தாடியுடன் வகுப்பறைக்குள் நுழைய தடை – இலங்கையில் மருத்துவ மாணவருக்கு என்ன நடந்தது?

  • யூ.எல். மப்றூக்
  • பதவி,பிபிசி தமிழுக்காக

தாடி வைத்திருக்கிறார் எனும் காரணத்துக்காக, மருத்துவப் படிப்பு இறுதியாண்டு மாணவர் ஒருவரை – கற்றல் செயற்பாடுகளில் ஈடுபட அனுமதிப்பதில்லை என, இலங்கை கிழக்குப் பல்கலைக் கழகம் எடுத்த தீர்மானத்துக்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் படிப்பு இறுதியாண்டு மாணவர் ஸஹ்றி என்பவர் – தாடி வைத்துள்ளமையைக் காரணம் காட்டி, ‘அவர் கல்வி நடவடிக்கைகளைத் தொடர முடியாது’ என, அந்தப் பல்கலைக் கழகம் அண்மையில் தடை விதித்தது.

இதனையடுத்து, பல்கலைக்கழக நிர்வாகத்தின் தீர்மானத்துக்கு இடைக்காலத் தடை விதிக்குமாறு கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றில் ‘ரிட்’ (WRIT) மனு ஒன்றை ஸஹ்றி தாக்கல் செய்தார். குறித்த வழக்கு கடந்த 15ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, பல்கலைக்கழகத்தின் முடிவுக்கு எதிராக மாணவர் கோரிய இடைக்கால தடையுத்தரவை நீதிமன்றம் வழங்கியது.

கிழக்குப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர்களான மணிகண்டு திருக்குமார், கவுரியல் எலியாஸ் கருணாகரன் ஆகியோரும் கிழக்குப் பல்கலைக்கழக நிர்வாகமும் இந்த வழக்கில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

மேற்படி மாணவர் – தாடி வைத்துள்ள ஒரே காரணத்துக்காக, வைத்தியசாலையில் நடைபெறும் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுவதையும், விரிவுரைகளில் கலந்து கொள்வதையும் பிரதிவாதிகள் தடுத்ததாகவும், குறித்த மாணவரின் அடிப்படை மற்றும் மனித உரிமைகைள் இவ்விடயத்தில் மீறப்பட்டுள்ளதாகவும் இந்த வழக்கில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்தனர்.

மேலும், மாணவர் ஸஹ்றியின் கலாசார அடையாளமான தாடியை வைத்துக் கொள்வதற்கு பிரதிவாதிகள் தடையை ஏற்படுத்தியதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இதே போன்று தாடி வைத்திருந்தமையினால் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட இன்னொரு மாணவரும் கிழக்குப் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு எதிராக – ஏற்கனவே வழக்கு ஒன்றைத் தொடர்ந்து, இடைக்காலத் தடை உத்தரவைப் பெற்றுள்ள நிலையில், தாடி வைத்திருக்கும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை அதே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பிரதிவாதிகள் தடுத்துள்ளமையினையும் நீதிமன்றின் கவனத்துக்கு சட்டத்தரணிகள் கொண்டு சென்றனர்.

இதனையடுத்து மாணவர் ஸஹ்றி – வைத்திய சாலையில் நடைபெறும் பயிற்சிகளில் பங்கு பற்றுவதையும், கள விஜயங்கள் செல்வதையும், பரீட்சைகளில் தோற்றுவதையும் தடுப்பதற்கு எதிராக, மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடைஉத்தரவினை வழங்கியுள்ளது.

என்ன நடந்தது? – மாணவர் ஸஹ்றி விளக்கம்

கிழக்குப் பல்கலைக் கழகத்தில் சுகாதார- பராமரிப்பு அறிவியல் பீடத்தின் கீழ் மருத்துவப் படிப்பு உள்ளது. இதற்குப் பொறுப்பான பீடாதிபதி ரி. சதானந்தன். இவர்தான், தனது பீடத்தில் கற்கும் மாணவர்கள் தாடி வைக்கக் கூடாது என்கிற நெறிமுறையொன்றினை முதலில் கொண்டு வந்ததாக – மாணவர் ஸஹ்றி கூறுகின்றார்.

“அவ்வாறான தீர்மானமொன்றை எடுப்பதென்றால் பல்கலைக்கழக மூதவை (Senate) மற்றும் பேரவை (Council) ஆகியவற்றின் ஒப்புதல்களைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால், அப்படி எந்த ஒப்புதலையும் பெறாமலேயே, தாடி வைக்கக் கூடாது என்கிற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது” என அவர் குறிப்பிட்டார்.

ஒரு தடவை பல்கலைக்கழக நிகழ்வொன்றில் தான் கலந்து கொண்ட போது, தாடி வைத்திருப்பதைக் காரணம் காட்டி, தன்னை பீடாதிபதி சதானந்தன், அங்கிருந்து விரட்டியதாகவும் பிபிசி தமிழிடம் ஸஹ்றி கூறினார்.

அதன் பின்னர் இம்மாதம் 04ஆம் தேதி மீண்டும் அந்தப் பிரச்சினை ஆரம்பித்ததாகவும் அவர் கூறுகின்றார்.

” மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் களக் கற்கைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சென்றிருந்தேன். பேராசிரியர் திருக்குமரன் மற்றும் பேராசிரியர் கருணாகரன் ஆகியோர் அந்தக் கற்கைக்கு பொறுப்பானவர்கள்.

அங்கு பேராசிரியர் திருக்குமாரின் விரிவுரை ஆரம்பமானது. தொப்பி மற்றும் ‘மாஸ்க்’ அணிந்து – தாடியுடன் நான் அந்த விரிவுரைக்குச் சென்றிருந்தேன். அப்போது பேராசிரியர் திருக்குமார் என்னை தொப்பியை கழற்றுமாறு கூறினார். பின்னர் ‘மாஸ்க்’கையும் அகற்றச் சொன்னார். பிறகு, ‘தாடிடன் தனது விரிவுரை வகுப்புகளுக்கு வர முடியாது’ என்று கூறிய அவர், ‘தாடி, மீசையை மழித்துக் கொண்டுதான் நாளை நீங்கள் வரவெண்டும். இல்லையென்றால் உங்கள் எம்.பி.பிஎஸ் (MBBS) படிப்புக்கு விடைகொடுக்க வேண்டிவரும்’ என்று சொன்னார்” என, ஸஹ்றி தெரிவிக்கின்றார்.

பின்னர் ஏனைய மாணவர்கள் ‘வார்ட்’ (Ward) க்கு சென்றதாகவும், தன்னை வீட்டுக்குச் சென்று, அவர் கூறியபடி தாடியில்லாமல் நாளை வருமாறும் பேராசியர் திருக்குமார் அறிவுறுத்தியதாகவும் ஸஹ்றி குறிப்பிடுகின்றார்.

”ஆனாலும், நான் அவரின் பின்னால் சென்று, விரிவுரை வகுப்புகளுக்கு என்னை அனுமதிக்குமாறு கேட்டேன். மத நம்பிக்கையின் அடிப்படையில் நீண்ட காலமாக நான் தாடி வைத்துள்ளதை விளக்கினேன். ஆனால், அவர் முடியாது என்று கூறிவிட்டார்”.

பிறகு மறுநாளும் அதற்கு மறுநாளும் பேராசிரியர் திருக்குமாரைச் சந்தித்து தாடியுடன் அவரின் விரிவுரை வகுப்புகளில் கலந்து கொள்ளச் சந்தர்ப்பம் கேட்டதாகவும், ஆனால் அவர் மறுத்து விட்டதாகவும் ஸஹ்றி கூறினார்.

இதனையடுத்து 07ஆம் தேதி, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமைக் காரியாலத்துக்கும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கும் சென்று – இது தொடர்பில் ஸஹ்றி முறைப்பாடு செய்தார்.

அதனையடுத்து பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உதவித் தவிசாளர் தன்னைத் தொலைபேசியில் அழைத்து, பல்கலைக்கழகப் பீடாதிபதியுடன் இவ்விடயம் தொடர்பில் தான் பேசியுள்ளதாகவும், பீடாதிபதியைச் சந்திக்குமாறும் தன்னிடம் கூறியதாக தெரிவித்தார்.

”அதன்படி 08ஆம் தேதி பல்கலைக் கழகம் சென்று எமது பீடாதிபதி ரி. சச்சிதானந்தனைச் சந்தித்தேன். அவர் நிறையப் பேசினார். பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உதவித் தவிசாளர் இவ்விவகாரத்தில் தலையிட முடியாது என்றார். மேலும், பல்கலைக்கழகத்துக்கு வெளியில் – வைத்திய சாலையில் விரிவுரைகள் மற்றும் பயிற்சிகளை நடத்தும் பேராசிரியர்கள் எடுக்கும் தீர்மானங்கள் தொடர்பில் தன்னால் எதுவும் செய்ய முடியாது என்றார்.

‘முன்னரும் நுஸைஃப் எனும் மாணவருக்கு – தாடி வைக்கக் கூடாது என்று பல்கலைக் கழகம் கூறியது. அதற்கு எதிராக அவர் நீதிமன்றம் சென்று தடையுத்தரவைப் பெற்றார். தேவையானால் அதுபோன்று நீங்களும் முயற்சிக்கலாம்’ எனவும் பீடாதிபதி கூறினார்” என ஸஹ்றி குறிப்பிட்டார்.

இதன் பின்னர் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் நடந்த ஒரு பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வதற்காக ஸஹ்றி சென்று, அங்கிருந்த பேராசிரியர் கருணாகரனுடன் பேசியுள்ளார். அதன்போது அவருடம் – தாடியுடன் அனுமதிக்க முடியாது என கூறி விட்டதாக, பிபிசி தமிழிடம் குறிப்பிட்டார்.

இதன் பிறகுதான் நீதிமன்றம் சென்று, தடையுத்தரவைப் பெற்றுக் கொண்டுள்ளார் ஸஹ்றி.

  • நுஸைஃப் விவகாரம்
இலங்கை, கல்வி, இஸ்லாம், முஸ்லீம்கள், மதம்
நுஸைஃப்

‘தாடியுடன் படிப்பைத் தொடர முடியாது’ என்று தடை விதிக்கப்பட்ட முதலாவது மாணவர் ஸஹ்றி அல்ல. இதற்கு முன்னரும் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுகாதார- பராமரிப்பு பீடத்தில் தாதி பட்டப்படிப்பை மேற்கொண்டு வரும், நுஸைஃப் எனும் மாணவரும், தாடி வைத்திருந்தார் எனும் காரணத்துக்காக, படிப்பைத் தொடர முடியாமல் தடுக்கப்பட்டார்.

இதனையடுத்து மேன்முறையீட்டு நீதிமன்றில் ‘ரிட்’ (WRIT) மனு ஒன்றைத் தாக்கல் செய்த நுஸைஃப், பல்கலைக்கழகத்தின் தீர்மானத்துக்கு எதிராக தடை உத்தரவொன்றை கடந்த ஜுன் மாதம் 16ஆம் தேதி பெற்றுக் கொண்டார்.

இதனையடுத்து தாடியுடன் தனது படிப்பை நுஸைஃப் தொடர்ந்து வருகிறார். அவரிடமிமும் பிபிசி தமிழ் பேசியது.

”பீடாதிபதி சதானந்தன் மூலமாக முதலில் எனக்கு பிரச்சினை ஆரம்பமானது. அவரின் விரிவுரை வகுப்பின் போது – தாடியுடன் வரக்கூடாது என்று அவர் கூறினார்.

அதனையடுத்து அவரை சந்தித்துப் பேசினேன். ‘தாடி தொடர்பாக பல்கலைக்கழகத்தில் எந்தக் கட்டுப்பாடுகளும் எழுத்தில் இல்லாத நிலையில், தாடி வைக்கக் கூடாது என்கிற ஒரு தீர்மானத்தை நீங்கள் கொண்டு வந்திருக்கிறீர்கள். எனது மத நம்பிக்கையின் அடிப்படையில் நான் தாடி வைத்திருக்கிறேன். தயவு செய்து என்னை அனுமதியுங்கள்’ என அவரிடம் கேட்டேன். அவர் மறுத்து விட்டார். ‘அப்படியானால் பூணூலைக் கட்டிக் கொண்டு வரும் ஒருவரையும் நான் படிப்பதற்கு அனுமதிக்க வேண்டுமா? என்று, அவர் என்னிடம் கேட்டார்.

பிறகு, ‘நீ விரும்பியவாறெல்லாம் இங்கு படிக்க முடியாது. உனக்கு விரும்பியவாறு நடந்து கொண்டு – இங்கு பட்டப் படிப்பைப் பெற்றுக் கொள்ள முடியாது. பட்டம் தருவது நான்தான். உன்னை பரீட்சை எழுதவே விட மாட்டேன்’ என்றும் கூறினார்” என, நுஸைஃப் விவரித்தார்.

இனையடுத்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழவின் மட்டக்களப்பு காரியாலயத்தில் இவ்விடயம் தொடர்பாக நுஸைஃப் முறைப்பாடொன்றினை கடந்த ஜுன் மாதம் 01ஆம் தேதி பதிவு செய்தார். அதனை விசாரித்த ஆணைக்குழு, மாணவனை தாடி வைத்தவாறே பரீட்சை எழுத அனுமதிக்குமாறு பரிந்துரைத்தது. இதன்போது ஆஜராகியிருந்த பிரதிவாதிகளான பீடாதிபதி மற்றும் பிரதி துணை வேந்தர் ஆகியோர், ‘பீடக் கூட்டத்தில் முடிவெடுத்தே இது குறித்து பதிலளிக்க முடியும்’ என்றனர்.

அதனால், பரீட்சை எழுதுவதற்கு தன்னை பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதிக்காது என்ற சந்தேகத்தின் அடிப்படையில், மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் ‘றிட்’ (WRIT) மனுவொன்றை நுஸைஃப் தாக்கல் செய்தார். அதனை விசாரித்த நீதிமன்றம், ஜூலை 04ம் திகதி இவ்வழக்கு விசாரணைக்கு வரும் வரையில், மாணவர் நுஸைஃபின் பரீட்சைகளை நடத்தக் கூடாது என பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்டிருந்ததோடு, தாடி வைத்துக் கொண்டு படிப்பைத் தொடர முடியாது என, பல்கலைக்கழகம் எடுத்த தீர்மானத்துக்கு இடைக்காலத் தடையினையும் விதித்தது.

அதன் காரணமாக, தற்போது தாடி வைத்தவாறே தனது படிப்பை நுஸைப் தொடர்ந்து வருகிறார்.

  • ”நான் தடுக்கவில்லை” – பீடாதிபதி சதானந்தன்
இலங்கை, கல்வி, இஸ்லாம், முஸ்லீம்கள், மதம்
பீடாதிபதி சதானந்தன்

மேற்படி மாணவர்களின் குற்றச்சாட்டுகள் குறித்து கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுகாதார- பராமரிப்பு அறிவியல் பீடத்தின் பீடாதிபதி ரி. சதானந்தனிடம் பேசிய பிபிசி தமிழ், அவர் தரப்பு விளக்கத்தை கேட்டது.

இதன்போது பேசிய அவர், மாணவர் ஸஹ்றியை தாடியுடன் வரவேண்டாம் என தான் கூறவில்லை என்றும், அவர் வைத்தியசாலைக்கு களப் படிப்புக்காகச் சென்றிருந்த வேளை, அங்குள்ள வைத்தியப் பேராரியர்களே தாடி, மீசையின்றி ‘க்ளீன் ஷேவ்’ செய்து வருமாறு கூறியதாகவும் தெரிவித்தார்.

வைத்தியசாலையில் பயிற்சி பெறும் மருத்துவபீட மாணவர்கள் தாடி, மீசையின்றி இருக்க வேண்டும் என்கிற ஒழுக்கநெறி உள்ளதாகவும் பீடாதிபதி சதானந்தன் குறிப்பிட்டார்.

”வைத்தியசாலைகளுக்கு படிப்பதற்காகச் செல்லும் மாணவர்கள் தாடி, மீசை வைத்துள்ளதாக அங்குள்ள வைத்தியப் பேராசிரியர்கள் என்னிடம் முறையிட்டனர். அது குறித்து மாணவர்களுக்கு அறிவுறுத்துவதில்லையா என என்னிடம் கேட்டனர். இதனையடுத்தே, எனது பீடத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு – தாடி வைத்துக் கொண்டு வர வேண்டாம் என கட்டுப்பாடு விதித்தேன்” எனவும் அவர் கூறினார்.

பல்கலைக்கழகத்தில் ஏனைய பட்டப்படிப்பு மாணவர்களுக்கு இந்தக் கட்டுப்பாடு கிடையாது என்றும் – மருத்துவம், தாதியியல் போன்ற துறைகளில் படிக்கும் சுகாதார- பராமரிப்பு அறிவியல் பீட மாணவர்களுக்கு மட்டுமே, இந்தக் கட்டுப்பாடு உள்ளது என்றும் பீடாதிபதி சதானந்தன் தெரிவித்தார்.

படிப்பதற்காக வைத்தியசாலை செல்லும் மாணவர்கள் தாடி வைத்திருந்தால், அது – அங்குள்ள நோயாளர்களின் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால்தான், இந்கக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விவரித்தார்.

இதேவேளை, நுஸைஃப் எனும் மாணவரை தாடியுடன் பல்கலைக்கழகத்துக்கு வரவேண்டாம் எனக் கூறியது தான்தான் என்பதையும் இதன்போது அவர் ஒத்துக்கொண்டார்.

‘பூண் நூலைக் கட்டிக் கொண்டு வரும் ஒருவரையும் படிப்பதற்கு நான் அனுமதிக்க வேண்டுமா’ என்று, நுஸைஃப்பிடம் தான் கேட்டது உண்மைதான் என்றும், ஒவ்வொருவரும் வெவ்வேறு மத அடையாளங்களை வெளிப்படுத்திக் கொண்டு வரும்போது, அவர்களையெல்லாம் பல்கலைக்கழகத்தினுள் அனுமதித்துக் கொண்டிருக்க முடியாது என்பதை – புரிய வைப்பதற்காகவே தான் அவ்வாறு கூறியதாகவும் பீடாதிபதி சதானந்தன் பிபிசி தமிழிடம் குறிப்பிட்டார்.

”இந்தப் பல்கலைக்கழகத்தில் சேரும் போது, இங்கு தாடி வைப்பது தொடர்பில் கட்டுப்பாடு ஒன்று உள்ளதை, ஆரம்பத்திலேயே பல்கலைக்கழக நிர்வாகம் கூறவில்லை என்றும், அவ்வாறு சொல்லியிருந்தால் வேறு தெரிவுக்கு மாணவர் நுஸைஃப் சென்றிருப்பார் எனவும் அவரின் சட்டத்தரணிகள் நீதிமன்றில் கூறியிருந்தனர்.

அது நியாயமான வாதமாகவும் இருந்தது. ஆனால் மாணவர் சஹ்றியின் விடயம் மாறுபட்டது. அவரை தாடியுடன் வைத்திய சாலைக்குள் அனுமதிப்பதில்லை என, வைத்தியசாலைத் தரபபினர்தான் முடிவு செய்தனர். அந்த தீர்மானத்துக்கும் பல்கலைக்கழகத்துக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது” எனவும் பீடாதிபதி கூறினார்.

  • அடிப்படை உரிமையை மறுக்க முடியாது – சட்டத்தரணி றுடானி
இலங்கை, கல்வி, இஸ்லாம், முஸ்லீம்கள், மதம்
ஸஹ்றி வழக்கில் ஆஜரான சட்டத்தரணிகள்- நடுவில் றுடானி சாஹிர்.

இவ்விவகாரம் குறித்து மாணவர் ஸஹ்றியின் வழக்கில் ஆஜரான சட்டத்தரணிகளில் ஒருவரான றுடானி ஸாஹிரிடம் பேசினோம்.

”மாணவர் ஸஹ்றி தாடியுடன் படிப்பைத் தொடர்வதற்கு அனுமதிக்காமையினை இரண்டு வகையில் பார்க்கலாம். ஒன்று, ஒருவர் தாடி வைப்பது அவரின் உரிமை என்பதை மேற்படி பேராசிரியர்கள் புரிந்து கொள்ளாமை. மற்றையது, தாடி வைப்பதை இனவாத ரீதியில் அவர்கள் நோக்குகின்றனர். இந்த இரண்டுமே பிழையானது என்கிறார் சட்டத்தரணி றுடானி சாஹிர்.

”தாடி வைக்கக் கூடாது என்று தடை விதிக்கப்படும் போது, அதிகமான மாணவர்கள் அதனை ஏற்றுக் கொண்டு, நமக்கு ஏன் வீண் வம்பு எனும் மனநிலையுடன் பணிந்து போகின்றனர். ஆனால், ஸஹ்றி மற்றும் நுஸைஃப் போன்ற மாணவர்கள் இந்த விவகாரத்தல் துணிந்து – தமது உரிமைக்காக சட்டரீதியாக போராட முன்வந்துள்ளார்கள்” என, அவர் குறிப்பிட்டார்.

ஒரு தனி மனிதர் தனது மதத்தை, கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் நடந்து கொள்வதற்கும் ஆடை அணிவதற்கும் முழுமையான சுதந்திரம் உள்ளது என, அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டும் சட்டத்தரணி றுடானி ஸாஹிர், ”அது ஒவ்வொருவரின் அடைப்படை உரிமையுமாகும்” என்கிறார்.

”எனவே, தமது அடிப்படை உரிமைகளை விட்டுக் கொடுக்கத் தேவையில்லை எனும் வகையில்தான், தாடி வைப்பதற்கான தடையை எதிர்க்கும் இந்த மாணவர்களின் செயற்பாடுகள் அமைகின்றன. இதேவேளை தாடி வைப்பது – சம்பந்தப்பட்ட நபரின் அடிப்படை உரிமை என்பதில் நீதிமன்றுக்கு எந்தச் சந்தேகமும் இல்லை” எனவும் அவர் தெரிவித்தார்.

அரசியலமைப்பினால் வழங்கப்பட்ட ஓர் உரிமையை, பல்கலைக்கழகமொன்றினால் உருவாக்கப்பட்ட நெறிமுறைகளினூடாக கட்டுப்படுத்த முடியாது எனவும் அவர் கூறினார்.

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தாடி வைத்துக் கொண்டு படிப்பைத் தொடர முடியாது என தடைவிதிக்கப்பட்ட நுஸைஃப் எனும் மாணவர், அந்தத் தீர்மானத்துக்கு எதிராக நீதிமன்றத் தடையுத்தரவைப் பெற்றுள்ள நிலையில், அந்த நீதிமன்ற உத்தரவைத் தெரிந்து கொண்டே, மீண்டும் மற்றொரு மாணவரையும் தாடி வைத்திருக்கிறார் என்று கூறி, படிப்பைத் தொடர முடியாது என்று – அதே பல்கலைக்கழகத் தரப்பு கூறுவதென்பது பாரதூரமான ஒரு விடயம் எனவும் சட்டத்தரணி றுடானி ஸாஹிர் குறிப்பிட்டார்.

இலங்கையிலுள்ள பல்கலைக் கழகங்களில் – பௌத்த பிக்கு மாணவர்கள், காவி ஆடை அணிந்து கொண்டு, பௌத்த மத அடையாளங்களை வெளிப்படுத்தியவாறே படித்து வருகின்றமையினையும் இதன்போது சட்டத்தரணி றுடானி சாஹிர் சுட்டிக்காட்டினார்.

பிபிசி தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *