கொழும்பு அல் – ஹிக்மா கல்லூரியில் வெற்றிகரமாக நடைபெற்ற மீடியா போரத்தின் 71 ஆவது ஊடக செயலமர்வு!

  • “21 ஆம் நூற்றாண்டில் ஊடகம்” என்ற தொனிப்பொருளில் பாடசாலை மாணவர்களுக்காக நடாத்தப்படுகின்ற, ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 71 ஆவது ஊடக செயலமர்வுக் கருத்தரங்கு, (07) திங்கட்கிழமை முழு நாள் நிகழ்வாக, கொழும்பு – 12, வாழைத்தோட்டம், அல் – ஹிக்மா கல்லூரி (தேசிய பாடசாலை) யில் நடைபெற்றது.
    போரத்தின் தலைவி புர்கான் பீ. இப்திகார் தலைமையில் இடம்பெற்ற இவ் ஊடகக் கருத்தரங்கில், முஸ்லிம் மீடியா போரத்தின் முக்கியஸ்தர்களான போரத்தின் முன்னாள் தலைவரும் தற்போதைய ஆலோசகரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான என்.எம். அமீன், சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.ஏ.எம். நிலாம், போரத்தின் சிரேஷ்ட உறுப்பினர் தாஹா முஸம்மில், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ் செய்திப் பிரிவு உதவிப் பணிப்பாளர் ஜுனைத் எம். ஹாரிஸ், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையின் தயாரிப்பாளரும் ஊடகப் பயிற்றுவிப்பாளருமான இஸ்பஹான் சாப்தீன், ஊடகவியலாளர் அஷ்ரப் ஏ. சமத், அஷ்ஷேக் ஜெம்சித் ஆசிரியா் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்து கொண்டனர்.

  • கல்லூரி அதிபர் எம்.எம்.எம். மஹ்சூர் (முல்லை முஸ்ரிபா), கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் போரத்தின் உப செயலாளருமான ஸாதிக் ஷிஹான், போரத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களான நாளிர் ஜமால்தீன், ஆசிரியை ஷாமிலா ஷரீப், “விடிவெள்ளி” பத்திரிகையின் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.ஆர்.ஏ. பரீல், “வீரகேசரி” பத்திரிகையின் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.ஆர்.எம். வஸீம், “அல் – ஹிக்மா” வின் “எச்” ( H ) மீடியா கழகத்தின் பொறுப்பாசிரியை திருமதி ஹிதாயா முத்தலிப், ஆசிரியர் எம். அஷ்பாக் உள்ளிட்ட பிரமுகர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனா்.
  • சான்றிதழ் வழங்கும் நிகழ்வில், தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் மொழித்துறைப் பேராசிரியர் ரமீஸ் அப்துல்லாஹ் பிரதம அதிதியாகவும், இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் அரசியல் துறை பொறுப்பாளரும் கொன்சிலருமான பானு பிரகாஷ், “தினகரன்” தேசிய நாளிதழின் பிரதம ஆசிரியர் செந்தில் வேலவர் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனா்.
  • பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட பேராசிரியர் ரமீஸ் அப்துல்லாஹ், இங்கு விஷேட உரை நிகழ்த்தினார்.
    இச்சிறப்பு நிகழ்வில், பேராசிரியர் ரமீஸ் அப்துல்லாஹ், போரத்தின் பொதுச் செயலாளர் சிஹார் அனீஸ் மற்றும் உப தலைவர் எம்.ஏ.எம். நிலாம் ஆகியோரினாலும், கொன்சிலர் பானு பிரகாஷ், போரத்தின் தலைவி புர்கான் பீ. இப்திகார் தலைமையிலான போரத்தின் மகளிர் குழு உறுப்பினர்களாலும், “தினகரன்” பிரதம ஆசிரியர் செந்தில் வேலவர், போரத்தின் சிரேஷ்ட உறுப்பினர் தாஹா முஸம்மில் மற்றும் பொருளாளர் ஜெம்சித் அஸீஸ் ஆகியோரினாலும் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டமை விஷேட அம்சமாகும்.
  • கொழும்பு – 12, வாழைத்தோட்டம், அல் – ஹிக்மா கல்லூரி (தேசிய பாடசாலை), கொழும்பு – 10, பஞ்சிகாவத்தை, அல் – ஹிதாயா கல்லூரி ஆகியவற்றில் சிரேஷ்ட மற்றும் கனிஷ்டப் பிரிவுகளில் கல்வி பயிலும் 125 மாணவ மாணவிகள், இக்கருத்தரங்கு நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
    அத்துடன், நிகழ்வின் இறுதியில் மாணவ மாணவிகளுக்கு பத்திரிகை, இலக்ரோணிக் மற்றும் சமூக வலைத்தளங்கள் பற்றிய செயல்முறைப் பயிற்சிகளும், விரிவுரையாளா்களினால் வழங்கப்பட்டு, சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

( I. A. Cadir khan )
09/11/2022.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *