குழந்தைகள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தடை

அயர்லாந்தில் உள்ள கிரேஸ்டோன்ஸ் என்ற நகரத்தில் குழந்தைகள் ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஸ்மார்ட்ஃபோன் களின் பயன்பாடு வெகுவாக அதிகரித்துள்ளது. அதுவும் இன்று குழந்தைகளின் பெரும் பொழுதுபோக்கு ஸ்மார்ட்ஃபோன் தான். சில பெற்றோர்களே குழந்தைகளுக்கு ஸ்மார்ட்போனை கொடுத்து பழக்கப்படுத்துகின்றனர்.
2021 ஆம் ஆண்டு தரவுகளின்படி, உலகத்தில் 10 வயது வரையுள்ள குழந்தைகளில் 5ல் 2 பங்கினர் ஸ்மார்ட்ஃபோன் வைத்துள்ளனர். 12 வயதுகளில் 71%, 14 வயது வரையுள்ள குழந்தைகளில் 91% பேர் ஸ்மார்ட்ஃபோன் வைத்திருக்கின்றனர்.
இந்நிலையில் அயர்லாந்தில் உள்ள ஒரு நகரத்தில் குழந்தைகள் ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பெற்றோர்களே முன்வந்து குழந்தைகளுக்கு ஸ்மார்ட்ஃபோன் கொடுக்க வேண்டாம் என்று முடிவு செய்து செயல்படுத்தியுள்ளனர்.
கிழக்கு அயர்லாந்தின் விக்லோ(wicklow) நாட்டில் கிரேஸ்டோன்ஸ் (greystones) நகரம் உள்ளது. இது டப்ளின் என்ற பகுதிக்கு தெற்கே 15 மைல் தொலைவில் உள்ள கடற்கரையோர நகரமாகும்.
இங்கு குழந்தைகள் பள்ளிப்படிப்பை முடிக்கும்வரை அவர்களுக்கு ஸ்மார்ட்ஃபோன் கொடுக்க வேண்டாம் என்று பெற்றோர்களே முடிவு செய்துள்ளனர்.
இந்த நகரத்தில் உள்ள எட்டு தொடக்கப்பள்ளிகள் முதலில், மாணவர்கள் மின்னணு சாதனங்களைக் கொண்டுவருவதற்கு தடை விதித்தன. அதன்பின்னர் பள்ளியின் பெற்றோர் சங்கங்கள் தாமாக முன்வந்து குழந்தைகளுக்கு ஸ்மார்ட்ஃபோன் கொடுக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளனர்.
தற்போது நகரத்தில் உள்ள ஒட்டுமொத்த மக்களும் குழந்தைகளுக்கு ஸ்மார்ட்ஃபோன் வாங்கித் தர வேண்டாம் என்று ஒருமித்தமாக முடிவு செய்துள்ளனர்.
உலகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சமீபத்தில் யுனெஸ்கோ கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *