சொந்த மண்ணில் இந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது அவுஸ்திரேலியா!

சென்னையில் நடந்த கடைசி ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.

கடைசி ஒருநாள் போட்டி

இந்தியா – அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டி சென்னையில் நடந்தது. நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலியா, 49 ஓவரில் 269 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

அதிகபட்சமாக மார்ஷ் 47 ஓட்டங்களும், அலெக்ஸ் கேரி 38 ஓட்டங்களும், ஹெட் 33 ஓட்டங்களும் எடுத்தனர். பந்துவீச்சில் மிரட்டிய ஹர்திக் பாண்ட்யா மற்றும் குல்தீப் யாதவ் இருவரும் தலா 3 விக்கெட்டுகளும், ஷமி மற்றும் அக்சர் படேல் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

ரோகித் அதிரடி

பின்னர் களமிறங்கிய இந்திய அணியில் அதிரடியில் மிரட்டிய ரோகித் சர்மா 17 பந்துகளில் 30 ஓட்டங்கள் விளாசினார். அவரைத் தொடர்ந்து கில் 37 ஓட்டங்களிலும், ராகுல் 32 ஓட்டங்களிலும் வெளியேறினர்.

நிதானமாக ஆடிய கோலி 72 பந்துகளில் 54 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடந்த இரண்டு போட்டிகளில் சொதப்பிய சூர்யகுமார் யாதவ், இந்தப் போட்டியில் முதல் பந்திலேயே போல்டாகி மீண்டும் ஏமாற்றினார்.

அதன் பின்னர் ஹர்திக் மற்றும் ஜடேஜா இருவரும் வெற்றிக்காக போராடினர். ஆனால் ஆடம் ஜம்பா இருவரையும் வெளியேற்றினார்.

அவுஸ்திரேலியா வெற்றி

ஹர்திக் 40 ஓட்டங்களும், ஜடேஜா 18 ஓட்டங்களும் எடுத்தனர். இறுதியில் சிக்ஸர், பவுண்டரிகளை விளாசியதால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

ஆனால் ஸ்டோய்னிஸ் அவரை போல்டாக்கி வெளியேற்றினார். கடைசி விக்கெட்டாக குல்தீப் யாதவ் ரன் அவுட் ஆக, இந்திய அணி 248 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.

இதனால் 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா, ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *