பஞ்சாப்பை வீழ்த்தியது கொல்கத்தா!

ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியது.

ஷிகர் தவான் அரைசதம்

ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் 7 விக்கெட் இழப்புக்கு 179 ஓட்டங்கள் எடுத்தது.

ஷிகர் தவான் 57 ஓட்டங்களும், ஷாருக் கான் 21 (8) ஓட்டங்களும் விளாசினர். தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டுகளும், ஹர்ஷித் ராணா 2 விக்கெட்டுகளும், சுயாஷ் சர்மா மற்றும் நிதிஷ் ராணா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

கொல்கத்தா அணி மிரட்டல்

அதன் பின்னர் களமிறங்கிய கொல்கத்தா அணியில் ஜேசன் ராய் 38 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து நிதிஷ் ராணா 38 பந்துகளில் 51 ஓட்டங்கள் விளாசினார்.

அடுத்து ஆந்த்ரே ரசல் மற்றும் ரிங்கு சிங் அதிரடியில் மிரட்டினர். சாம் கரண் வீசிய 19வது ஓவரில் ரசல் மூன்று சிக்ஸர்களை பறக்கவிட்டார். இதன்மூலம் கொல்கத்தா அணி எளிதில் வெற்றி பெற்று விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

திரில் வெற்றி

கடைசி 2 பந்துகளில் 2 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் ரசல் ஆட்டமிழந்தார். இதனால் கொல்கத்தா ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஒரு பந்தில் 2 ஓட்டங்கள் தேவைப்பட்டதால் பரபரப்பு உண்டானது. அர்ஷ்தீப் சிங் வீசிய பந்தை ரிங்கு சிங் பவுண்டரிக்கு விரட்டினார்.

இதன்மூலம் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணி புள்ளிப்பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறியது. வாணவேடிக்கை காட்டிய ஆந்த்ரே ரசல் 23 பந்துகளில் 3 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 42 ஓட்டங்களும், ரிங்கு சிங் 10 பந்துகளில் ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 21 ஓட்டங்கள் விளாசினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *