மின்சாரம், எரிபொருள், சுகாதாரம் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்!

மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு அத்தியாவசியமான மின்சார விநியோகம், அதனுடன் தொடர்புபட்ட அனைத்து சேவைகள், மசகு எண்ணெய் சுத்திகரிப்பு, எரிபொருள் விநியோகம் மற்றும் சுகாதார சேவைகள் ஆகியவற்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தியுள்ளார்.

2022 செப்டம்பர் 03 ஆம் திகதி முதல் இந்த சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி, இதற்கான வர்த்தானி அறிவித்தலை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.

சுகாதார சேவைகள், எரிபொருள், மின்சாரம், ஆகியவற்றை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம் செய்யுமாறு சுகாதார மற்றும் மின்சக்தி அமைச்சர்களின் பரிந்துரைகளுடன்கூடிய கோரிக்கைக்கு இணங்க இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

1979 இலக்கம் 61 இன் அத்தியாவசிய மக்கள் சேவை சட்டத்தின் 2ஆவது சரத்தில் ஜனாதிபதி அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கமைய இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் மேற்படி சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி, ஜனாதிபதி 03.08.2022 அன்று வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிட்டிருந்தார்.

மேற்படி வர்த்தமானி அறிவித்தல் தொடர்பான தீர்மானத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமரின் செயலாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் ஒரு மாத காலத்திற்கு இது நடைமுறையில் இருக்கும். இதற்கமைய குறித்த வர்த்தானி 02.09.2022 வரை நடைமுறையில் இருந்தது.

இதனையடுத்து குறித்த துறைசார் அமைச்சர்களின் பரிந்துரைகளுடன் ஜனாதிபதியிடம் மீண்டும் கோரிக்கை முன்வைக்கப்பட்டதை அடுத்து வர்த்தமானி அறிவித்தல் மூலம் 03.09.2022ஆம் திகதி முதல் குறித்த சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *