சோவியத்தின் அதிநவீன போர் விமானத்தை இஸ்ரேலின் ‘மொசாத்’ திருடியது எப்படி?

மார்ச் 25, 1963 இல், மெய்ர் ஆமெட் (Meir Amet) இஸ்ரேலின் உளவுத்துறை நிறுவனமான மொசாத் (Mossad) இன் தலைவராக பதவியேற்ற போது, ​​அவர் பல இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகளைச் சந்தித்து, இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு மொசாத்தின் அப்போதைய பங்களிப்பு என்னவாக இருக்கலாம் என விவாதித்தார்.

எப்படியாவது சோவியத் விமானமான மிக்-21 ஐ இஸ்ரேலுக்கு கொண்டு வர முடிந்தால், அது நன்றாக இருக்கும் என்று எல்லோரும் சொன்னார்கள். எஸர் வெய்ஸ்மேன் இஸ்ரேலிய விமானப்படையின் தலைவராக ஆனபோது அதற்கான உண்மையான முயற்சி தொடங்கியது.

அவர் இரண்டு, மூன்று வாரங்களுக்கு ஒருமுறை என் மனைவியுடன் காலை உணவு சாப்பிட வருவார். அத்தகைய ஒரு சந்திப்பின் போது, ​​மெய்ர் அவருக்காகத் தான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார். ஒரு நொடி கூட வீணடிக்காமல், “எனக்கு மிக்-21 வேண்டும்” என்றார் வெய்ஸ்மேன்.

மெய்ர் ஆமெத் தனது ‘ஹெட் டு ஹெட்’ புத்தகத்தில், “நான் வெய்ஸ்மானுக்கு பதில் அளித்த போது, உங்களுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா எனக்கேட்டேன். மேற்கத்திய நாடுகள் ஒன்றில் கூட ஒரு மிக் விமானம் இல்லை என்று சொன்னேன். ஆனால் வெய்ஸ்மேன் தனது விருப்பத்தில் ஒட்டிக்கொண்டார். நமக்கு ஒவ்வொரு நிலைமையிலும் மிக்-21 தேவைப்படுகிறது. அதைப் பெறுவதற்கு நீங்கள் உங்கள் முழு பலத்தையும் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்,” என எழுதியுள்ளார்.

தொடர்ந்து, “இதற்கான பொறுப்பை நான் ரஹ்வியா வர்டியிடம் ஒப்படைத்தேன். அவர் அந்த விமானத்தை எகிப்து மற்றும் சிரியாவில் இருந்து கொண்டு வருவதற்கு முன்னர் அந்த முயற்சியில் தோல்வியுற்றார்,” என அவர் எழுதியுள்ளார்.

“நாங்கள் இந்த திட்டத்தில் பல மாதங்களாக முயன்று வருகிறோம். இந்த திட்டத்தை எவ்வாறு செயல்படுத்துவது என்பதுதான் எங்களின் நிலவும் மிகப்பெரிய பிரச்னையாக இருக்கிறது.”

  • இஸ்ரேலிய உளவு நிறுவனமான மொசாத்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மிக்-21 விமானத்தை இஸ்ரேலுக்குக் கொண்டுவந்ததில் முன்னாள் மொசாத் தலைவர் மெய்ர் ஆமெட் பெரும்பங்கு வகித்தார்.

மிக்-21 போர் விமானத்தை ‘மொசாத்’ திருடியது எப்படி?

சோவியத் யூனியன் 1961 இல் அரபு நாடுகளுக்கு மிக்-21 ஐ வழங்கத் தொடங்கியது.

டாரன் கெல்லர் (Doron Geller) தனது ஸ்டீலிங் எ சோவியத் மிக் ஆப்பரேசன் டைமண்ட் (‘Stealing a Soviet MiG Operation Diamond’) என்ற கட்டுரையில், “1963 வாக்கில் மிக்-21 எகிப்து, சிரியா மற்றும் இராக் ஆகிய நாடுகளின் விமானப்படைகளில் ஒரு முக்கிய அங்கமாக மாறியது. இருப்பினும், ரஷ்யர்கள் இந்த விமானத்தின் மிக உயர்ந்த ரகசியத்தை பாதுகாத்து வந்தனர்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

“அரபு நாடுகளுக்கு விமானங்களை வழங்குவதற்கு ரஷ்யா விதித்த மிகப்பெரிய நிபந்தனை என்னவென்றால், அந்த விமானங்கள், அவற்றை வாங்கும் அரபு நாடுகளில் இருந்தாலும், அவற்றின் பாதுகாப்பு, பயிற்சி மற்றும் பராமரிப்புக்கான பொறுப்பு சோவியத் அதிகாரிகளிடம் தான் எப்போதும் இருக்கும்.”

மிக்-21 இன் திறன்களைப் பற்றி மேற்கு நாடுகளில் யாருக்கும் தெரியாது.

“வார்டி அரபு நாடுகளில் இது குறித்த தகவல்களைத் தேடத் தொடங்கினார். பல வாரங்களுக்குப் பிறகு, இரானில் உள்ள இஸ்ரேலிய ராணுவத்தில் பணியாற்றிய யாகோவ் நிம்ராடியிடம் இருந்து அவருக்கு ஒரு தகவல் கிடைத்தது. அவர் இராக்கிய யூதரான யோசெப் ஷிமிஷ், “இராக்கை நன்கு அறிந்தவர்” என்று கூறிக்கொண்டார். இராக்கிய மிக்-21 விமானத்தை இஸ்ரேலுக்கு கொண்டு வரக்கூடிய விமானி அவர் தான்,” என கெல்லர் எழுதியுள்ளார்.

ஷிமிஷ் திருமணமாகாதவர் என்பதுடன், மகிழ்ச்சியான வாழ்க்கை வாழப் பழகியவராகவும் இருந்தார். மக்களுடன் நட்பு வைத்து அவர்களின் முழு நம்பிக்கையை வெல்லும் அற்புதமான திறமை அவருக்கு இருந்தது.

  • இஸ்ரேலிய உளவு நிறுவனமான மொசாத்

பட மூலாதாரம்,SHEBA MEDICAL CENTER

இராக்கிய யூதரான யோசெப் ஷிமிஷ், அந்த நாட்டை நன்கு அறிந்தவராக இருந்தார்.

ஷிமிஷுக்கு பாக்தாத்தில் ஒரு கிறிஸ்தவ காதலி இருந்தார், அவருடைய சகோதரி கமிலா ஒரு கிறிஸ்தவ இராக் விமானப்படை விமானியான கேப்டன் முனிர் ரெட்ஃபாவின் மனைவியாக இருந்தார்.

சிறந்த விமானியாக இருந்தும் அவருக்கு பதவி உயர்வு கிடைக்காததால் முனிர் அதிருப்தியில் இருப்பதை ஷிமிஷ் அறிந்தார். அந்த நேரத்தில் அவர்களது சொந்த நாட்டிலுள்ள குர்துக்களின் கிராமங்களில் குண்டுகளை வீசும் பணியில் அவர் ஈடுபட்டிருந்தார்.

அவருக்கு பதவி உயர்வு கிடைக்காதது குறித்து அவர் தனது அதிகாரிகளிடம் புகார் அளித்தபோது, ​​அவர் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவருக்கு பதவி உயர்வு வழங்க முடியாது என்றும், அதனால் அணித் தலைவராக இருக்க அவருக்குத் தகுதி இல்லை என்றும் கூறப்பட்டது.

ரெட்ஃபா மிகவும் லட்சியம் நிறைந்த அதிகாரியாக இருந்தார். இனி இராக்கில் இருப்பதில் அர்த்தமில்லை என்று அவர் நினைத்தார். இளம் விமானியாக இருந்த ரெட்ஃபாவுடன் சுமார் ஒரு வருடம் பேசிய பிறகு, ஷிமிஷ் அவரை ஏதென்ஸ் நகருக்குச் செல்லும்படி சமாதானப்படுத்துவதில் வெற்றி பெற்றார்.

ரெட்ஃபாவின் மனைவிக்கு கடுமையான நோய் இருப்பதாகவும், மேற்கத்திய மருத்துவர்களைப் பார்ப்பதன் மூலம் தான் அவரைக் காப்பாற்ற முடியும் என்றும் ஷிமிஷ் இராக் அதிகாரிகளிடம் கூறினார். அவர்களை உடனடியாக கிரீஸ் நாட்டுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் அப்போது தெரிவித்தார்.

அவரது கணவனும் அவருடன் அங்கு செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என்றும், ஏனென்றால் குடும்பத்தில் ஆங்கிலம் பேசக்கூடிய ஒரே நபர் அவர் மட்டுமே என்றும் அவர் கூறியிருந்தார்.

இராக் அதிகாரிகள் அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்டனர் என்பதுடன் முனிர் ரெட்ஃபா தனது மனைவியுடன் ஏதென்ஸ் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

  • இஸ்ரேலிய உளவு நிறுவனமான மொசாத்

பட மூலாதாரம்,JEWISH VIRTUAL LIBRARY

இராக்கில் இருந்து மிக்-21 போர் விமானத்தை இராக் விமானப் படை கேப்டன் முனீர் ரெட்ஃபா தந்திரமாக இஸ்ரேலுக்குக் கொண்டுவந்தார்.

ஏதென்ஸில், மொசாத் மற்றொரு இஸ்ரேலிய விமானப்படை விமானியான கர்னல் ஜீவ் லிரோனை ரெட்ஃபாவை சந்திக்க அனுப்பியது.

ரெட்ஃபாவுக்கு ‘யாஹோலோம்’ என்ற குறியீட்டுப் பெயரை மொசாத் வைத்தது. அதாவது வைரம். இந்த முழு பணிக்கும் ‘ஆபரேஷன் டயமண்ட்’ என்று பெயரிடப்பட்டது.

ஒரு நாள் ரெட்ஃபாவிடம் லிரோன், “நீங்கள் உங்கள் விமானத்துடன் இராக்கிலிருந்து பறந்தால் என்ன நடக்கும்?” என்று கேட்டார்.

ரெட்ஃபா, “அவர்கள் என்னைக் கொன்றுவிடுவார்கள். எந்த நாடும் எனக்கு அடைக்கலம் கொடுக்கத் தயாராக இருக்காது,” என்று பதில் அளித்தார்.

அதற்கு லிரோன், “உங்களை இருகரம் நீட்டி வரவேற்கும் ஒரு நாடு இருக்கிறது. அதன் பெயர் இஸ்ரேல்” என்றார்.

ஒரு நாள் யோசித்த ரெட்ஃபா, மிக்-21 விமானத்துடன் இராக்கிலிருந்து வெளியே வர ஒப்புக்கொண்டார்.

பின்னர், லிரோன் ஒரு நேர்காணலில் ரெட்ஃபாவுடனான உரையாடலைக் குறிப்பிட்டார்.

கிரீஸிலிருந்து இருவரும் ரோம் சென்றனர். ஷிமிஷ் மற்றும் அவரது பெண் நண்பரும் அங்கு வந்தனர். சில நாட்களுக்குப் பிறகு, இஸ்ரேலிய விமானப்படையின் புலனாய்வுத் துறையின் ஆராய்ச்சி அதிகாரி யெஹுதா போரட்டும் அங்கு வந்தார்.

இஸ்ரேலிய உளவுத்துறைக்கும் ரெட்ஃபாவுக்கும் இடையே எப்படி தொடர்பு ஏற்படுத்துவது என்பது ரோமிலேயே முடிவு செய்யப்பட்டது.

மைக்கேல் பார் சோஹர் மற்றும் நிசிம் மிஷால் ஆகியோர் தங்களின் தி கிரேட்டஸ்ட் மிஸன் டிக வாந இஸ்ரேலி சீக்ரெட் சர்வீஸ் மொசாத் என்ற (The Greatest Mission of the Israeli Secret Service Mossad) புத்தகத்தில், “ரெட்ஃபா இஸ்ரேலின் வானொலி நிலையமான கோல் (Kol)-இலிருந்து புகழ்பெற்ற அரபு பாடலான மார்ஹபேட்டின் மார்ஹபேட்டின்-ஐக் கேட்கும்போது, ​​அது அவருக்கு இராக்கை விட்டு வெளியேற ஒரு சமிக்ஞையாக இருக்கும் என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் ரோமில் உள்ள மொசாத் தலைவரான மெர் அமெட், அவரே அவர்கள் மீது ஒரு கண் வைத்திருப்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.”

ரெட்ஃபா ஒரு விளக்கக்காட்சிக்காக இஸ்ரேலுக்கு அழைக்கப்பட்டார். அங்கு அவர் 24 மணிநேரம் மட்டுமே தங்கியிருந்தார். அப்போது, அவருக்கு முழு திட்டமும் விரிவாக விளக்கப்பட்டது. மொசாத் அவருக்கு ரகசியக் குறியீட்டைக் கொடுத்தது.

இஸ்ரேலிய உளவாளிகள் அவரை டெல் அவிவின் பிரதான வீதியான ஆலன்பை வீதிக்கு அழைத்துச் சென்றனர். மாலையில் தஃபாவில் உள்ள ஒரு நல்ல உணவகத்தில் அவருக்கு இரவு உணவு வழங்கப்பட்டது.

அங்கிருந்து ஏதென்ஸுக்குச் சென்ற ரெட்ஃபா, பாக்தாத்துக்கு பாதையை மாற்றி, இறுதிக் கட்டத் திட்டத்திற்குத் தயாராகத் தொடங்கினார்.

  • இஸ்ரேலிய உளவு நிறுவனமான மொசாத்

பட மூலாதாரம்,JAICO PUBLISHING HOUSE

இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாத் பற்றி ஏராளமான புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன.

இப்போது அடுத்த பிரச்சனை என்னவென்றால், விமானியின் குடும்பத்தை இராக்கில் இருந்து எப்படி முதலில் இங்கிலாந்துக்கும் பிறகு அமெரிக்காவிற்கும் அனுப்புவது என்பதுதான்.

ரெட்ஃபாவுக்கு பல சகோதரிகள் மற்றும் மைத்துனர்கள் இருந்தனர். அவர் வெளியேறுவதற்கு முன்பாக, அவர்கள் அனைவரையும் இராக்கிலிருந்து வெளியேற்றுவது மிகவும் அவசியம். இந்நிலையில், அவரது குடும்பத்தினர் இஸ்ரேலுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று முடிவு செய்யப்பட்டது.

மைக்கேல்பர் சோஹர் மற்றும் நிசிம் மிஷால் ஆகியோர் தங்களது புத்தகத்தில்,”ரெட்ஃபாவின் மனைவி கமிலாவுக்கு இந்தத் திட்டத்தைப் பற்றி எதுவும் தெரியாது. ரெட்ஃபா அவரிடம் உண்மையைச் சொல்ல பயந்தார்,” என எழுதியுள்ளனர்.

மேலும், “ரெட்ஃபா நீண்ட காலமாக ஐரோப்பாவிற்குச் செல்வதாக மட்டுமே தனது மனைவியிடம் கூறியிருந்தார். இதனால் அவர் தனது இரண்டு குழந்தைகளுடன் முதலில் ஆம்ஸ்டர்டாம் சென்றார்.”

“அங்கே அவர்களுக்காகக் காத்திருந்த மொசாத் ஆட்கள் அவர்களை பாரிஸுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு ஸீவ் லிரோன் அவர்களைச் சந்தித்தார். ரெட்ஃபாவின் மனைவிக்கு இன்னும் இவர்கள் யார் என்றுகூடத் தெரியவில்லை.”

  • இஸ்ரேலிய உளவு நிறுவனமான மொசாத்

பட மூலாதாரம்,JEWISH VIRTUAL LIBRARY

ரெட்ஃபாவை வரவேற்க இஸ்ரேலில் ரகசியமாக உயரதிகாரிகள் காத்திருந்தனர்.

லிரோன் பின்னர் நினைவு கூர்ந்த போது, “அவர்கள் ஒரு சிறிய குடியிருப்பில் தங்க வைக்கப்பட்டனர், அங்கு இரண்டு படுக்கைகள் மட்டுமே இருந்தது. நாங்கள் அந்த படுக்கையில் அமர்ந்தோம்,” என எழுதினார்.

“இஸ்ரேல் செல்லும் விமானப் பயணத்துக்கு முந்தைய நாள் இரவு, நான் ஒரு இஸ்ரேலிய அதிகாரி என்றும் அவரது கணவரும் மறுநாள் அங்கு வருவார் என்றும் கமிலாவிடம் கூறினேன்.”

ஆனால் “ அதைக் கேட்டுத் திடுக்கிட்ட அவர், இரவு முழுவதும் அழுதுகொண்டிருந்தார். இடையிடையே கத்திக்கதறவும் செய்தார். அவர் கணவர் ஒரு துரோகி என்றும், அவர் செய்ததை தனது சகோதரர்கள் கண்டுபிடித்தால் தன்னைக் கொன்றுவிடுவார்கள் என்றும் கூறினார்,” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து, “தங்களுக்கு வேறு வழியில்லை என்பதை அவர்கள் உணர்ந்தார்கள். வீங்கிய கண்கள் மற்றும் நோய்வாய்ப்பட்ட குழந்தையுடன், நாங்கள் ஒரு விமானத்தில் ஏறி இஸ்ரேலுக்கு வந்தோம்,” என லிரோன் எழுதுகிறார்.

ஜூலை 17, 1966 இல், ஐரோப்பாவில் உள்ள மொசாத் அலுவலகம் ஒன்றுக்கு முனிரிடமிருந்து ஒரு குறியீட்டு கடிதம் வந்தது. அதில் அவர் இராக்கில் இருந்து வெளியேறுவதற்கான முழு தயாரிப்புகளையும் செய்துமுடித்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆகஸ்ட் 14 அன்று, முனிர் ரெட்ஃபா மிக்-21 விமானத்தில் பறந்தார். ஆனால் விமானத்தின் மின் அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, அவர் விமானத்தை மீண்டும் திருப்பி ரஷித் விமான தளத்தில் தரையிறக்க வேண்டியிருந்தது.

  • இஸ்ரேலிய உளவு நிறுவனமான மொசாத்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இஸ்ரேலை வந்தடைந்த மிக்-21 விமானத்தை அந்நாட்டு அரசு கைப்பற்றியது.

பின்னர் விமானத்தில் ஏற்பட்ட தவறு பெரிதாக இல்லை என முனீர் தெரிந்து கொண்டார். உண்மையில், அவரது காக்பிட்டில் ஒரு எரிந்த கம்பியிலிருந்து வெளியேறிய புகையால் நிரம்பியிருந்தது. ஆனால் முனீர் எந்த ஆபத்தையும் எளிமையாக எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. எனவே அவர் ரஷித் விமான தளத்தில் விமானத்தை தரையிறக்கினார்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு, முனீர் மீண்டும் அதே மிக்-21 இல் பறந்தார். முன்னரே தீர்மானிக்கப்பட்ட பாதையில் அவர் தொடர்ந்து பறந்தார்.

இது குறித்து மைக்கேல் பார் சோஹர் மற்றும் நிசிம் மிஷால் ஆகியோர் தங்களது புத்தகத்தில், “முதலில் முனீர் பாக்தாத் நோக்கிச் சென்றார். பின்னர் தனது விமானத்தை இஸ்ரேலை நோக்கித் திருப்பினார். இராக் கட்டுப்பாட்டு அறை இதைக் கவனத்தில் கொண்டு முனிரைத் திரும்பச் சொல்லி மீண்டும் மீண்டும் செய்திகளை அனுப்பியது,” என எழுதியுள்ளனர்.

“இந்த செய்திகள் முனிருக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாத நிலையில், ​​அவருடைய விமானத்தைச் சுட்டு வீழ்த்துவோம் என்று மிரட்டினார்கள். ஆனால், அதற்குப் பிறகு முனீர் தனது ரேடியோவை அணைத்துவிட்டார்.”

இராக் விமானி இஸ்ரேலிய எல்லைக்குள் நுழைந்தவுடன் இஸ்ரேலிய விமானத் தளத்திற்கு அழைத்துச் செல்லும் பணியை மேற்கொள்ள இரண்டு இஸ்ரேலிய விமானிகள் நியமிக்கப்பட்டிருந்தனர்.

  • இஸ்ரேலிய உளவு நிறுவனமான மொசாத்

பட மூலாதாரம்,JEWISH VIRTUAL LIBRARY

புதிதாக வந்த மிக்-21 விமானத்தைப் பற்றி அனைவரும் நன்கு அறிந்துகொள்ள முயன்றனர்.

இஸ்ரேலின் சிறந்த விமானிகளில் ஒருவராகக் கருதப்படும் ரியான் பாக்கருக்கு ரெட்ஃபாவை அழைத்துச் செல்லும் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது.

ரியான் விமானப்படை கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு செய்தியை அனுப்பினார். அதில், “எங்கள் விருந்தினரின் வேகத்தை குறைத்து, அவர் இறங்க விரும்புவதாக எனக்கு கட்டைவிரலை உயர்த்திக் காட்டினார். மேலும் அவர் சர்வதேச விமானிகளின் சமிஞைகளையும் தனக்குத் தெரிவித்துள்ளார். இது அவர் நல்லபடியாக இங்கு வந்து சேர்ந்துவிட்டார் என்பதைக் காட்டுகிறது,” எனக்குறிப்பிட்டிருந்தார்.

பாக்தாத்தில் இருந்து புறப்பட்டு, சரியாக 65 நிமிடங்களுக்குப் பிறகு, ரெட்ஃபாவின் விமானம் 8 மணிக்கு இஸ்ரேலில் உள்ள ஹஸோர் விமான தளத்தில் தரையிறங்கியது.

‘ஆபரேஷன் டயமண்ட்’ தொடங்கிய ஒரு வருடத்திற்குள் மற்றும் 1967 ஆறு நாள் போர் தொடங்குவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு, இஸ்ரேலிய விமானப்படை அந்த சகாப்தத்தின் உலகின் அதி நவீன விமானமான மிக்-21 ஐ வைத்திருந்தது.

மொசாத் அணி சாத்தியமற்றதை சாத்தியமாக்கியது என்றே சொல்லவேண்டும். இஸ்ரேலில் தரையிறங்கிய பிறகு, ஒரு துயரமடைந்த மற்றும் மயக்கமடைந்த முனீர் ரெட்ஃபா, ஹஸோர் விமான தளத் தளபதியின் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு அவர் யார், என்ன செய்கிறார் என்று புரியாமல் பல மூத்த இஸ்ரேலிய அதிகாரிகள் அவருக்கு ஒரு விருந்து கொடுத்தனர். முனீர் ரெட்ஃபா, ஒரு மூலையில் அமர்ந்து ஒரு வார்த்தை கூட பேசாமல் இருந்தார்.

  • இஸ்ரேலிய உளவு நிறுவனமான மொசாத்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மொசாத்தின் முன்னாள் தலைவர் மெய்ர் ஆமெட் மிக்-21 விமானத்தை இஸ்ரேலுக்குக் கொண்டுவந்ததற்காக எப்போதும் நிலைத்திருக்கும் பெயரைப் பெற்றார்.

சிறிது ஓய்வுக்குப் பின்னர், நிம்மதியடைந்த பின்னர் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் இஸ்ரேலுக்கு விமானம் மூலம் அனுப்பிவைக்கப்பட்டனர்.

அதன் பின்னர், முனீர் ரெட்ஃபா ஒரு செய்தியாளர் சந்திப்பில் உரையாற்ற அழைத்துச் செல்லப்பட்டார். இராக்கில் கிறிஸ்தவர்கள் எப்படி சித்திரவதைக்கு ஆளாகின்றனர், குர்துகள் மீது அவர்களது சொந்த மக்களே எப்படி குண்டுகளை வீசுகிறார்கள் என்று அங்கு அவர் விளக்கமாகக் கூறினார்.

செய்தியாளர் சந்திப்புக்குப் பிறகு, டெல் அவிவ் நகருக்கு வடக்கே உள்ள கடற்கரை நகரமான ஹெர்ஸ்லியாவுக்கு முனீர் அவரது குடும்பத்தினரைச் சந்திக்க அழைத்துச் செல்லப்பட்டார்.

மெய்ர் அமெட் பின்னர் எழுதியபோது, “நான் அவரை அமைதிப்படுத்தவும், ஊக்கப்படுத்தவும் மற்றும் அவருடைய செயலைப் பாராட்டவும் என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன்,” எனக்குறிப்பிட்டார்.

“அவருக்கும் அவர் குடும்பத்துக்கும் முடிந்ததைச் செய்வோம் என்று உறுதியளித்தேன். ஆனால் முனிரின் குடும்பத்தினர் குறிப்பாக அவரது மனைவி எதற்கும் ஒத்துழைக்கத் தயாராக இல்லை.”

மிக்-21 விமானத்துடன் முனீர் தரையிறங்கிய சில நாட்களுக்குப் பிறகு, இராக் விமானப்படையில் அதிகாரியாக இருந்த அவரது மனைவியின் சகோதரரும் இஸ்ரேலை அடைந்தார்.

அவருடன் ஷேமேஷ் மற்றும் அவரது காதலி காமிலியும் வந்தனர். அவர் தனது சகோதரி மிகவும் உடல்நிலை சரியில்லாமல் இருந்த ஐரோப்பாவிற்கு அழைத்துச் செல்லப்படுவதாக அவருக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர் தனது மைத்துனரான முனீரை இஸ்ரேலில் சந்திக்க வைத்தபோது, ​​மிகுந்த ஆத்திரமடைந்தார்.

துரோகி என்று சொல்லி முனீர் ரெட்ஃபா மீது பாய்ந்து கொல்ல முயன்றது மட்டுமின்றி, இந்த சதியில் தனது சகோதரிக்கு தொடர்பு இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

தங்கைக்கு கூட அது தெரியாது என்பதை அவரால் நம்பவே முடியவில்லை. அவரது சகோதரி நிறைய தெளிவுபடுத்தினார். ஆனால் அது அவரிடம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. சில நாட்களுக்குப் பிறகு அவர் மீண்டும் இராக் திரும்பினார்.

  • இஸ்ரேலிய உளவு நிறுவனமான மொசாத்

பட மூலாதாரம்,JEWISH VIRTUAL LIBRARY

மேற்குலகின் போர் விமானங்களை விட அதிவேகமாகப் பறப்பதில் மிக்-21 விமானம் சிறந்த திறன்களைப் பெற்றிருந்தது.

அந்த மிக்-21 விமானத்தை முதன்முதலில் இஸ்ரேலின் மிகவும் பிரபலமான விமானப்படை விமானி டேனி ஷபீரா ஓட்டினார்.

விமானம் தரையிறங்கிய ஒரு நாள் கழித்து, விமானப்படைத் தலைவர் அவரை அழைத்து மிக்-21 ஐ ஓட்டும் முதல் மேற்குலக விமானி என்று பாராட்டினார். “இந்த விமானத்தை நீங்கள் ஆழமாகப் புரிந்துகொண்டு அதன் சாதக பாதகங்களைக் கண்டறிய வேண்டும்,” என்றும் அப்போது அவர் கூறினார்.

டேனி ஷாபிரா பின்னர் நினைவு கூர்ந்த போது,”நாங்கள் மிக்-21 விமானம் நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் சந்தித்தோம். ரெடிஃபா என்னிடம் அனைத்து பட்டன்களையும் எப்படிப் பயன்படுத்துவது எனக் கற்றுக்கொடுத்தார். நாங்கள் விமானத்தைப் பற்றிய அனைத்து வழிமுறைகளையும் அப்போது அறிந்துகொண்டோம். அவை அரபு மற்றும் ரஷ்ய மொழியில் எழுதப்பட்டுள்ளன,” எனக்குறிப்பிட்டார்.

“ஒரு மணி நேரம் கழித்து நான் விமானத்தை ஓட்டப் போகிறேன் என்று அவரிடம் சொன்னேன். அவர் ஆச்சரியப்பட்டார். அவர், நீங்கள் விமானத்தை நன்றாக ஓட்டிப் பழகவில்லை என்று சொன்னார். நான் ஒரு சோதனை விமானி என்று அவரிடம் பதில் அளித்தேன். அதற்கு அவர் சரி என்று கூறினார்.”

  • இஸ்ரேலிய உளவு நிறுவனமான மொசாத்

பட மூலாதாரம்,JEWISH VIRTUAL LIBRARY

அமெரிக்க போர்விமானங்களை விட மிக்-21 விமானத்தின் எடையும் குறைவாக இருந்தது.

மைக்கேல் பார் சோஹர் மற்றும் நிசிம் மிஷால் ஆகியோர் தங்களது புத்தகத்தில், “இஸ்ரேலிய விமானப்படையின் அனைத்து மூத்த அதிகாரிகளும் மிக்-21 ரகத்தின் முதல் விமானத்தைப் பார்க்க ஹட்ஸரை அடைந்தனர்.”

“முன்னாள் விமானப்படைத் தலைவர் எஸர் வெய்ஸ்மானும் அங்கு இருந்தார். ஷபீராவின் தோளில் தட்டிக்கொடுத்து, ஸ்டண்ட் எதுவும் செய்ய வேண்டாம் என்றும் விமானத்தை பத்திரமாக தரையிறக்கும்படியும் கூறினார். ரெட்ஃபாவும் அங்கே இருந்தார்.”

விமானம் தனது பயணம் முடிந்து ஷபீரா அந்த விமானத்தை இறங்கியவுடன் முனீர் ரெட்ஃபா அவரை நோக்கி ஓடி வந்தார். கண்களில் கண்ணீர் வழிந்தது.

“உன்னைப் போன்ற ஒரு விமானியை அரபிகள் ஒருபோதும் தோற்கடிக்க முடியாது,” என்றார். சில நாட்கள் நன்றாக அந்த விமானத்தை ஓட்டிப்பழகிய பிறகு, மிக்-21 விமானம் மேற்குலக நாடுகளில் ஏன் இவ்வளவு மரியாதையுடன் பார்க்கப்படுகிறது என்பதை விமானப்படை நிபுணர்கள் புரிந்துகொண்டனர்.

இது அதிக உயரத்தில் மிக வேகமாக பறக்கக்கூடியது என்பதுடன் மிராஜ்-3 போர் விமானத்தை விட ஒரு டன் எடை குறைவானது.

  • இஸ்ரேலிய உளவு நிறுவனமான மொசாத்

பட மூலாதாரம்,JEWISH VIRTUAL LIBRARY

இஸ்ரேலில் அந்த புதிய விமானத்தைப் பற்றி அனைத்து விமானிகளும் அறிந்துகொள்ள முயன்றனர்.

விமானத்தை ஆய்வு செய்து பறக்கவிட அமெரிக்க நிபுணர்கள் குழுவை இஸ்ரேலுக்கு அனுப்பினர். ஆனால் இஸ்ரேலியர்கள் அவர்களை விமானத்தின் அருகில் விடவில்லை.

சோவியத் விமான எதிர்ப்பு ஏவுகணை SAM-2 வின் தொழில்நுட்பத்தை அமெரிக்கா முதலில் தன்னுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது இஸ்ரேலின் நிபந்தனையாக இருந்தது. பின்னர் அமெரிக்கா இதற்கு ஒப்புக்கொண்டது.

அதன் பின் அமெரிக்க விமானிகள் இஸ்ரேலை அடைந்தனர். அவர்கள் மிக்-21 ஐ ஆய்வு செய்தது மட்டுமின்றி அதை பறக்கவிட்டனர்.

மிக்-21ன் ரகசியத்தை அறிந்த இஸ்ரேலிய விமானப்படைக்கு உண்மையில் நிறைய பலன் கிடைத்தது. அரபு நாடுகளுடன் ஆறு நாள் போருக்குத் தயாராக அவர்களுக்கு அது உதவியது.

அந்த மிக்-21 இன் மர்மம் இஸ்ரேலின் வெற்றியில் பெரும் பங்கு வகித்தது. மேலும், சில மணிநேரங்களில் இஸ்ரேல் முழு அரபு விமானப்படையையும் அழித்தது.

  • இஸ்ரேலிய உளவு நிறுவனமான மொசாத்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மிக்-21 தொழில்நுட்பத்தைத் தெரிந்துகொள்ள அமெரிக்கா அதீத ஆர்வம் காட்டியது.

இதற்கு முனீர் ரெட்ஃபாவும் அவரது குடும்பத்தினரும் பெரும் விலை கொடுக்க வேண்டியதாயிற்று.

மைக்கேல் பார் சோஹர் மற்றும் நிசிம் மிஷால் ஆகியோர் தங்களது புத்தகத்தில், “முனீர் இஸ்ரேலில் கடுமையான, தனிமையான மற்றும் மகிழ்ச்சியற்ற வாழ்க்கையை வாழ வேண்டிய நிலை காணப்பட்டது. தனது நாட்டிற்கு வெளியே ஒரு புதிய வாழ்க்கையை உருவாக்குவது அவருக்கு முடியாத காரியமாகிவிட்டது. முனீரும் அவரது குடும்பத்தினரும் மன அழுத்தத்தில் சிக்கி இறுதியில் அவரது குடும்பம் உடைந்தது,” என்று எழுதியுள்ளனர்.

மேலும், “மூனீர் இஸ்ரேலை தனது தாயகமாக மாற்ற முயன்றார். இஸ்ரேலிய எண்ணெய் நிறுவனங்களின் டகோட்டா விமானங்களைக் கூட பறக்கவிட்டார். ஆனால் அவர் அங்கு இருப்பதாக ஒருபோதும் உணரவில்லை,” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இஸ்ரேலில் அவருக்கு இரானிய அகதி என்ற அடையாளம் வழங்கப்பட்டது. ஆனால் அவரால் இஸ்ரேலின் வாழ்க்கைக்கு தன்னை மாற்றிக் கொள்ள முடியவில்லை. சில நாட்களுக்குப் பிறகு, அவர் இஸ்ரேலை விட்டு வெளியேறி ஒரு மேற்கத்திய நாட்டில் போலி அடையாளத்துடன் குடியேறினார்.

அங்கும், பாதுகாப்புப் பணியாளர்களால் சூழப்பட்டிருந்த போதிலும், அவர் தொடர்ந்து தனிமையில் இருந்தார். ஒரு நாள் இராக்கின் இழிவான ‘முகபாரத்’ தன்னை இலக்காகக் கொண்டுவிடுமோ என்று அவர் எப்போதும் பயந்து கொண்டே இருக்கும் நிலைதான் இருந்தது.

  • இஸ்ரேலிய உளவு நிறுவனமான மொசாத்

பட மூலாதாரம்,PENGUIN

இஸ்ரேலிய வரலாற்றாசிரியரும் எழுத்தாளருமான மைக்கேல் பார் சோஹர், மிக்-21 பற்றி ஏராளமான தகவல்களை தனது நூல்களில் எழுதியுள்ளார்.

முனீருக்காகக் கண்ணீர் வடித்த இஸ்ரேலியர்கள்

முனிர் ரெட்ஃபா 1988 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மிக்-21 விமானத்தை இஸ்ரேலுக்கு பறக்கவிட்டு 22 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது வீட்டில் மாரடைப்பால் காலமானார்.

அவரது நினைவாக மொசாத் ஒரு நினைவஞ்சலியை ஏற்பாடு செய்தது. மறக்க முடியாத காட்சி இது.

இஸ்ரேலிய உளவு நிறுவனமான மொசாத்

பட மூலாதாரம்,HBO MOVIES

ரெட்ஃபாவின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் ‘ஸ்டீல் தி ஸ்கை’ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

இராக் விமானியின் மரணத்திற்கு இஸ்ரேலின் உளவுத்துறை இரங்கல் தெரிவித்தது.

பின்னர், ரெட்ஃபாவின் வாழ்க்கையைப் பற்றி ‘ஸ்டீல் தி ஸ்கை’ மற்றும் ‘கெட் மீ மிக்-21’. என்ற இரண்டு திரைப்படங்களில் அதிகம் விவாதிக்கப்பட்டது.

ரெட்ஃபாவால் கொண்டுவரப்பட்ட மிக்-21, இஸ்ரேலில் உள்ள ஹடாஜரின் விமானப்படை அருங்காட்சியகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அது இன்று வரை அங்கே வைக்கப்பட்டுள்ளது.

பிபிசி தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *