பல மாதங்களுக்கு பின்னர் இலங்கையில் கோவிட் மரணம்: சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மறுப்பு

இலங்கையில் பல மாதங்களுக்கு பின்னர் கோவிட் மரணம் பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், சுகாதார அமைச்சகம் அதனை மறுத்துள்ளது.

கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் கோவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக நேற்றைய தினம் செய்திகள் வெளியாகியிருந்தன.

கம்பளை அட்கல பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் சுவாசிப்பதில் சிரமம் மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், உயிரிழந்தார்.

அவரது மரணத்தின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில் அவருக்கு கொவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கண்டி தேசிய வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், இதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன மறுத்துள்ளார். எமது சகோதர ஊடகம் இது குறித்து அவரிடம் வினவியிருந்தது.

இதற்கு பதிலளித்து பேசிய அவர், இந்த மரணம் கோவிட் தொற்றினால் ஏற்படவில்லை என கூறியிருந்தார்.

இதேவேளை, இந்தியா, சீனா, சிங்கப்பூர் மற்றும் பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளில் கோவிட் தொற்றின் புதிய விகாரம் வேகமாக பரவி வருதாக சர்சதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், இலங்கையிலும், இந்தத் தொற்று பரவியிருக்கலாம் என தான் ஊகிப்பதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, உயிரணு தொடர்பான கற்கை நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், கோவிட் தொடர்பில் இலங்கை மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவின் தலைவர் வைத்தியர் சமித்த கினிகே தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *