இலங்கையில் அறிமுகமாகும் புதிய இரண்டு வரிகள்!

 

இலங்கையில் வரி வருமானம் எதிர்பார்த்த வருவாய் இலக்குகளை விட குறைந்துள்ளதால் கூடுதல் வருவாயை பெறுவதற்கு அடுத்த ஆண்டு மேலும் இரண்டு புதிய வரிகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

செல்வ வரி மற்றும் பரம்பரை வரி என்னும் இரண்டு வரிகளே அடுத்த ஆண்டு முதல் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் செல்வ வரி என்பது ஒருவர் கொண்டிருக்கும் சொத்தின் மீது விதிக்கப்படும் வரியாகும். பரம்பரை வரி என்பது ஒருவர், தனது மூதாதையரின் சொத்தில் இருந்து ஈட்டும் வருமானத்தின் மீது விதிக்கப்படும் ஒரு வகை வரியாகும்.

நாட்டின் நிதியை மேற்பார்வையிடும் புதிய நாடாளுமன்ற மேற்பார்வைக் குழு சமர்ப்பித்த அறிக்கையின்படி, அடுத்த ஆண்டு நடைமுறைக்கு வரும் இந்த வரிகளுக்குத் தேவையான சட்டத்தை உருவாக்குவதற்கு நிதி அமைச்சகம் பணிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் இந்த மேறபார்வைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

அரசாங்க செலவினங்கள் அதிகம்
இந்தக்குழுவின் அறிக்கையின்படி, அரசாங்க செலவினங்கள் வருவாயை விட அதிகமாக இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

இந்த ஆண்டின் முதல் பாதியான ஜனவரி முதல் ஜூன் வரை, மூன்று முக்கிய நிறுவனங்களான சுங்கம், உள்நாட்டு வருமானவரி திணைக்களம் மற்றும் மதுவரித் திணைக்களம் ஆகியவற்றின் இலக்குகள் கனிக்கப்பட்ட அளவு எட்டப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் உள்நாட்டு இறைவரி திணைக்களம் இந்த பாதி ஆண்டுக்கான 1.667 டிரில்லியன் ரூபாய் வருமான மதிப்பீட்டில் 41.81 சதவிகிதமான 696.94 பில்லியன் ரூபாய்களை மட்டுமே வசூலித்துள்ளது.

அதே நேரத்தில் சுங்கம் இதுவரை மதிப்பிடப்பட்ட 1.22 டிரில்லியனில் 32.79 சதவிகிதமான 400.07 பில்லியன் ரூபாய்களையே வசூலித்துள்ளது.

மதுவரி திணைக்களம் மதிப்பிடப்பட்ட இலக்கான 217 பில்லியனில் 41 சதவீதமான 88.963 பில்லியன் ரூபாய்களை மாத்திரமே வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *