பூமியில் உருவாகும் புதிய பெருங்கடல் – அதிர்ச்சியளிக்கும் தகவல்

உலகின் புதிய பெருங்கடல் ஒன்று பூமியில் உருவாகி வருகிறது. முன்னர் இதன் உருவாவதற்கு 50 லட்சம் முதல் ஒரு கோடி ஆண்டுகள் வரை எடுக்கும் என்று நம்பப்பட்டது. ஆனால், புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் இது எதிர்பார்த்ததை விட விரைவாக நடக்கக்கூடும் என்று கூறுகிறது.

“சுமார் 10 லட்சம் ஆண்டுகளிலேயே இது நடந்துவிடலாம். ஏன் அதிலும் பாதி நாட்களில் கூட நடக்கலாம்” என்று புவி அறிவியல் படிப்பாளர் சிந்தியா எபிங்கர் பிபிசி பிரேசிலிடம் தெரிவித்துள்ளார்.

சிந்தியா எபிர்ங்கர், அமெரிக்காவில் உள்ள துலேன் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளராக உள்ளார், 1980 முதலே இந்தத் துறையில் ஆய்வு செய்து வரும், குறிப்பிடத்தகுந்த ஆராய்ச்சியாளராக அவர் உள்ளார்.

  • பெருங்கடல்

புதிய பெருங்கடல் எங்கே உருவாகும்?

அரேபியா, ஆப்பிரிக்கா (நுபியன் என்றும் அழைக்கப்படுகிறது) மற்றும் சோமாலியன் ஆகிய மூன்று கண்டத் தகடுகளின் எல்லைகளில் அமைந்துள்ள பகுதியை அஃபார் என அழைக்கிறார்கள். இந்தப் பகுதியில்தான் புதிய கடல் உருவாகிறது.

சிந்தியா எபிங்கர் தன்னுடைய ஆராய்ச்சியில் முதலில் கிழக்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் எல்லா தீப்பாறைகளும் ஒரே ஒரு இடத்திலிருந்து தான் எழுகின்றன என்று கண்டறிந்தார். அந்த இடம் “வெப்ப புள்ளி” (hot spot) எனப்படுகிறது.

அதாவது பூமியின் அடியில் சில இடங்களில் வெப்பமாக இருக்கும். அந்த இடங்களிலிருந்து தான் தீப்பாறைகள் மேலே எழும்பும். கிழக்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் எல்லா தீப்பாறைகளும் ஒரே மாதிரியாக இருப்பதால், அவை எல்லாம் ஒரே ஒரு “வெப்ப புள்ளி”ல இருந்து வந்தவை என்று அவரது ஆய்வுக் கட்டுரை கூறியது.

1998 ஆம் ஆண்டில், நேச்சர் இதழில் வெளியான அவருடைய கட்டுரை, அறிவியல் வட்டாரங்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. பிற ஆய்வாளர்களால் 900க்கும் மேற்பட்ட முறை மேற்கோள் காட்டப்பட்டது.

  • பூமியில் உருவாகும் பெருங்கடல்

டெக்டோனிக் தகடுகளில் உருவாகிவரும் பிளவு

எத்தியோப்பிய மலைப்பகுதியில் எரிமலைக் குழம்பு எப்படி செயல்படுகிறது என்று ஆராய்ச்சி செய்யப்பட்டது. அந்த ஆராய்ச்சிக்கு பயன்படுத்திய மாதிரியை கிழக்கு ஆப்பிரிக்கா முழுவதும் நடக்கிற எரிமலை செயல்பாட்டுக்கும் பயன்படுத்தலாம் என்று அவரது ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

கிழக்கு ஆப்பிரிக்காவில் கடந்த 4.5 கோடி ஆண்டுகளாகவே இந்த எரிமலை செயல்பாடு நடந்துக் கொண்டிருக்கிறது. எத்தியோப்பிய உயர்நிலங்கள் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவில் தான் எரிமலைக் குழம்பு அதிக அளவு இருக்கின்றன என்று இந்த ஆய்வு கண்டறிந்தது.

செங்கடல், ஏடன் வளைகுடா, கிழக்கு ஆப்பிரிக்காவின் பிளவு பள்ளத்தாக்குகள் என கிட்டத்தட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிலோமீட்டர் தூரத்துக்கு இந்த எரிமலை குழம்புகள் இருக்கின்றன.

“எத்தியோப்பியாவில் நிலத்துக்கு அடியில் இருக்கும் சின்ன எரிமலை, உப்புநீர்ன் ஓடுவதை தடுத்து வருகிறது” என்று எபிங்கர் கூறுகிறார்.

எனவே மூன்று டெக்டோனிக் தகடுகள் – கிழக்கே உள்ள சோமாலியன், மிக பரந்துப்பட்ட ஆப்பிரிக்கன் (அல்லது நுபியன்), மற்றும் வடகிழக்கே உள்ள அரேபியன் – ஒரு சிறிய தகடு, விக்டோரியானாவை அழுத்துகின்றன. இந்த தகட்டில் உள்ள பிளவு அதிகரிக்கும்போது, சோமாலிய தகட்டின் ஒரு பகுதி இந்தியப் பெருங்கடலை நோக்கி உடைந்து, புதிய பெருங்கடலுக்கான வழியை ஏற்படுத்தும் என்பதே அவரின் எதிர்பார்ப்பு.

ஆப்பிரிக்காவில் உருவாகும் புதிய கடல்
  • நகர்ந்துகொண்டிருக்கும் நிலப்பகுதி

அதாவது “உண்மையில், ஒரு புதிய கடலாக இருக்காது. இருப்பினும் நாம் பொதுவாக அதை அப்படி தான் அழைக்கிறோம்” என்று எபிங்கர் விளக்குகிறார். மேலும் “அதை சிவப்பு கடலின் ஒரு விரிவாக்கமாக நினைத்துக் கொள்ளுங்கள்.” என்றார். மூன்று டெக்டோனிக் தகடுகள் வெவ்வேறு வேகத்தில் நகரும்.

அரேபியா ஆண்டுக்கு 2.5 சென்டிமீட்டர் வேகத்தில் ஆப்பிரிக்காவிலிருந்து விலகிச் செல்கிறது. மற்ற இரண்டு தகடுகள், தலா ஒவ்வொன்றும் அரை சென்டிமீட்டர் வேகத்தில் விலகிச் சென்று வருகின்றன. இப்படி மெதுவாக நகர்வதன் காரணமாக, சிவப்பு கடலிலிருந்தும் ஏடன் வளைகுடாவிலிருந்தும் வரும் உப்புக் கடல் நீர் ஆப்பிரிக்க கண்டத்தை இரண்டாக பிரிக்கும்.

இந்த கோட்பாட்டிற்கான முக்கிய ஆதாரமாக இருப்பது 2005 ஆம் ஆண்டில் நடந்த ஒரு மிகப்பெரிய நிகழ்வாகும். அந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்தில், எத்தியோப்பியாவில் உள்ள ஒரு பாலைவனப் பகுதியில் 420 நிலநடுக்கங்கள் நிலத்தை உலுக்கின. எரிமலை வெடிப்புகள் , சாம்பலை காற்றில் பரப்பியது.

பூமியின் மிகவும் கடினமான இடங்களில் ஒன்றான, அஃபார் பகுதியில் 60 கிலோமீட்டர் நீளமுள்ள பிளவு திறக்கப்பட்டது. பிளவு பள்ளத்தாக்கு என்பது பூமியின் டெக்டோனிக் தகடுகள் நகரும்போது உருவாகும் ஒரு நீண்ட, குறுகிய பள்ளத்தாக்கு ஆகும். இது எரிமலை செயல்பாடு மற்றும் நிலநடுக்கத்துடன் தொடர்புடையது.

பூமியில் உருவாகும் புதிய பெருங்கடல்

உருவாகும் புதிய மலைகள்

எத்தியோப்பியாவில் உள்ள அடிஸ் அபாபா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த புவி இயற்பியலாளர் அடாலே அயேல் தலைமையில் 2009 -ல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு, எரிமலைக் குழம்பின் மூன்று மூலங்களை அடையாளம் கண்டறிந்தது. அவை தபாஹு-காப்’ஹோ மற்றும் அடோ’அலே எரிமலைப் பகுதிகளில் ஏற்பட்ட நிகழ்வுக்கு காரணமானவை. இந்த மூலங்களில், மிகப்பெரிய பகுதியிலிருந்து எரிமலைக் குழம்பு பாய்ந்ததாகக் கண்டறியப்பட்டது.

ஜியோபிசிகல் ரிசர்ச் லெட்டர்ஸ் என்ற அறிவியல் இதழில் அயேல் வெளியிட்ட கட்டுரையில், இந்தப் பகுதியில் எரிமலை வெடிப்பு மற்றும் நிலநடுக்கம் காரணமாக, படிப்படியாக ஒரு புதிய கடல் உருவாகும் என்று கூறுகிறார்.

பிபிசி பிரேசில் மின்னஞ்சல் மூலம், அயேலின் ஆய்வு குறித்து அனுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், “பல பிளவுகள் ஏற்கனவே நடந்து கொண்டிருக்கின்றன. ஆப்பிரிக்க தட்டு வடக்கு நோக்கி நகர்ந்து யூரேசிய தட்டுடன் மோதி, ஆல்ப்ஸில் மலைகளை உருவாக்குகிறது” என்று தெளிவுபடுத்தினார். இருப்பினும், இந்த முழு புவியியல் நடவடிக்கையும் அடுத்த சில நூற்றாண்டுகளில் அல்லது சில ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் நடக்காது.

“நிலநடுக்க வரைபடம் ஒரு கடல் உருவாகி வருவதைக் காட்டுகிறது, ஆனால் அதற்கு லட்சக்கணக்கான ஆண்டுகள் ஆகும்” என்று அயேல் தெரிவித்தார்.

  • ஆப்பிரிக்காவில் உருவாகும் புதிய கடல்

எதிர்பார்த்ததை விடவும் வேகமாக நடக்கிறது

கடந்த மாதம், டெக்னோபிசிக்ஸ் இதழில் ஒன்பது விஞ்ஞானிகள் சேர்ந்து ஆய்வுக் கட்டுரை வெளியானது. அந்த குழுவில் அயேலும் எபிங்கரும் பங்காற்றியிருந்தனர். இந்த பகுதியில் நிகழும் புவியியல் நடவடிக்கைகளின் 3D மாதிரியை அந்த ஆய்வு வழங்கியது.

இந்த ஆய்வின் முடிவில், இந்தப் பகுதியில் புதியதாக அதிக அளவிலான எரிமலைப் பாறைகள் உருவாகி வருகின்றன என்றும் அஃபார் தாழ்வாரத்தின் கீழ் உள்ள நிலப்பரப்பு மிகவும் மெல்லியதாக இருப்பதையும், 25 கிலோமீட்டருக்கும் குறைவான தடிமன் கொண்டதாகவும் தெரிய வந்துள்ளது.

“இந்த வடிவங்கள், அஃபார் தாழ்வாரத்தில் கடல் தளம் பரவ ஆரம்பித்திருப்பதற்கான ஒரு குறுகிய மண்டலத்தை சுட்டிக்காட்டுகின்றன” என்று ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆய்வில் கூறுகின்றனர் .

இப்போது செங்கடலின் நீரிலிருந்து புதிய கடல் உருவாக 10 லட்சத்துக்கும் குறைவான ஆண்டுகள் ஆகும் என்று சிந்தியா எபிங்கர் மதிப்பிடுகிறார்.

“ஆனால் அதை மேலும் துரிதப்படுத்தும் ஒரு பெரிய நிலநடுக்கமும் ஏற்படலாம்” என்று அவர் கூறுகிறார்.

“நிலநடுக்கங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகள் போன்ற நிகழ்வுகளை துல்லியமாக கணிக்க முடியாததே தற்போதைய அறிவியலின் சிக்கல்.”

எத்தியோபிய பாலைவனத்தில் உருவாகியுள்ள பெரிய பிளவைப் பற்றிய ஆராய்ச்சி, எதிர்காலத்தில் நிகழக்கூடிய சுற்றுச்சூழல் பேரழிவுகளை துல்லியமாகக் கணிக்கும் பூகம்ப ஆய்வுகளை உருவாக்குவதையும் உள்ளடக்கியிருக்கிறது. “நம்மை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது (இயற்கை நிகழ்வுகளிலிருந்து) என்பதை மேம்படுத்த உதவுவது போன்ற சில உடனடி இலக்குகளும் இந்த ஆய்வுக்கு உள்ளன” என்று எபிங்கர் கூறுகிறார்.

பிபிசி தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *