வெற்றியின் விளிம்பு வரை வந்து மழையால் ஏமாந்த தென்னாப்பிரிக்கா!

T20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர்-12 சுற்றில் இன்று ஹோபர்ட்டில் நடைபெற்ற ஆட்டத்தில் ஜிம்பாப்வே, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. தொடர்ந்து மழை பெய்ததால் போட்டி தொடங்க தாமதம் ஆனது. பின்னர் போட்டி 9 ஓவர்களாக குறைக்கப்பட்டது. பவர் பிளே 3 ஓவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

டாஸ் வென்று முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி, 9 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 79 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக வெஸ்லி 35 ரன்கள் (நாட் அவுட்) சேர்த்தார். மில்டன் ஷூம்பா 18 ரன்கள் அடித்தார். அதன்பின்னர் மழை அச்சுறுத்தல் இருந்ததால், தென் ஆப்பிரிக்க அணி 7 ஓவர்களில் 64 ரன்கள் எடுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கைத் துரத்திய தென் ஆப்பிரிக்கா ஆரம்பம் முதலே அதிரடி காட்டியது. துவக்க வீரர் குயின்டன் டி காக் பவுண்டரிகளாக விளாசி, ஜிம்பாப்வே பவுலர்களை திணறடித்தார்.

மறுமுனையில் இணைந்திருந்த பவுமாவுக்கு வாய்ப்பே கிடைக்காத அளவுக்கு குயின்டன் டி காக் ருத்ரதாண்டவம் ஆடினார். 3 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 51 ரன்கள் எடுத்த நிலையில் மீண்டும் மழை குறுக்கிட்டது. ஆடுகளம் கடுமையாக வழுக்கியதால் பந்துவீச முடியவில்லை. ஒரு பந்துவீச்சாளர் வழுக்கி விழுந்து அவருக்கு காயம் ஏற்பட்டது.

இதையடுத்து ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது குயின்டன் டி காக், 18 பந்துகளில் 8 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 47 ரன்கள் சேர்த்திருந்தார். வெற்றி பெற 24 பந்துகளில் 13 ரன்கள் தேவைப்பட்டது. இன்னும் ஒரு ஓவர் வீசப்பட்டிருந்தால் தென் ஆப்பிரிக்காவை குயின்டன் வெற்றி பெற செய்திருப்பார். ஆனால் மழை நீடித்ததால் ஆடுகளம் ஈரப்பதம் மேலும் அதிகமாகி பந்து வீச முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, ஆட்டம் கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *