தனிநபர் மீதான வரி தொடர்பில் விளக்கம்!

தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பதற்கான ஒரு குறுகிய கால உத்தியாகவே தனிநபர் வருமானம் அடிப்படையில் வரி விதிப்பு செய்யப்படுவதாகவும் இப்புதிய வரி விதிப்பு முறை ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைந்த சதவீதமென்றும் நிதிக் கொள்கை திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி கபில சேனாநாயக்க தெரிவித்தார்.

புதிய வரி அறவிடும் முறை தொடர்பில் தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களைச் சேர்ந்த பிரதிநிதிகளின் கருத்துகள் மற்றும் யோசனைகளை அடிப்படையாகக் கொண்டு, சில நிவாரணத்தைப் பெற்றுக்கொள்ளும் வகையிலான குறுகிய கால உத்திகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் சேனாநாயக்க தெரிவித்தார்.

புதிய வரிக் கொள்கை தொடர்பில் தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் பணிப்புரைக்கமைய, ஜனாதிபதியின் தொழிற்சங்கப் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய மற்றும் நிதிக் கொள்கை திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி கபில சேனாநாயக்க ஆகியோரின் தலைமையில் நிதியமைச்சின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.

தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய வருமான வரிக் கொள்கை தொடர்பில் அரச மற்றும் அரச இடையீட்டு நிறுவன ஊழியர்களுக்கிடையே சில பிரச்சினைகள் உருவாகியிருப்பதாகவும், அதன் காரணமாக அவர்கள் எதிர் நோக்கியுள்ள அசௌகரியங்களைக் கருத்திற் கொண்டே தொழிற்சங்க நடவடிக்கைகளில் இறங்கியிருப்பதாக சமன் ரத்னப்பிரிய சுட்டிக்காட்டினார்.

மேலும், தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும் அவசியமான கருத்துகள் மற்றும் யோசனைகளைப் பெற்றுக்கொள்வதே இக்கலந்துரையாடலின் பிரதான நோக்கமென்றும் அவர் தெரிவித்தார்.

இதன்போது, நிதிக் கொள்கை திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி கபில சேனாநாயக்க அரச வருமானம் மற்றும் அரச செலவினங்கள் தொடர்பிலும் வருடாந்த வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையை சமாளிக்க அரசு பின்பற்றும் நிதி உத்திகள் குறித்தும் விரிவாக விளக்கமளித்தார். “அதனடிப்படையிலேயே தனிநபர் வருமானத்திலிருந்து வரி விதிக்கப்படுகிறது. இது ஆசிய நாடுகளுடன் ஒப்பீட்டளவில் மிகக் குறைவான சதவீதம்.” என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், இலங்கையின் நிதி நிலைமை, வரி விதிப்பு தொடர்பிலுள்ள தனிநபர் பிரச்சினை, தனிநபர் வருமான வரி தொடர்பான வரி சீர்திருத்தங்கள், தனிநபர் வருமான வரிகளை அதிகரிப்பது மற்றும் வரி சீர்திருத்தத்தின் தாக்கங்கள் ஆகியவை தொடர்பிலும் கலாநிதி கபில சேனாரத்ன விளக்கமளித்தார்.

புதிய வரிச் சட்டத்துக்கமைய வரி செலுத்தப்பட வேண்டிய நபரிடமிருந்து தனிநபர் வருமானம் கணக்கிடப்படும் முறை தொடர்பில் உள்நாட்டு வருமானத் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி வருமான ஆணையாளர் கே.கே.ஐ எரந்த பல்வேறு வரிச் சட்டங்களை கோடிட்டுக் காட்டியதன் மூலம் விளக்கினார்.

இக்கூட்டத்திற்கு வருகை தந்திருந்த தொழிற்சங்கத் தலைவர்கள், இப்புதிய வரிக் கொள்கை காரணமாக தனிநபர் வருமானம் அடிப்படையில் அறவிடப்படும் வரியில் பிரச்சினை இருப்பதாகவும் வரிக் கொள்கையை தயாரிப்பதற்கு முன்னதாக தொழிற்சங்கங்களுடன் பேச்சு நடத்துமாறும் கேட்டுக் கொண்டனர்.

ஏனைய நாடுகளைப் போன்றே விதிக்கப்படும் வரிகளுக்கு ஏற்ற நியாயமான சேவை பொதுமக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும், புதிய வரிச் சட்டத்தால் தொழில்துறையைச் சார்ந்தோர் எதிர்கொள்ளும் அசௌகரியங்களைக் குறைப்பதற்கு உடனடி தீர்வுகள் வழங்கப்பட வேண்டும் என்றும் தொழிற்சங்கத் தலைவர்கள் மேலும் கோரினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *