ற ஒரு இடம் கட்டப்பட்டுள்ளது.
இந்த கோவிலின் ஏழு கோபுரங்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஏழு எமிரேட்டுகளை குறிக்கின்றன. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் இந்த கோவிலுக்கான நிலத்தை நன்கொடையாக அளித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோதி பிப்ரவரி 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் செல்கிறார். பிப்ரவரி 14 அன்று போச்சசன்வாசி அக்ஷர் புருஷோத்தம் ஸ்வாமிநாராயண் சன்ஸ்தா அல்லது BAPS எனப்படும் இந்து சமயப் பிரிவால் கட்டப்பட்டுள்ள இந்த கோவிலை பிரதமர் மோதி திறந்து வைக்கிறார்.
“துபாயில் ஒரு இந்து கோவில் இருந்தது, அதற்கு நாங்கள் செல்வோம். ஆனால் அது இப்போது மூடப்பட்டுள்ளது. இதனால் சற்று வருத்தத்தில் இருந்தோம். ஆனால் இவ்வளவு பெரிய ஒரு இந்து கோவில் இங்கு திறக்கப்படுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது” என்று கூறுகிறார் அபுதாபியில் வசிக்கும் இந்திய வம்சாவளி பெண்ணான ஜஸ்ரின் குஜரால்.
மேலும், “அபுதாபிக்கு வந்தால், இங்கிருக்கும் பிரம்மாண்டமான மசூதிகளுக்கும் நாங்கள் குடும்பத்தோடு செல்வோம். இப்போது செல்வதற்கு இந்த கோவிலும் உள்ளது. எனவே இந்த கோவில் எப்போது திறக்கப்படும் என நாங்கள் ஆர்வமாக காத்திருக்கிறேன்” என்கிறார் ஜஸ்ரின் குஜரால்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சஞ்சய் ஆச்சார்யா நம்மிடம் பேசுகையில், “ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஒரு இந்து கோவில் திறக்கப்படுவது மிகவும் நல்ல விஷயம். கோவில் திறப்பு விழாவை எதிர்நோக்கி காத்திருக்கிறோம்” என்றார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நிலவும் கடுமையான வெப்பத்தின் போது கூட பக்தர்கள் இந்த கோயிலுக்கு வசதியாக வந்து செல்லக்கூடிய வகையில் கோவிலின் தளம் மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது.
போச்சசன்வாசி அக்ஷர் புருஷோத்தம் ஸ்வாமிநாராயண் சன்ஸ்தா பிரிவின் உறுப்பினர் மற்றும் அர்ச்சகர் பிரஹாம் பிஹாரி தாஸ் பேசுகையில், “பண்டைய கால கட்டடக்கலையைப் பயன்படுத்தி இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது. நாங்கள் இங்கு எஃகு (Steel) பயன்படுத்தவில்லை” என்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், “தரையில் பதிக்கப்பட்டிருக்கும் கற்களின் ஒவ்வொரு பிரிவிலும், தளத்திலும் மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளோம். அதில் சென்சார்களைப் பதித்துள்ளோம். எனவே மக்களின் நடமாட்டம் மற்றும் இந்த பகுதியின் வெப்பநிலையில் ஏற்படும் மாற்றம் குறித்த நேரடித் தரவுகளை எங்களால் பெற முடியும்” என்கிறார்.
3டி சிமெண்ட் அச்சு முறையில் பாரம்பரிய கைவினைத்திறன் மூலம் உருவாக்கப்பட்ட நல்லிணக்க மண்டபமும் இந்த கோவிலில் அமைந்துள்ளதாக கூறுகிறார் அர்ச்சகர் பிரஹாம் பிஹாரி தாஸ்.
இந்த கோவிலில் இன்னும் சில கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது. லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகளும் பக்தர்களும் அபுதாபியின் இந்து கோவிலுக்கு வருவார்கள் என்று நம்பப்படுகிறது.
சுற்றுலாப் பயணிகளின் விருப்பமான இடமாக இக்கோயில் இருக்கும் என்பதைத் தாண்டி, அன்பு மற்றும் நல்லிணக்கத்தை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்டிருக்கும் இந்தக் கோயில் இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் என்று நம்பப்படுகிறது.
இது குறித்து பேசிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதர் அல்ஷாலி, “இந்தியப் பிரதமர் மோதியின் பயணம், கோவில் திறப்பு விழா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடனான மோதியின் சந்திப்பு என இந்நிகழ்வுகள் நேர்மறையாகவும் ஆக்கப்பூர்வமாகவும் அமையும்” என்று கூறியுள்ளார்.
அபுதாபியில் கட்டப்பட்டுள்ள கோவில் அரபு உலகின் முதல் இந்து கோவில் அல்ல. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (யுஏஇ) மட்டுமின்றி ஓமன் மற்றும் பஹ்ரைனிலும் பல தசாப்தங்களாக கோவில்கள் உள்ளன.
பஹ்ரைன் தலைநகர் மனாமாவில் கட்டப்பட்ட ஸ்ரீநாத்ஜியின் கோவில் ஒரு நூற்றாண்டுக்கும் மேலான பழமையானது. இது இந்தியப் பிரிவினைக்கு பல ஆண்டுகளுக்கு முன்பு தட்டாவில் இருந்து வந்த சிந்தி இந்து சமூகத்தால் கட்டப்பட்டது.
அண்டை நாடான சௌதி அரேபியாவில் வசிக்கும் இந்துக்களும் புனித நிகழ்வுகளில் இந்த கோவிலுக்கு வந்து வழிபடுகிறார்கள்.
ஓமன் நாட்டின் தலைநகரான மஸ்கட்டில் இரண்டு இந்து கோவில்கள் உள்ளன. அதில் ஒன்று மோத்தீஸ்வர் கோவில். இது பழைய மஸ்கட்டின் முத்ரா பகுதியில் அமைந்துள்ளது.
மத்திய கிழக்கில் உள்ள மிகப் பழமையான இந்து கோவில்களில் மோத்தீஸ்வர் கோவில் ஒன்றாகும். இது 125 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என்று நம்பப்படுகிறது.
மஸ்கட்டின் ரூவியில் கிருஷ்ணா-விஷ்ணு கோவில் உள்ளது. 150 ஆண்டுகள் பழமையானது என கூறப்படுகிறது. ஓமனில் குடியேறிய குஜராத்தி சமூகத்தின் நட்பின் அடையாளமாக ஓமன் சுல்தானால் இந்தக் கோவில் கட்டப்பட்டது.
துபாயின் செழிப்பான இந்திய சமூகம், அனைத்து முக்கிய மதங்களையும் உள்ளடக்கியது. பல தசாப்தங்களாக இந்தச் மக்களுக்கான வழிபாட்டுத் தலங்கள் இருக்கின்றன.
ஆன்மிக விழாக்கள், திருவிழாக்கள் மற்றும் பிற நிகழ்ச்சிகள் கோவில்களில் மட்டுமே ஏற்பாடு செய்யப்படுகின்றன. துபாயிலும் அதைச் சுற்றியுள்ள சில நகரங்களிலும், வளைகுடாவின் பிற பகுதிகளிலும், தீபாவளி இரவு நேரம், இந்தியாவில் இருப்பதைப் போலவே ஒளிரும்.
பிபிசி தமிழ்