இலங்கை இந்திய ரூபாவில் கையிருப்பு பரிமாற்றம் ; ஒப்பந்தம் கைச்சாத்து!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று (02) நடைபெற்றது.

இதன்போது, இந்தியா – இலங்கைக்கும் இடையிலான வரலாற்று மற்றும் கலாசார ரீதியிலான பௌத்த தொடர்புகளைப் பலப்படுத்துவதற்கான வேலைத் திட்டங்களுக்காக இந்திய அரசாங்கத்தினால் 15 மில்லியன் அமெரிக்க டொலர்களை அன்பளிப்புச் செய்வதற்கான இருதரப்பு ஆவணங்களும் பரிமாற்றிக்கொள்ளப்பட்டன.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இந்த அன்பளிப்பானது இரு நாடுகளுக்கும் இடையிலான பௌத்த தொடர்பைப் பலப்படுத்தும் முக்கிய அம்சமெனவும் சுட்டிக்காட்டப்பட்டது.

பௌத்த விகாரைகளின் கட்டுமானம், புனரமைப்பு, கலாச்சார பரிமாற்றம் தொல்பொருள் ஒத்துழைப்பு, இரு நாடுகளும் அந்யோன்ய தாதுக்களைக் காட்சிப்படுத்தல், மத ஒத்துழைப்புக்களை மேம்படுத்திக்கொள்ளல் போன்ற விடயங்களுக்காக மேற்படி நிதி அன்பளிப்பைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

குறித்த அன்பளிப்பை, இலங்கை பொருளாதாரத்தின் மாறிவரும் நிலைமையை கருத்திற்கொண்டு, இலங்கை ரூபாயிலிருந்து இந்திய ரூபா வரையிலான கையிருப்பு ரீதியான பரிமாற்றத்தை மேற்கொள்ள, இரு நாடுகளும் இணங்கியுள்ளதுடன், சந்தை நிலைமைகளுக்கு ஏற்ப அதனை மாற்றியமைக்கவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

இந்த இணக்கப்பாட்டுக்கு அமைவான பரிமாற்றத்தின் மூலம் இராஜதந்திர ஆவணங்கள் மூலம் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளமை இந்திய – இலங்கை உறவுகளை மேலும் பலப்படுத்துவதாக அமைந்துள்ளது.

இருநாடுகளுக்கும் இடையிலான இணக்கப்பாட்டுக்கு அமைவான இருதரப்பு ஒப்பந்தம், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் முன்னிலையில், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் புத்தசாசன சமய, கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன ஆகியோரால் பரிமாற்றிக்கொள்ளப்பட்டது.

இந்த அன்பளிப்பின் கீழ் நாடளாவிய பௌத்த விகாரைகளில் 10 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் சூரிய சக்தி திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதோடு, அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் இதன்போது கைசாத்திடப்பட்டது. அதனையடுத்து இருநாட்டு பிரதிநிதிகளும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *