ஆசியக் கிண்ணம் யாருக்கு?

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை (11) துபாயில் நடைபெறவுள்ளது.

சுப்பர் போர் சுற்றில் சிறப்பாக ஆடிய இந்த இரு அணிகளும் நடப்புச் சம்பியனும், வெற்றி வாய்ப்பு அதிகம் இருந்த அணியுமான இந்தியாவை வெளியேற்றியே இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளன.

பந்துவீச்சு மற்றும் மத்திய வரிசையில் அதிரடித் துடுப்பாட்ட வீரர்கள் பாகிஸ்தானின் பலமாக இருப்பதோடு துடுப்பாட்டம் மற்றும் சுழற்பந்து இலங்கை அணியின் பலமாக உள்ளது.

பாகிஸ்தான் அணி சுப்பர் போரில் ஆப்கானிடம் குறைந்த வெற்றி இலக்கை எட்டுவதில் போராடியது அதன் பலவீனங்களைக் காட்டுவதாக உள்ளது. குறிப்பாக அணித்தலைவர் பாபர் அசாம் ஓட்டங்களை பெறுவதில் தடுமாற்றம் கண்டு வருகிறார். எனினும் பாக். அணியின் சுழற்பந்து மற்றும் வேகப்பந்து இரண்டும் வலுவாக உள்ளது.

மறுபுறம் இலங்கை அணி ஆப்கானுடனான ஆரம்பப் போட்டியில் மோசமான தோல்வியை சந்தித்தபோதும் அடுத்தடுத்த போட்டிகளில் சவாலான வெற்றி இலக்குகளை துரத்தியது துடுப்பாட்ட வரிசைக்கு நம்பிக்கை தருகிறது.

பந்துவீச்சில் சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்ஷன மற்றும் புதுமுக வேகப்பந்து வீச்சாளர் டில்ஷான் மதுஷங்க சிறப்பாக செயற்பட்டு வருகின்றனர்.

எவ்வாறாயினும் டுபாய் ஆடுகளம் இரண்டாவது துடுப்பெடுத்தாடும் அணிக்கே சாதகமாக உள்ளது. பனி அதிக தாக்கம் செலுத்துவது இரண்டாவது பந்துவீசும் அணிக்கு சிரமமாக இருக்கலாம். எனவே நாணய சுழற்சி பெரும் தாக்கம் செலுத்தும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *