இஸ்ரேல் – ஹமாஸ் போரில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் பலி

இஸ்ரேல் – ஹமாஸ் போரில் 3,000 க்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக சிறுவர்களைப் பாதுகாக்கும் அனைத்துலக அமைப்பான ‘சேவ் தி சில்ரன்’ அமைப்பு தெரிவித்துள்ளது.

மூன்று வாரங்களுக்கும் மேலாக நீடிக்கும் போரில் காஸா பகுதியில் ஏறக்குறைய 3,195 பலஸ்தீனியக் குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக காஸா சுகாதார அமைச்சை மேற்கோள் காட்டி அந்த அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும் ஆக்கிரமிக்கப்பட்ட வெஸ்ட் பேங்க் பகுதியில் 33 குழந்தைகளும் இஸ்ரேலில் 29 குழந்தைகளும் கொல்லப்பட்டுள்ளதாகவும் அது குறிப்பிடுகிறது.

“இறப்பு எண்ணிக்கை பயமுறுத்துவதாக உள்ளது.வன்முறை தொடர்வதுடன் காஸாவில் விரிவடைந்தும் வருவதால், இன்னும் பல குழந்தைகள் பெரும் ஆபத்தில் உள்ளனர்” என்று ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனப் பகுதியில் உள்ள ‘சேவ் தி சில்ரன்’ அமைப்பின் இயக்குனர் ஜேசன் லீ தெரிவித்துள்ளார்.

“குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஒரே வழி போர்நிறுத்தம்தான்,” என்றார் அவர்.

கடந்த 7ஆம் திகதி அன்று ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலில் நடத்திய திடீர் தாக்குதலில் 1,400 பேர்வரை கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கான இஸ்ரேலிய குடிமக்கள் காயமடைந்தனர்.

இதனை தொடர்ந்து இரு தரப்பும் மேற்கொண்டு வரும் தாக்குதல்களால் காஸாவில் மட்டும் இதுவரையில் 8,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதில் அதிகமானோர் பெண்கள், குழந்தைகள் ஆகும்.

போரில் பெண்களும், குழந்தைகளும் அதிகளவில் பாதிக்கப்படுவதால் உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று ஐ.நா. அமைப்பும், உலக நாடுகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

காஸாவில் நிலைமை மோசடைந்து வருவதாக எச்சரித்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் போர் நிறுத்தத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதற்கிடையே, இஸ்ரேல் அல்லது காஸாவிற்கு படைகளை அனுப்பும் எண்ணம் வாஷிங்டனுக்கு இல்லை என்று அமெரிக்காவின் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் கூறியுள்ளார்.

தன்னைத் தற்காத்துக்கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை உண்டு என்ற அமெரிக்காவின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தும் வேளையில் காஸா மக்களின் பாதுகாப்பிற்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். போர் விதிகளைக் கடைப்பிடித்து, காஸா மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்க வேண்டும் என்று அவர் கூறினார்.

காஸாவின் பலஸ்தீனப் பகுதியில் உள்ள பொதுமக்களை தாக்குதல்களிலிருந்து பாதுகாக்க விரைந்து பாதுகாப்புப் படையை அனுப்புமாறு தென்னாப்பிரிக்கா நேற்று திங்கட்கிழமை ஐ.நாவுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

தென்னாப்பிரிக்கா நீண்ட காலமாக அவ்வட்டாரத்தில் அமைதிக்காகக் குரல்கொடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *