உலகளாவிய ரீதியில் பெண் கொலைகள் அதிகரிப்பு! ஐ.நா. எச்சரிக்கை!!

உலகளாவிய ரீதியில் பெண்கள் மற்றும் சிறுமிகள் படுகொலை செய்யப்படுவது அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு மாத்திரம் 89,000 பெண்கள் மற்றும் சிறுமிகளும் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா. கூறுகிறது.

கடந்த இரண்டு தசாப்தங்களில் மிகவும் அதிகமாக பெண் கொலைகள் இடம்பெற்ற வருடமாக 2022ஆம் ஆண்டு பதிவாகியுள்ளது. இது உலகளாவிய ரீதியில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகம் (UNODC) மற்றும் பாலின சமத்துவம் மற்றும் பெண்களுக்கு அதிகாரம் வழங்குவதற்கான ஐக்கிய நாடுகளின் நிறுவனம் ஆகியவற்றின் ஆய்வு முடிவுகளே இந்த உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளது.

வேண்டுமென்றே பெண் கொலை அல்லது பெண்ணடிமை படுகொலைகள் இடம்பெறும் போக்கு கவலைக்குரியதாக உள்ளது. இந்த ஆய்வு முடிவுகள் இதனை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

இவற்றில் 55 வீதமான கொலைகள் குடும்ப உறுப்பினர்கள் அல்லது உறவினர்களால் நடத்தப்பட்டவையாகும்.

ஆண் கொலைகளில் 12 வீதம் மட்டுமே குடும்ப எல்லைக்குள் நடந்ததாக அறிக்கை வெளிப்படுத்துகிறது.

யுஎன்ஓடிசியின் நிர்வாக இயக்குனர் காடா வாலி, பெண் கொலைகள் அதிகரித்து வருவது மிகுந்த கவலையை ஏற்படுத்துவதாக தெரிவித்தார்.

இந்த துன்பகரமான போக்கு, ஆழமாக வேரூன்றிய சமத்துவமின்மை மற்றும் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளுடன் பிணைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் வலுவான மற்றும் செயல்திறன் மிக்க நிறுவனங்களை நிறுவுவதற்கு அதிக நிதியை ஒதுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த நிறுவனங்கள், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு உரிய தண்டனையை பெற்றுக்கொடுக்கவும் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு விரிவான நிவாரணத்தை வழங்குவதற்கும் வழிவகைகளை செய்ய வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *