பூமியை விட்டுப் பிரியும் நிலா: இனி ஒரு நாள் என்பது 50 நாளுக்குச் சமம்

நிலா ஆண்டுதோறும் 3.78 செ.மீ என்ற அளவில் பூமியைவிட்டு விலகிச் சென்றுகொண்டே இருக்கிறது.

இந்த உண்மை சமீபத்தில்தான் உறுதி செய்யப்பட்டது.

பூமியில் இருந்து பல்வேறு விண்கலங்கள் நிலாவில் தரையிறக்கப்பட்டுள்ளன.

பல ஆண்டுகளுக்கு முன்பாக சோவியத் அதன் லூனா விண்கலத்தை அனுப்பியது.

அமெரிக்காவின் அப்போலோ விண்கலம் சென்று தரையிறங்கியது.

அமெரிக்க விண்வெளி வீரர்கள் நிலாவில் கால் பதித்தார்கள்.

இப்படியான பயணங்களின்போது ரெட்ரோ ரிஃப்ளக்டர் (Retroreflector) என்றழைக்கப்படும் ஒரு கண்ணாடிப் பொருளை அங்கு பொருத்தினார்கள்.

அதன் மூலமாக நிலாவுக்கும் பூமிக்குமான தொலைவை விஞ்ஞானிகள் அளந்தார்கள்.

நிலா, பூமிக்கு இடையிலான தொலைவை கணக்கிடுவது எப்படி?

கடந்த 1969ஆம் ஆண்டு அப்பல்லோ 11 1970இல் லூனா 17, 1971 அப்பல்லோ 14, 15, 1973இல் லூனா 21. இப்படியாக நிலவுக்குச் சென்ற ஐந்து விண்கலங்களும் நிலாவின் தரைப்பரப்பில் கண்ணாடி போன்ற அந்த லேசர் பிரதிபலிப்பான் கருவியை நிலவில் அமைத்தார்கள்.

அந்தக் கருவியை வைத்து நிலாவின் தொலைவை எப்படித் துல்லியமாக அளவிடுகிறார்கள்?

நிலாவில் லேசர் பிரதிபலிப்பான்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதற்குப் பிறகு பூமியில் இருந்து துடிப்பான லேசர் ஒளிக்கற்றையை நிலவை நோக்கி அனுப்புவார்கள்.

அந்த லேசர் ஒளிக்கற்றை நிலாவிலுள்ள பிரதிபலிப்பானில் பட்டுப் பிரதிபலித்து மீண்டும் பூமியை நோக்கித் திரும்பி வரும்.

பூமியிலிருந்து நிலாவுக்குச் செல்ல எடுத்துக்கொண்ட நேரம், அங்கிருந்து திரும்பி வருவதற்கு எடுத்துக்கொண்ட நேரம், இந்த இரண்டையும் வைத்து ஒளி பூமியிலிருந்து சென்று திரும்ப எவ்வளவு நேரம் எடுத்துக்கொண்டது என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.

நிலவுக்கு அனுப்பப்பட்ட அந்த ஒளியின் வேகம் என்ன என்பது அனுப்பியவர்களுக்குத் தெரியும். ஆகவே, ஒளியின் வேகத்தையும் அது நிலவுக்குச் சென்று, திரும்ப எடுத்துக்கொண்ட நேரத்தையும் வைத்து, பூமிக்கும் நிலவுக்குமான தொலைவைத் துல்லியமாகக் கணக்கிட முடியும்.

நிலா, பூமியை விட்டு விலகிச் செல்வது எப்படி உறுதியானது?

நிலா பூமியை நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது. ஆகவே இரண்டுக்கும் இடையிலான தொலைவு ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டே இருக்கும்.

அதன்படி, அதிகபட்ச தொலைவில் இருக்கும்போது இரண்டுக்கும் இடையே 406,731 கி.மீ தூரம் இருக்கும். குறைந்தபட்சம் தொலைவில், இரண்டுக்கும் இடையே 364,397 கி.மீ தூரம் இருக்கும். இரண்டுக்கும் இடையிலான சராசரி தொலைவு 384,748 கி.மீ

மேலே பார்த்த லேசர் ஒளிக்கற்றையை தினமும் நிலவுக்கு அனுப்பி, தொலைவைக் கணக்கிட்டுக் கொண்டே வந்தால், நிலா, பூமிக்கு இடையிலான தொலைவு குறித்த தினசரி தரவுகள் கிடைக்கும்.

பல ஆண்டுகள் இதுபோல் தரவுகளைச் சேகரித்து, அதன் சராசரியைக் கணக்கிட்டால், பூமிக்கும் நிலவுக்கும் இடையிலான தொலைவு மாறி வருகிறதா இல்லையா என்பதைக் கண்டுபிடிக்க முடியும். அதன்படி இரண்டுக்கும் இடையிலுள்ள தூரம் மாறிக்கொண்டு வருவதாகத் தற்போது உறுதி செய்துள்ளனர்.

பூமியில் ஒரு நாளின் நீளம் கூடிக்கொண்டே போகிறதா?

பூமியின் மீது நிலா செலுத்தும் ஈர்ப்புவிசையின் கவர்ச்சியால், இங்குள்ள கடலைப் பிடித்து இழுக்கிறது. ஆகையால்தான் கடல் சற்று பொங்கியபடியே இருக்கிகிறது. இதுதான் கடல் ஏற்றம் என்று அழைக்கப்படுகிறது.

பூமி தன்னைத்தானே சுற்றும்போது, நிலாவும் பிடித்து இழுப்பதால் பூமியின் சுழற்சி வேகம் மெல்ல மெல்லக் குறைந்துகொண்டே வருகிறது. ஆனால், பூமியைப் பிடித்து இழுத்து ஒரு பிரேக் போலச் செயல்படும் நிலா சிறுகச் சிறுக விலகிச் செல்வதால், புவி தன்னைத் தானே சுற்றிக்கொள்ள எடுக்கும் கால அளவு கூடிக்கொண்டே போகிறது.

அதாவது, ஒரு நாளுக்கான கால அளவு கூடிக்கொண்டே போகிறது. 1600ஆம் ஆண்டில் இருந்து இப்போது வரை ஒப்பிட்டால், சராசரியாக ஒரு நாளின் நீளம் 1.09 மில்லி விநாடி கூடியுள்ளதாக விஞ்ஞானிகள் கணக்கிட்டுள்ளனர்.

பூமி ஒரு காலத்தில் இதைவிட வேகமாகச் சுற்றிக் கொண்டிருந்தது என்பதே இதன் அர்த்தம். அப்படியென்றால் முன்பு ஒரு நாளின் நீளம் 24 மணிநேரமாக இருந்திருக்காது. அதைவிடக் குறைவாக இருந்திருக்கும்.

நிலாவுக்கும் பவளப் பாறைகளுக்கும் என்ன சம்பந்தம்?

கடல்மட்ட ஏற்ற இறக்கம், ஒருநாளில் எவ்வளவு நேரம் இருக்கிறதோ அதைச் சார்ந்து இருக்கும். ஒரு நாளைக்கு ஒருமுறை கடல்மட்ட ஏறி இறங்கும். கடல்மட்டம் ஒருமுறை ஏறிய பிறகு, மீண்டும் அடுத்த முறை ஏறும் நேரம் என இரண்டுக்கும் இடையே இருக்கும் கால அளவு என்பது இங்கே முக்கியமானது.

ஏனெனில், அந்தக் கால அளவானது பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ள எடுத்துக்கொள்ளும் நேரத்துடன் ஒத்துப்போகிறது. பூமியில் உள்ள பல உயிரினங்களின் இயக்கம், கடல் மட்டத்தின் இந்த ஏற்ற இறக்கத்தைச் சார்ந்திருக்கிறது.

மரங்களைப் பொருத்தவரை, அவற்றின் தண்டுகளில் வயதைக் குறிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஒரு வளையம் ஏற்படுவதைப் பார்க்கமுடியும். அதேபோல் பவளப்பாறைகளில் கடல்மட்டம் ஏறி இறங்கும்போதெல்லாம் பட்டை போன்ற ஒரு கோடு ஏற்படும்.

பவளப் பாறைகளில் இருக்கக்கூடிய இந்தப் பட்டைகளைப் பார்த்து, பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ள எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்கிறது என்பதை நாம் கணக்கிடலாம்.

இப்போது காணக்கூடிய பவளப்பாறைகளில் 24 மணிநேரத்திற்கு ஒரு பட்டை என்ற விகிதத்தில் பட்டைகள் உருவாகின்றன. ஆனால், பல லட்சக்கணக்கான ஆண்டுகள் பழமையான பவளப்பாறைகளின் தொல் படிமங்களை எடுத்துப் பார்த்தால், அவற்றில் வித்தியாசமாக இருக்கின்றன.

சுமார் 140 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவற்றின் இத்தகைய தடயங்களை எடுத்துப் பார்த்தபோது, வெறும் 18 மணிநேரத்திற்கு ஒருமுறை பூமி தன்னைத்தானே சுற்றி வந்தது எனக் கண்டுபிடித்துள்ளனர்.

அதேபோல, 320 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் அனைத்து கண்டங்களும் இணைந்து பாஞ்சியா என்று சொல்லக்கூடிய ஒற்றைப் பெரும் கண்டமாக இருந்தது. அப்போது நிலாவும் புவிக்கு மிக நெருக்கமாக, வெறும் 2,70,000 கி.மீ தொலைவில் இருந்தது. அந்த நேரத்தில் பூமி தன்னைத்தானே தலைதெறிக்கும் வேகத்தில் சுற்றிக் கொண்டிருந்தது. அப்போது புவியில் ஒரு நாளின் நீளம் வெறும் 13 மணிநேரம் மட்டுமே.

பூமிக்கு பிரேக் போல செயல்படும் நிலா விலகிப் போனால் என்ன ஆகும்?

இப்படியாகப் பல தரவுகளை வைத்து ஆய்வு செய்தபோது, 450 கோடி ஆண்டுகளுக்கு முன்னர், பூமியின் சுழற்சி வேகம் வெறும் 8 மணிநேரம் மட்டுமே, அதாவது ஒரு நாளின் நீளம் வெறும் 8 மணிநேரம் மட்டுமே எனத் தெரிய வந்தது.

சுமார் 450 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமி உருவான தொடக்கத்தில் நெருப்புக் குழம்பு போன்ற தோற்றத்தில் இருந்தது. அப்போதுதான் செவ்வாய் கிரகத்தின் வடிவத்தை ஒத்த ஒரு பெரும் கோள் போன்ற வான்பொருள் பூமியின் மீது வந்து மோதியது.

அந்த மோதலின்போது ஏற்பட்ட வெடிப்பில்தான் இப்போதைய நிலாவும் பூமியின் உருவானது. இப்படியாக நிலா உருவான பிறகுதான் பூமியின் வேகம் மெல்ல மெல்லக் குறைந்து, நாம் இப்போது பார்க்கும் 24 மணிநேரம் என்ற அளவை எட்டியது.

சுமார் 450 கோடி ஆண்டுகளுக்கு முன்பு, பூமி தன்னைத் தானே சுற்றிக்கொள்ள வெறும் 8 மணிநேரமே எடுத்துக்கொண்டிருந்த நிலையில், நிலா உருவான பிறகு அந்த அவகாசம் மாறத் தொடங்கியது.

நிலாவின் ஈர்ப்பு விசையால், பூமியின் சுழற்சி வேகத்தில் பிரேக் போல ஒரு தடை இயக்கம் ஏற்பட்டது. அதன் காரணமாக புவியின் வேகம் மெல்லக் குறைந்துகொண்டே வந்தது. அதனால், சுமார் 85 கோடி ஆண்டுகளுக்கு முன்பு 21 மணிநேரத்திற்கு ஒருமுறை தன்னைத்தானே சுற்றிக்கொள்ளும் நிலையை அடைந்தது. இதற்கான தொல்படிம ஆதாரங்களும் நமக்குக் கிடைத்துள்ளன.

அதேபோல, 40 கோடி ஆண்டுகளுக்கு முன்பு கிடைத்த தொல்படிம ஆதாரங்களின்படி, அப்போது பூமி 22 மணிநேரத்திற்கு ஒருமுறை தன்னைத்தானே சுற்றிக்கொண்டது.

இப்படியாக சிறுகச் சிறுக, பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ள அதிக நேரம் எடுத்துக்கொண்டே போனால் என்ன ஆகும்?

சுமார் 5,000 கோடி ஆண்டுகளுக்குப் பிறகு, பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 50 நாட்கள் எடுத்துக்கொள்ளும். அதாவது இப்போதைய நேரக்கணக்குப்படி, 25 நாட்கள் பகல், 25 நாட்கள் இரவு என்ற நிலையை பூமி எட்டிவிடும்.

ஆனால், இப்படியொரு நிலை வருமா என்று உங்களுக்குக் கேள்வி எழலாம். அதையேதான் விஞ்ஞானிகளும் சிந்திக்கிறார்கள்.

ஏனெனில், சூரியன் அதற்குள்ளாகவே சிவப்பு ராட்சன் எனச் சொல்லப்படும் ஒரு பிரமாண்ட நிலையை எட்டிவிடும். சூரியனின் அளவு மிகப் பெரிதாகி, புதன், வெள்ளி ஆகிய கோள்களை நிச்சயமாக விழுங்கிவிடும்.

அதற்கு அடுத்து, பூமியை விழுங்குமா விழுங்காதா என்பது இதுவரை உறுதியாகத் தெரியாது. அப்படிப்பட்ட ஓர் எதிர்காலம்தான், பூமிக்கும் நிலாவுக்கும் காத்திருக்கிறது.

பிபிசி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *