இசைப்புயல் இசையில் பாடி அசத்தம் வைகைப்புயல் வடிவேலு!

மாரிசெல்வராஜ் இயக்கும் ‘மாமன்னன்’ படத்தின் முதல் சிங்கிள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. வடிவேலுவின் குரலில் வெளியான பாடலை ரசிகர்கள் அதிக அளவில் ஷேர் செய்து வருகின்றனர்.

‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ படங்களைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் திரைப்படம் ‘மாமன்னன்’. ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்கும் இப்படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். உதயநிதி ஸ்டாலின், ஃபஹத் பாசிலுடன் இப்படத்தில் வடிவேலு பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் முதல் தோற்றம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. அதில் நடிகர் வடிவேலுவின் லுக் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தற்போது இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘ராசா கண்ணு’ பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. யுகபாரதி எழுதியுள்ள இந்தப் பாடலை வடிவேலு பாடியுள்ளார்.

பாடல் எப்படி? – “பசித்த மீனை தின்றவர்களின் வயிற்றில் அலையடிக்கிறது கடல்” என்ற வாசகத்துடன் பாடல் வீடியோ தொடங்குகிறது. ‘தந்தானத் தானா…’ என தொடங்கும் வடிவேலுவின் குரல் உற்சாகத்தை கூட்டுகிறது. பின்னர் வரும் ‘மலையில தான் தீப்பிடிக்குது ராசா… என் மனசுக்குள்ள வெடி வெடிக்குது ராசா’ என உணர்வுபூர்வமாக சம்பந்தப்பட்ட உணர்ச்சியை தனது குரலின் வழியே நேர்த்தியாக கடத்துகிறார் வடிவேலு.

‘பஞ்சம் பசி பார்த்த சனம், படையிருந்தும் பயந்த சனம்’ பாடல் வரிகள் ஈர்க்கின்றன. மண்ணையும் மக்களையும் பிரதிபலிக்கும் நாட்டுப்புறபாடலாக உருவாகியுள்ள இப்பாடலில் தவில் உள்ளிட்ட கிராமிய இசைக்கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. உருமிக்கு இணையாக பேஸ்கிட்டார் பாடல் முழுவதும் பயணிப்பது சுகம். தவிலின் நடை அவ்வப்போது சன்னமாக ஒலித்திருப்பது மனதின் சோகங்களை அதிர வைத்திருக்கிறது. கர்ணன் படத்தின் பர்ஸ்ட் சிங்கிளும் கிட்டத்தட்ட இதுபோலவே இருந்தது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *