ஊழல் உள்ள நாடு ஒருபோதும் உருப்படாது பாராளுமன்றத்தில் உதயா எம்.பி.

ஊழல் உள்ள நாடு ஒருபோதும் உருப்படாது என்று கூறுவர். அத்துடன் ஊழல் தலைதூக்கும் நாட்டில் அபிவிருத்தியும் முன்னேற்றமும் ஓரிடத்தில் முடங்கும்.

ஊழலற்ற ஒரு நாடாக நம் நாடு மாறும் போதுதான் பொருளாதாரமும் மக்களின் வாழ்க்கைதரமும் வளர்ச்சி அடையும்

லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர்ˮ என்பதற்கு இணங்க ஒவ்வொரு பிரஜையும்
செயற்பாட்டால்நாடு செழிக்கும்.

இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு சமூக விழிப்புணர்வை அடிப்படையாகக் கொண்டு இதுதொடர்பிலான பாடத்திட்டமொன்றை பாடசாலை பாட நூல்களில் உள்ளடக்குவதற்குகல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இலஞ்சம் மற்றும் ஊழல் அற்ற சமூகத்தை உருவாக்குவது தொடர்பிலான ஐக்கிய நாடுகள்அமைப்பின் ஒப்பந்தத்தில் 2004ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கை கைச்சாத்திட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட
இரண்டாவது நாடாகவும் இலங்கை
இருக்கின்றது. எனவே ஊழல் ஒழிப்பு
குறித்து அதிக கரிசனையுடன் செயற்பட வேண்டிய பொறுப்பு இலங்கைக்கு
உள்ளது.

அதனால் எமது நாட்டில் ஊழலை ஒழிக்க மிகவும் கடுமையான சட்டங்கள் அவசியம். அந்த வகையில் இங்கு கொண்டுவரப்பட்டுள்ள ஊழல் ஒழிப்பு சட்டமூலம் வரவேற்கக்கூடிய ஒரு முயற்சியாகும்.

ஊழல் ஒழிப்பு சட்டமூலத்திற்கு நாம் எதிரானவர்கள் அல்ல என்பதை நான் உறுதியாக கூறிக் கொள்ள விரும்புகிறேன்.

அரசியல் ரீதியாக அல்லது தனிப்பட்ட பழிவாங்குதலுக்கு அல்லாமல் இதய சுத்தியுடன் ஊழலை ஒழிக்கும் நோக்கத்தில் கொண்டு வரப்படும் சட்டத்திற்கு நான் ஒன்றல்ல இரண்டு கைகளையும் உயர்த்தி ஆதரவு தெரிவிப்பேன்.

வர்த்தமானியில் வெளியிடப்பட்ட சட்டமூலத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள பரிந்துரைகள் செயற்படுத்தப்படும் என நம்புகிறேன்.

இந்த சட்டமூலத்தில் சில பாராட்டத்தக்க விதிகள் இருந்தாலும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கும் அச்சுறுத்தல் உள்ளதாக பல தரப்பினரும் சுட்டிக்காட்டியுள்ளனர். குறிப்பாக ‘டிரான்ஸ்பேரன்சி இன்டர்நேஷனல்’ இது குறித்து மிகுந்த கரிசனை வெளியிட்டுள்ளது.

முறைப்பாடு செய்யும் தரப்பினரின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டிய அதேநேரம் அரசியல் குரோதம் அல்லது தனிப்பட்ட குரோதம் காரணமாக, பொய் முறைப்பாடு செய்யும் நபர்களுக்கு தண்டனை வழங்கவும் வழி செய்யப்பட வேண்டும்.

முறைப்பாடு செய்த உடனேயே, அதன் உண்மை தன்மை கண்டறியப்படாமல்,
ஊடகங்களுக்கு தகவல் வழங்குவது தவிர்க்கப்பட வேண்டும். அப்படி நடக்க வாய்ப்பளித்தால் தனிப்பட்ட அரசியல் சேறு பூசுதலுக்கு அது வழிவகுக்கும்.

அதற்கான முழு பொறுப்பை இந்த சட்டமூலத்தின் பின் அமைக்கப்படவுள்ள புதிய ஆணைக்குழு ஏற்க வேண்டும்.

தனியார் துறை சார்ந்த ஊழல் விடயங்கள் உட்பட, பாலியல் இலஞ்சம் சார்ந்த ஊழல்கள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகள் தொடர்பான ஊழல் குற்றங்கள் போன்ற விடயங்கள் இந்த உத்தேச ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தில் உள்ளடங்கப்பட்டுள்ள முக்கிய மாற்றங்களாக நான் பார்க்கிறேன்.

இந்த உத்தேச ஊழல் எதிர்ப்பு சட்டமூலமானது குறித்த குற்றங்களுக்கு விதிக்கும் அபராதத்தையும் கணிசமாக அதிகரித்துள்ளமை வரவேற்கத்தக்கது.

தற்போதைய சட்டத்தை போல் இன்றி, இந்த முன்மொழியப்பட்ட ஊழல் எதிர்ப்பு சட்டமூலமானது ஜனாதிபதியின் சொத்து மற்றும் பொறுப்புக்கள் பற்றிய விபரங்களை பிரகடனப்படுத்துமாறும் கோருகிறது. இது ஒரு சிறந்த மாற்றமாகும்.

அப்படியே நாட்டை ஆட்சி செய்த ஏனைய ஜனாதிபதிகளின் சொத்து விபரங்கள் குறித்தும் ஆராய்ந்தால் நமது நாடு செலுத்த வேண்டிய பாதி கடனை அடைந்துவிடலாம்.

கௌரவ சபாநாயகர் அவர்களே

“திருடன் கையில் சாவியை கொடுத்துவிட்டு, பொருட்களை காணவில்லை” என்ற கதையாக ஊழல் ஒழிப்பு சட்டம் அமைந்து விடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.

காரணம், இந்த அரசாங்கத்தில் உள்ள பலருக்கும் சொத்துக் குவிப்பு மற்றும் ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. பலர் மீது வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

அப்படி இருக்கையில் இந்த ஊழல் எதிர்ப்பு சட்டம் அவர்கள் மீது பாயுமா அல்லது வெறும் சட்டமாக மாத்திரமே இருந்து விடுமா என்ற சந்தேகமும் உள்ளது.

ஊழலுக்கு பெயர்போன நபர்களை அருகில் வைத்துக் கொண்டு ஜனாதிபதியும் நீதி அமைச்சரும் ஊழல் எதிர்ப்பு சட்டத்தை எவ்வாறு நடைமுறைப்படுத்தப் போகிறார்கள் என்பது புரியாத புதிராக உள்ளது.

ஒருப்புறம் ஊழல் எதிர்பபு சட்டம் கொண்டு வருவதும் மறுப்புறம் ஊடக அடக்கும் சட்டத்தை கொண்டு வருவதும் ஒன்றுக்கு ஒன்று முரண்ப்பாடான விடயமாகும். ஊடகத்தை முடக்கி எப்படி ஊழலை வெளிக்கொண்டு வரமுடியும்.

இந்த ஊழல்களின் பின்னணியில்
இருந்து செயற்பட்டவர்களை
தண்டிப்பது யார்?

நாட்டில் இடம்பெற்ற பழைய ஊழல்கள் குழிதோண்டி புதைக்கப்பட்டு விடுமா?

ஊழல் புரிந்தவர்கள் சட்டத்தில் இருந்து தப்பித்து சுதந்திரமாகத் திரிவார்களா?

பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில் உதயா எம்.பி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *