பிரித்தானியாவில் 10 மாவட்ட சபைகளில் ஒன்று வங்குரோத்து

பிரித்தானியாவில் உள்ள 10 மாவட்ட சபைகளில் (county councils) ஒன்று வங்குரோத்து நிலையை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பல முக்கிய சேவைகள் ஆபத்தான நிலையை அடைந்துள்ளதாக உள்நாட்டு அரசாங்க தலைமைகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

கடந்த செப்டெம்பர் மாதம் Birmingham நகர சபை வங்குரோத்து நிலையை அடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அதன் செலவீனங்களை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து உள்நாட்டு அதிகாரிகளின் செலவீனம் குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், நிதி நெருக்கடியை தடுப்பதற்கு மாவட்ட சபைகள் அரசாங்கத்திடம் இருந்து அவசர நிதியுதவி கோரியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மாவட்ட சபைகள் கடந்த சில காலமாக நிதி அழுத்தங்கள் குறித்த கவலையை எழுப்பி வரும் நிலையில், இதனை தொடர்ந்தும் நீடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்துவரும் இரண்டு ஆண்டுகளில் 4 பில்லியன் பவுண்கள் நிதி இடைவெளி காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் பணவீக்கம் என்பது செலவுகள் அதிகரிப்பதற்கான ஒரு காரணியாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், சில சபைகள் தம்மால் வழங்கப்படும் சேவைகளுக்கான தேவை அதிகரிப்பை எதிர்கொள்கின்றன.

குழந்தைகள் பராமரிப்பு, இளைஞர் சமூக பாதுகாப்பு, கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் போன்ற துறைகளில் இதில் உள்ளடங்குகின்றன.

இதன்படி, மாவட்ட சபைகள் 2023/24 ஆம் ஆண்டில் 39 மில்லியன் பவுன்களை தமது வரவு செலவுத் திட்டத்திற்கு அதிகமாக செலவழிக்கும் என கணிப்பிடப்பட்டுள்ளது.

அந்தச் சூழ்நிலையில், சட்டப்படி தேவைப்படும் அத்தியாவசிய சேவைகளைத் தவிர வேறு எந்தப் புதிய செலவையும் அவர்களால் வழங்க முடியாது என தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *