‘பேரழிவாக மாறக்கூடிய சாத்தியம்’

காசா பகுதியில் வசிக்கும் மக்களை ‘பாதுகாப்புப் காரணங்களுக்காக’ அங்கிருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் எச்சரித்துள்ளது.

காசா நகரத்தில் வசிப்பவர்களை தெற்கு பகுதிகளுக்குச் செல்லுமாறு இஸ்ரேல் ராணுவம் அறிவித்திருக்கிறது.

கடந்த சனிக்கிழமை (அக்டோபர் 7) அன்று ஹமாஸ் ஆயுதக்குழு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, இஸ்ரேல் காசா மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இதில் 447 குழந்தைகள், 248 பெண்கள் உட்பட 1,417 பேர் உயிரிழந்துள்ளதாக பாலத்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த எதிர்தாக்குதலின் பகுதியாக, தரைவழித் தாக்குதல் நடத்த காசா எல்லையில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள், கனரக பீரங்கிகள் மற்றும் டாங்கிகளைத் திரட்டி வருகிறது.

இதைத்தொடர்ந்தே, அடுத்த 24 மணிநேரங்களில் காசா நகரத்தில் இருக்கும் மக்களை தெற்கிலிருக்கும் பகுதிகளுக்கு இடம்பெயரச் சொல்லியிருக்கிறது இஸ்ரேல்.

ஐ.நா.வின் தகவலின்படி, வாடி காசா எனப்படும் பகுதிக்கு வடக்கே இருக்கும் 11 லட்சம் மக்கள் ஒரே நாளில் தெற்கு நோக்கி இடம் பெயர வேண்டிவரும்.

  • இஸ்ரேல், பாலத்தீனம், காசா

‘அடுத்த சில நாட்களில் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள்’

அடுத்த அறிவிப்பு வரும்போதுதான் வெளியேறிய மக்கள் மீண்டும் காசாவுக்குத் திரும்ப முடியும் என்றி இஸ்ரேலிய ராணுவம் அறிவித்திருக்கிறது.

காசா நகரின் கீழ் சுரங்கப்பாதைகளுக்குள்ளும், பொதுமக்கள் வசிக்கும் கட்டிடங்களுக்குள்ளும் ஹமாஸ் இயக்கத்தினர் பதுங்கியிருப்பதாக இஸ்ரேல் கூறியிருக்கிறது.

“உங்கள் சொந்த பாதுகாப்பு மற்றும் உங்கள் குடும்பங்களின் பாதுகாப்பிற்காகவும், உங்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தும் ஹமாஸ் அமைப்பினரிடமிருந்து விலகிச் செல்லுங்கள்,” என காசா நகரின் பொதுமக்களிடம் இஸ்ரேல் ராணுவம் வலியுறுத்தியிருக்கிறது.

மேலும், அடுத்து வரும் நாட்களில், இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளின் நடவடிக்கைகள் காசா நகரில் குறிப்பிடத்தக்க அளவில் இருக்கும் என்றும் பொதுமக்களுக்குத் தீங்கு விளைவிக்காமல் இருக்க விரிவான முயற்சிகளை மேற்கொள்ளும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

  • இஸ்ரேல், பாலத்தீனம், காசா
‘ஏற்கனவே துயரமான சூழ்நிலையை ஒரு பேரழிவாக மாற்றக்கூடிய சாத்தியத்தைத் தவிர்க்க, இந்த உத்தரவை ரத்து செய்யுமாறு’ ஐ.நா. கோரிக்கை விடுத்துள்ளது

‘பேரழிவாக மாறக்கூடிய சாத்தியம்’

வாடி காசாவின் வடக்கே வசிக்கும் அனைவரும் அடுத்த 24 மணி நேரத்தில் தெற்கு காசாவுக்கு இடம்பெயர வேண்டும் என்று இஸ்ரேலிய ராணுவம் ஐ.நா.விடம் கூறியுள்ளதாக ஐ.நா செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இது தோராயமாக 11லட்சம் மக்களை இடம்பெயரச் சொல்வது என்று ஐ.நா. கூறுகிறது. இது காசா பகுதியின் முழு மக்கள்தொகையில் பாதி. இதில் அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட காசா நகரமும் அடங்கும்.

பயங்கரமான மனிதாபிமான விளைவுகளை ஏற்படுத்தாமல் இத்தகைய இடப்பெயர்வு நடைபெறுவது சாத்தியமற்றது என ஐ.நா. கூறுகிறது.

‘ஏற்கனவே துயரமான சூழ்நிலையை ஒரு பேரழிவாக மாற்றக்கூடிய சாத்தியத்தைத் தவிர்க்க, இந்த உத்தரவை ரத்து செய்யுமாறு’ ஐ.நா. கோரிக்கை விடுத்துள்ளது.

இஸ்ரேலிய இராணுவத்தின் தொடர்பு அதிகாரிகள் காஸாவில் உள்ள ஐ.நா குழுத் தலைவர்களிடம் இந்த உத்தரவு பற்றி கூறியிருக்கின்றனர். அந்த உத்தரவில் அனைத்து ஐ.நா ஊழியர்களும், ஐ.நா நடத்தும் பள்ளிகள், சுகாதார மையங்கள் மற்றும் மருத்துவமனைகள் உள்ளடக்கிய ஐ.நா வசதிகளில் அடைக்கலம் பெற்றவர்களும் வெளியேறும்படிக் கூறப்பட்டிருக்கிறது.

இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஒரு ஒரு அவசரக் கூட்டத்தை நடத்த உள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன.

  • இஸ்ரேல், பாலத்தீனம், காசா
ஐ.நா.வில் இருக்கும் இஸ்ரேல் நாட்டின் தூதர் கிலாட் எர்டன், காஸாவில் வசிப்பவர்களுக்கு இஸ்ரேல் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்து வருவதாகக் கூறியுள்ளார்

‘ஐ.நா. இஸ்ரேலுக்கு போதிக்கக் கூடாது’

ஐ.நா.வின் கோரிக்கைக்கு எதிர்வினையாற்றியிருக்கும் இஸ்ரேல், அதனை ‘வெட்கக்கேடானது’ என்று கூறியிருக்கிறது.

ஐ.நா.வில் இருக்கும் இஸ்ரேல் நாட்டின் தூதர் கிலாட் எர்டன், காஸாவில் வசிப்பவர்களுக்கு இஸ்ரேல் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்து வருவதாகவும், ஹமாஸுக்கு எதிரான அதன் இராணுவ நடவடிக்கையில் ஈடுபடாதவர்களுக்கு தீங்கு விளைவிப்பதைக் குறைக்க முயற்சிப்பதாகவும் கூறினார்.

“பல ஆண்டுகளாக, ஹமாஸ் குழுவுக்கும், அதன் ஆயுதங்கள் மற்றும் கொலைக்குற்றங்களுக்கும் மறைவிடமாகப் பயன்படும் காசா பகுதியின் கட்டுமானங்களைப் பற்றி ஐ.நா சபை பாராமுகமாக இருந்து வருகிறது,” என்று அவர் கூறினார்.

“இப்போது, ஹமாஸ் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட இஸ்ரேலின் குடிமக்களுக்கு ஆதரவாக நிற்பதற்குப் பதிலாக, ஐ.நா. இஸ்ரேலுக்குப் போதனை வழங்குகிறது,” என்று எர்டன் கூறினார்.

மேலும் அவர், “பணயக்கைதிகளை மீட்பது, ஹமாஸைக் கண்டிப்பது மற்றும் இஸ்ரேலின் தற்காப்பு உரிமையை ஆதரிப்பது போன்றவற்றில் இப்போது ஐ.நா கவனம் செலுத்துவதே நல்லது,” என்று கூறினார்.

  • இஸ்ரேல், பாலத்தீனம், காசா
காசாவின் பொது சுகாதார நிலையங்கள் அடிக்கடி மின்வெட்டு மற்றும் மருத்துவப் பொருட்கள் பற்றாக்குறையால் பாதிக்கப்படுகின்றன. பல சேவைகள் மற்றும் சிறப்பு சிகிச்சைகள் கிடைக்கவில்லை

காசாவில் தீவிரமடைந்திருக்கும் மனிதநேயச் சிக்கல்கள்

சுமார் 22 லட்சம் மக்கள் வசிக்கும் காசா பகுதிக்குச் செல்லும் அத்தியாவசியப் பொருட்களை இஸ்ரேல் முற்றிலுமாகத் துண்டித்துள்ளது.

இதனால் அங்குள்ள மருத்துவமனைகள், சுகாதார நிறுவனங்கள், பள்ளிகள், மற்றும் பிற அத்தியாவசியச் சேவைகள் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கின்றன.

முன்னதாகவே காசாவில் உள்ள 80% மக்களுக்கு சர்வதேச உதவி தேவைப்பட்ட நிலையில், இந்த நடவடிக்கை அவர்களின் நிலைமையை மேலும் மோசமாக்கியது.

காசாவில் உள்ள ஒரே ஒரு மின் உற்பத்தி நிலையத்திலும், எரிபொருள் இல்லாததால், அக்டோபர் 11-ஆம் தேதி மின் உற்பத்தி நின்றுவிட்டது. இதனால், அங்குள்ள மருத்துவமனைகள் தங்களது ஜெனரேட்டர்கள் மூலம் படுகாயமடைந்த மக்களுக்கு சிகிச்சையளித்து வருகின்றனர். குறைந்த அளவு எரிபொருளையே கொண்டிருந்த சில மருத்துவமனைகள், சில நாட்களில் தங்களிடம் உள்ள எரிபொருள் தீர்ந்துவிடும் எனக்கூறியுள்ளன.

தண்ணீர் விநியோகத்தைத் துண்டிக்கும் இஸ்ரேலின் நடவடிக்கையால், ஆறு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் குடிநீர் இன்றி தவிக்கன்றனர். உள்ளூரில் உள்ள தண்ணீர் குழாய்கள் மற்றும் கழிவுநீர் அமைப்புகள் செயல்படுவதற்கும் எரிபொருள் தேவைப்படும்.

காசாவிற்கு சரக்கு கொண்டு வரப்படும் கெரேம் ஷாலோம் பகுதியும் மூடப்படுவதால், உணவு இருப்பும் குறைந்து வருகிறது. காசாவில் உள்ள மூன்றில் ஒரு பங்கு கடைகள் பொருட்கள் பற்றாக்குறை உள்ளதாகக் கூறியுள்ளன. பெரும்பாலான கடைகளில் இரண்டு வாரங்களுக்கு போதுமான உணவு இருப்பதாக ஐ.நா. கூறியுள்ளது.

காசாவின் பொது சுகாதார நிலையங்கள் அடிக்கடி மின்வெட்டு மற்றும் மருத்துவப் பொருட்கள் பற்றாக்குறையால் பாதிக்கப்படுகின்றன. பல சேவைகள் மற்றும் சிறப்பு சிகிச்சைகள் கிடைக்கவில்லை.

குறைந்தது இரண்டு லட்சம் மக்கள், தங்கள் வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டதாலும், உயிருக்கு பயந்தும் இடம் பெயர்ந்துள்ளனர். பெரும்பாலானோர் ஐ.நா. நடத்தும் பள்ளியில் தஞ்சமடைந்துள்ளனர்.

பிபிசி தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *