காஸாவை சுற்றி வளைக்கும் இஸ்ரேல் எச்சரிக்கைகளைத் தாண்டி உயிருக்கு போராடும் மக்கள்

ஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், காஸா நகரை இஸ்ரேல் சுற்றி வளைக்க ஆரம்பித்துள்ளது.

இது அப்பகுதியில் நிலவும் பதற்றத்தை அதிகரிப்பதாகவே இருக்கிறது.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே கடந்த சில வாரங்களாகப் போர் தொடர்ந்து நடந்து வருகிறது. ஹமாஸ் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் நடவடிக்கையை இஸ்ரேல் தீவிரப்படுத்தி இருக்கிறது.

காஸா மீது இஸ்ரேல் தொடர்ந்து ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது. தாக்குதலை நிறுத்தி, பலஸ்தீன கைதிகளை விடுவித்தால் தங்களிடம் இருக்கும் அனைத்து பணயக் கைதிகளையும் விடுவிக்கத் தயாராக உள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.

இருந்த போதிலும், இஸ்ரேல் ஹமாஸ் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

தொடர் தாக்குதல்:

காஸா மீதான தரைவழித் தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தி இருக்கிறது. கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் காஸா எல்லைக்குள் செல்லும் இஸ்ரேல் பீரங்கிகள் ஹமாஸ் இலக்குகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்துவதை வாடிக்கையாக வைத்திருந்தது.

இரவில் சில மணி நேரம் தாக்குதல் நடத்திவிட்டு பின்னர் மீண்டும் இஸ்ரேலுக்குத் திரும்புவதையே இஸ்ரேல் இராணுவம் வாடிக்கையாக வைத்திருந்தது.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் காஸா மீதான படையெடுப்பு வேண்டாம் என்றே தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இருப்பினும், இஸ்ரேல் படையெடுப்பு முடிவைக் கைவிடுவதாகத் தெரியவில்லை.

இதன் காரணமாகவே காஸா எல்லையில் இஸ்ரேல் தொடர்ச்சியாக இராணுவத்தைக் குவித்து வருகிறது. இதனால் அங்கே மிகவும் பதற்றமான ஒரு சூழலே ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே இஸ்ரேல் பீரங்கிகள் இன்றைய தினம் காஸா நகரை நோக்கி முன்னேறி உள்ளது.

காஸா நகரைச் சுற்றி வலைக்கும் இஸ்ரேல் இராணுவம் எப்போது வேண்டுமானாலும் தாக்குதலை ஆரம்பிக்கும் என்றே தெரிகிறது. இதனால் காசாவில் உள்ள முக்கிய சாலைகளும் முடங்கி இருக்கிறது.

தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதலில் பல ஹமாஸ் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இஸ்ரேல் இராணுவத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், “கடந்த 24 மணி நேரத்தில் நாங்கள் 600க்கும் மேற்பட்ட இலக்குகளைத் தாக்கியுள்ளோம்.

இதற்கு முன்பு 450 இலக்குகளைத் தாக்கியிருந்தோம். வரும் நாட்களில் தாக்குதலை மேலும் தீவிரப்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்.

வடக்கு காஸா பகுதியில் தான் பயங்கரவாதிகள் இருக்கிறார்கள். அவர்களைக் குறிவைத்தே தாக்குதல் நடத்தி வருகிறோம்”என்று அவர் தெரிவித்தார்.

இது ஒரு பக்கம் இருக்கக் காஸா நகரின் தெற்கு பகுதியில் இருந்தும் ஜெய்துன் மாவட்டத்திற்குள் இஸ்ரேல் பீரங்கிகள் நுழைந்துள்ளன.

வடக்கு காஸாவில் இருந்து பொதுமக்கள் தெற்கு நோக்கி வரும் நிலையில், அந்த முக்கிய சாலையையும் இஸ்ரேல் இராணுவம் முடக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வடக்கில் இருந்து தெற்கு நோக்கி வரும் முக்கிய சாலையான சலாஹெதின் சாலையை இஸ்ரேல் முடக்கியுள்ளதாகவும் அந்த வழியாக வரும் அனைத்து வாகனங்களை நோக்கியும் துப்பாக்கிச் சூடு நடத்துவதாகவும் காஸா மக்கள் கூறுகின்றனர்.

வடக்கு காஸாவில் தாக்குதல் நடத்துவதால் உடனடியாக தெற்கு நோக்கிச் செல்லும் படி இஸ்ரேல் ஏற்கனவே பல முறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதனால் கடந்த சில வாரங்களில் ஏற்கனவே பெரும்பாலான மக்கள் வடக்கு காசாவை விட்டு வெளியேறிவிட்டனர். இருப்பினும், இன்னுமே கூட சில ஆயிரம் பேர் அங்கே இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த நேரத்தில் வெளியேறும் பாதையை இஸ்ரேல் மறித்துள்ளதாக வெளியான இந்தத் தகவல் பகீர் கிளப்புவதாகவே இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *