இலங்கையில் பரவும் JN.1 கொவிட் துணை மாறுபாடு?

இந்தியாவின் கேரளா மாநிலத்தில் பரவி வரும் JN.1 கொவிட் துணை மாறுபாடு ஏற்கனவே இலங்கையில் இருப்பதாக சந்தேகிக்கப்படுவதாக  ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் துறையின் பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

அவர் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவொன்றை வௌியிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

லக்சம்பர்க்கில் முதன்முதலில் கண்டறியப்பட்ட JN.1 கொவிட் துணை மாறுபாடு இந்தியாவில் வேகமாகப் பரவி வருகிறது.

Omicron Covid இன் துணை வகையாகக் கருதப்படும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 2,669 ஆக உள்ளது.

கேரள மாநிலத்தில் பரவிய JN.1 துணை வகை தற்போது கோவா, மகாராஷ்டிரா மாநிலங்களுக்கும் பரவியுள்ளதாக கூறப்படுகிறது.

JN.1 இன் முதல் தொற்றாளர் மகாராஷ்டிராவில் இருந்தும் பதிவாகியுள்ளார், அந்த நபர் கோவாவைச் சேர்ந்தவர்.

தற்போது வரை  11 தொற்றாளர்கள் மகாராஷ்டிராவில் இருந்து பதிவாகியுள்ளதாக அறிக்கைகள் மேலும் குறிப்பிடுகின்றன.

கொவிட் பரவுவதைக் கட்டுப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு இந்திய சுகாதார அதிகாரிகள் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

இந்திய மாநிலமான கேரளாவில் பரவி வரும் JN.1 கொரோனா துணை மாறுபாடானது அவதானம் செலுத்தப்பட வேண்டிய வைரஸ் என்று உலக சுகாதார நிறுவனம் ஏற்கனவே அறிவித்துள்ளது.

கொவிட்டின் இந்த துணை மாறுபாட்டால் இலங்கைக்கு ஏற்படும் ஆபத்து குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரணு உயிரியல் துறையின் பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர சில பதிவுகளை மேற்கொண்டிருந்தார்.

அதில், தற்போது இந்தியாவின் கேரள மாநிலத்தில் பரவி வரும் JN.1 கொவிட் துணை மாறுபாடு ஏற்கனவே இலங்கையில்  இருப்பதாக சந்தேகிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தற்போது பொதுவாகக் காணப்படுகின்ற நோயானது இதன் விளைவாக இருக்கலாம் எனவும் பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

காய்ச்சல், இருமல், வாசனை மற்றும் சுவை இழப்பு, அதிக காய்ச்சல் தொடர்ந்து இருப்பது, சுவாசிப்பதில் சிரமம், சாப்பிடுவதில் சிரமம் மற்றும் வாந்தி ஆகியவை JN.1 கொவிட் துணை வகையின் அறிகுறிகளாகும்.

இதன்காரணமாக, இந்த அறிகுறிகளைக் கொண்டவர்கள் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும் என்று வைத்தியர் சந்திம ஜீவந்தர சுட்டிக்காட்டுகிறார்.

குறிப்பாக வயதானவர்கள் மற்றும் நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவர்கள் பூஸ்டர் தடுப்பூசியை பெற வேண்டும்,
நல்ல காற்றோட்டம் இல்லாத, நெரிசலான, மூடப்பட்ட இடங்களில் சுற்றித் திரிபவர்கள் முகமூடி அணிவது நல்லது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கொவிட் வைரஸை சாதாரண வைரஸாகக் கருதக்கூடாது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் விளைவாக, நோயாளி தீவிரமாக நோய்வாய்ப்படலாம் எனவும்
மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் மனநலப் பிரச்சினைகள் போன்ற நீண்டகால விளைவுகள் ஏற்படலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *