திருமணம் முடிந்தவுடன் 5 மணிநேரம் கூடையில் அமரவைக்கப்பட்ட மணப்பெண்!

சீனாவில் திருமணச் சடங்கு எனும் பெயரில் மணமகள் ஒருவர் திருமண நாளன்று 5 மணிநேரத்திற்குத் தட்டையான கூடையில் அமரும்படிக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அந்தச் சடங்கு மணப்பெண்களின் கோபத்தைக் கட்டுப்படுத்திக்கொள்ளச் செய்யப்படும் ஒன்று என தெரிவிக்கப்படுகின்றது.

அந்தச் சம்பவம் சீனாவின் ஜியாங்சி (Jiangxi) மாநிலத்தில் நடந்தது.

திருமண ஆடையை அணிந்திருந்த பெண் காலணி ஏதும் அணியாமல் கூடை ஒன்றில் அமர்ந்திருந்த காணொளி சமூகத் தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டது என கூறப்படுகின்றது.

அந்த விசித்திர திருமணச் சடங்கின்போது அவரது கால்கள் தரையில் படக்கூடாது என்றும் அது சீனாவில் பொதுவாக நடத்தப்படும் சடங்கு என்றும் கூறப்படுகிறது.

மணப்பெண்ணின் கால்கள் தரையில் பட்டால் அது கணவரின் குடும்பத்திற்குத் துரதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் என நம்பப்படுகிறது.

மணப்பெண்கள் கூடையில் அமர்ந்திருக்கும் நேர அவகாசம் அவர்களது பிறந்த நேரத்தையும் கணவரின் பிறந்த நேரத்தையும் வைத்துக் குறி சொல்பவர்களால் கணிக்கப்படும் என்று அந்தக் காணொளியை எடுத்த லாய் (Lai) கூறியிருந்தார்.

ஆகையால் அது ஒவ்வொரு மணப்பெண்ணுக்கும் வேறுபட்டிருக்கும். ஆனால் மணமகனோ ஏதும் செய்யத் தேவையில்லை.

அந்தக் காணொளியைக் கண்ட இணையவாசிகள் பலர் அந்த மணப்பெண்ணுக்கு அனுதாபங்களை அளித்ததோடு அவர்கள் மனங்களில் இருந்த குழப்பத்தையும் வெளிப்படுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *