பரபரப்பான போட்டியில் இலங்கை அபார வெற்றி!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் சுற்று நிறைவடைந்த நிலையில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடித்த இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

சூப்பர்4 சுற்றுக்கு வந்துள்ள 4 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழையும்.

இந்த நிலையில் சூப்பர்4 சுற்று போட்டிகள் இன்று தொடங்கியது. இந்த முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்-இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆப்கானிஸ்தான் அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய ஹசரத்துல்லா ஷஷாய் 13 ரன்னில் அவுட்டானார். மற்றொரு தொடக்க வீரரான ரஹ்மதுல்லா குர்பாஸ் அதிரடியாக விளையாடி 45 பந்துகளில் 6 சிக்சர், 4 பவுண்டரி விளாசி 84 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்ததாக களமிறங்கிய இப்ராகிம் சட்ரன் 40 ரன்கள் எடுத்து அவுட்டானார். நஜிபுல்லா சட்ரன் 17 ரன்னிலும், கேப்டன் முகமது நபி ஒரு ரன்னிலும் வெளியேறினர்.

இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 175 ரன்கள் குவித்தது. இலங்கை அணியின் தில்ஷன் மதுஷகா அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக நிசங்கா மற்றும் குசல் மெண்டிஸ் களமிறங்கினர். நிசங்கா 35 ரன்னிலும், குசல் மெண்டிஸ் 36 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர்.

அடுத்துவந்த அசலங்கா 8 ரன்னில் வெளியேறினார். சனங்கா 10 ரன்னில் வெளியேறினார். ஆப்கானிஸ்தானுக்கு வெற்றிவாய்ப்பு ஏற்பட்டபோது களமிங்கிய குனதிலகா மற்றும் பனுகா ராஜபக்சா ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

குனதிலகா 20 பந்துகளில் 2 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 33 ரன்கள் குவித்தார். அதேபோல், 14 பந்துகளை சந்தித்த பனுகா ராஜபக்சா 1 சிக்சர், 4 பவுண்டரிகள் உள்பட 31 ரன்கள் குவித்து அவுட் ஆனார்.

இறுதியில் இலங்கை அணி 19.1 ஓவரில் 6 விக்கெட்டுகளை 179 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் ஆப்கானிஸ்தானை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை திரில் வெற்றிபெற்றது. கசரங்கா 9 பந்துகளில் 16 ரன்களுடனும், கருனரத்னே 2 பந்துகளில் 5 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

ஆப்கானிஸ்தான் அணியின் முஜிபுர் ரஹ்மான் மற்றும் நவீன் உல் அக் அதிகபட்சமாக தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *