இலங்கை நபர்களால் வெளிநாட்டில் பதுக்கப்பட்டுள்ள 56 பில்லியன் அமெரிக்க டொலர்கள்!

கடந்த சில வருடங்களில் 56 பில்லியன் அமெரிக்க டொலர்கள் சக்தி வாய்ந்த நபர்களால் வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ளதாக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

“இந்த ஆண்டு மட்டும் 9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பதுக்கப்பட்டுள்ளன” என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர்,

வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்த நபர்களின் பணத்தை மீளக் கொண்டுவருமாறு உத்தரவிடுவதற்கான விசேட பிரேரணை ஒன்றை நான் முன்மொழிகிறேன்.

சில பாராளுமன்ற உறுப்பினர்களின் சில செயலாளர்கள் தலா 150 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் பதுக்கி வைத்துள்ளனர்” என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

“இவ்வாறு பதுக்கி வைக்கப்பட்டுள்ள நிதிகள் திரும்பக் கொண்டுவரப்பட்டால் இலங்கை மற்ற நாடுகளுக்கு செலுத்த வேண்டிய அனைத்து கடன்களையும் தீர்க்க முடியும்,” என்று அவர் மேலும் கூறினார்.

அத்துடன், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு உறுப்பினர்களை நியமிக்கத் தவறியமைக்காக அரசியலமைப்பு பேரவையை அமைச்சர் கடுமையாக சாடியுள்ளார்.

“புதிதாக நிறைவேற்றப்பட்ட ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தின் பிரகாரம் ஜனாதிபதிக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களை அனுப்புவதற்கு அரசியலமைப்பு பேரவை கடமைப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு பேரவை உறுப்பினர்கள் தூங்குகிறார்களா?” எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

அரசியலமைப்புச் சபையானது சபாநாயகரின் தலைமையில் இயங்கும் அதேவேளையில் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அவர்களால் பரிந்துரைக்கப்பட்டவர்கள், சிவில் சமூகத்தைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிட்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *