T20 உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு பின்னடைவு!

T20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 16-ந் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. இத்தொடரில் உலகின் நம்பர் ஒன் டி20 அணியான ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி உள்பட 16 அணிகள் களமிறங்குகின்றன. போட்டி தொடங்க சில தினங்களே உள்ள நிலையில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா காயத்தால் உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார். அதனால் அவருக்கு பதிலாக தீபர் சாஹர் அல்லது முகமது சமி இடம் பெறலாம் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், தீபக் சாஹரும் காயம் காரணமாக உலகக்கோப்பையில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இது ஒருபுறமிருக்க, இந்தியாவின் முக்கிய போட்டி அணியாக கருதப்படும் பாகிஸ்தான் அணிக்கு இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஷாகீன் அப்ரிடி திரும்பியிருப்பது அணிக்கு கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது. காயத்திலிருந்து முழுமையாக குணமடைந்த அவர் விரைவில் அணியில் இணைய உள்ளார். இந்த சூழ்நிலைகள் உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு சாதகமாக இருப்பதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் அசார் முகமது கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-

இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் எப்போது நடந்தாலும் அது முக்கியமானதாக இருக்கும். பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு வலுவாக இருக்கிறது. ஆனால் பேட்டிங்கை இன்னும் மேம்படுத்த வேண்டும். இந்தியா தற்போது பெரும் இழப்பை சந்தித்துள்ளது. அவர்களிடம் பும்ரா இல்லை. அது பெரிய இழப்பு. ஷாஹீன் ஷா அப்ரிடி மீண்டும் உடற்தகுதி பெற்று விளையாடினால், எங்களின் வேகப்பந்து வீச்சு மேலும் வலுவடையும். சமீபத்திய ஆட்டங்களில் பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு எதிராக எந்த அளவுக்கு சிறப்பாக விளையாடினார்கள் என்பதைப் பார்க்கும்போது, அவர்களின் மன உறுதி அதிகமாக உள்ளது, எனவே பாகிஸ்தான் மீண்டும் வெற்றி பெறும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *