200 ஆண்டுகள் பழமையான ஆலமரத்தை 55 ஆண்டுகளாக பராமரிக்கும் மூதாட்டி!

200 ஆண்டுகள் பழமையான ஆலமரம் – 55 ஆண்டுகளாக பராமரிக்கும் மூதாட்டி

புதுச்சேரி மாநில வரலாற்றில் தவிர்க்க முடியாதது வில்லியனூரை அடுத்துள்ள கீழூர் கிராமம். காரணம் 1954-ல் பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த புதுச்சேரி, இந்தியாவுடன் இணையவது தொடர்பாக மக்கள் பிரதிநிதிகள் 178 பேரிடம் கருத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டு இந்தியாவுடன் இணைக்கப்பட்டது புதுச்சேரி.

இந்த வரலாற்றுப் புகழ்பெற்ற கீழூரின் அருகில் சிவராந்தகத்தில் இருக்கும் மற்றுமொரு சிறப்பம்சம், இங்கிருக்கும் ஆலமரம். நூற்றுக்கணக்கான விழுதுகளுடன் இயற்கையின் பெருமையை பறைசாற்றும் விதமாக கம்பீரமாகக் காட்சியளிக்கும் இந்த ஆலமரத்தின் வயது 200 ஆண்டுகளுக்கும் மேல் என்று சொல்லப்படுகிறது.

நான்கு ஆஸ்கர் விருதுகளை அள்ளிய ‘‘லைப் ஆஃப் பை’’ ஹாலிவுட் திரைப்படத்தின் பெரும்பகுதிக் காட்சிகள், இந்த ஊரிலும், இந்த ஆலமரத்தைச் சுற்றியும் எடுக்கப்பட்டவைதான். நூற்றாண்டுகளைக் கடந்து நிற்கும் இந்த ஆலமரத்தை, கடந்த 55 ஆண்டுகளாகப் பராமரித்து வருகிறார் மகேஸ்வரி என்ற மூதாட்டி.

82 வயதாகும் இவர் தனது 5 வயது மகனுடன் இந்த கிராமத்துக்கு வந்த அவர் ஆலமரத்தின் அருகில் உள்ள பொன்னியம்மன் கோயில் அருகில் தங்கி கோயிலையும், ஆலமரத்தையும் பராமரித்து வருகிறார். இவருக்கு 5 வயதில் இருந்து உதவும் மகன் முருகன் வளர்ந்து திருமணமாகி அவரது மகன்களும் தற்போது ஆலமரத்தை பாதுகாத்து வருகின்றனர்.

விழுது கீழே இறங்கியதும் யாரும் உடைத்து விடாமல் பாதுகாத்து பள்ளம் தோண்டி உரம் போட்டு பூமிக்குள் இறக்குகிறார்கள். அப்படி மண்ணில் இறக்கப்பட்ட விழுதுகள் 100-க்கும் மேற்பட்டவை மரங்களாய் எழுந்து நிற்கின்றன. மூன்று தலைமுறையாக ஆலமரத்தை பராமரிக்கும் மகேஸ்வரி மற்றும் அவரின் குடும்பத்தினர் அரசிடம் உதவி எதுவும் இதுவரை எதிர்பார்த்ததில்லை.

இது பற்றி மூதாட்டி மகேஸ்வரி கூறும்போது, ‘‘கடந்த 55 ஆண்டுகளாக இந்த ஆலமரத்தை பராமரித்து வருகின்றேன். எனது மகன் முருகன் எனக்கு துணையாக இருந்து வருகிறார். இப்போது அவருக்கு திருணமாகி இரண்டு மகன்கள் இருக்கின்றனர். அவர்களும் இந்த ஆலமரத்தை பார்த்துக் கொள்கின்றனர். நான் வரும்போது விழுதுகள் அறுந்தும் பராமரிப்பின்றியும் இருந்தது.

பிறகு நாங்கள் மரத்தின் மேலிருந்து விழுது கீழே இறங்கியதும் நெல், உளுத்தம்பொட்டு, ஏரி வண்டல், உரம் ஆகியவற்றை ஊற வைத்து பையினுள் போட்டு பாதுகாத்து பள்ளம் தோண்டி பூமிக்குள் புதைத்துவிடுவோம். அவ்வாறு செய்யப்பட்டது தான் இந்த நூற்றுக்கணக்கான விழுதுகள். இதுவரை இந்த ஆலமத்தில் இருந்து ஒரு விழுதையும் வெட்டவும், உடைக்கவும் நாங்கள் அனுமதித்ததில்லை.

இதற்காக தினமும் மரத்தை சுற்றி வருவேன். திருவந்திபுரம், கடலூர், அரும்பார்த்தபுரம் உள்ளிட்ட இடங்களில் இருந்து கோயில்களில் பயன்படுத்த விழுதுகளை கேட்டனர். ஆனால் அதற்கும் நாங்கள் மறுத்து விட்டோம். இதுவரை அரசிடம் இருந்து எந்த உதவியையும் கேட்டதில்லை.

ஆலமரத்தின் கீழ் அவ்வப்போது சுத்தம் செய்ய என்னுடைய முதியோர் உதவித்தொகையை கொண்டு இருவரை வைத்து கூலி கொடுத்து செய்வேன். கோயிலுக்கு வருபவர்கள் ஏதேனும் சிறு உதவி செய்தால் ஏற்றுக்கொள்வேன். பல்வேறு எதிர்ப்புகள், போராட்டங்களுக்கு இடையே நான் பராமரித்து வருகின்றேன். இந்த மரத்தை பாதுகாப்பதும், விழுதுகளை வளர்ப்பதும் தான் என்னுடைய முழுநேர பணி.

என்னுடைய ஆயுளுக்கு பிறகு என்னுடைய பிள்ளைகள் பராமரிக்க வேண்டும். அவர்கள் அதில் ஈடுபவார்கள்” என்றார். அதே நேரத்தில் இத்தகு வரலாற்று சிறப்பு மிக்க இந்த ஆலமரத்தை இதுவரை புதுச்சேரி அரசு கண்டு கொள்ளவில்லை. எனவே நூற்றாண்டுகள் கடந்த பழமையான பிரமாண்ட ஆலமரத்தை அரசு பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் பலரது கோரிக்கையாக இருந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *