அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களால் இலங்கைக்கு 45,000 டொலர்கள் நிதியுதவி!

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர்கள் இலங்கையில் உள்ள சிறுவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு உதவுவதற்காக, 45,000 அவுஸ்திரேலிய டொலர்களை நிதியுதவியாக வழங்கியுள்ளனர்.

இதனை அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பல தசாப்தங்களுக்கு பின்னர் மிக மோசமான பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு உதவும் வகையிலும், அந்நாட்டு குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு ஆதரளிக்கும் வகையிலும், அவுஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் வீரர்களின் சமீபத்திய இலங்கை சுற்றுப்பயணத்தின் போது கிடைத்த பரிசுத் தொகையை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

UNICEF அமைப்பின் அவுஸ்திரேலிய தூதுவராக உள்ள அவுஸ்திரேலிய அணியின் பெட் கம்மின்ஸ் மற்றும் ஆரோன் பிஞ்ச் ஆகியோரின் தலைமையில், அந்த அணி இலங்கைக்கு 45,000 அவுஸ்திரேலிய டொலர்களை நன்கொடையாக வழங்கவுள்ளது.

கடந்த ஜூன் – ஜூலையில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் தங்கள் சுற்றுப்பயணத்தின் போது இலங்கையின் நெருக்கடியை நேரில் அவதானித்திருந்தனர்.

பெற்றோல் நிலையங்களில் நீண்ட வரிசைகள், இரண்டாவது டெஸ்டின் இரண்டாவது நாளில் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தைச் சுற்றி ஆயிரக்கணக்கான அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களின் கோசங்கள் போன்றவற்றை அவர்கள் அவர்கள் அவதானித்தனர். கொழும்பின் தலைநகரில் இதேபோன்ற ஆர்ப்பாட்டங்கள் காரணமாக நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் இராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, உணவுப் பொருட்களின் விலைகள் 80 சதவிகித உயர்வடைந்துள்ளதோடு, மூன்றில் இரண்டு பங்கு குடும்பங்கள் உணவு நுகர்வைக் குறைத்துள்ளனர்.

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் போக்குவரத்து, எரிபொருள் பற்றாக்குறை காரணமாக வாரத்திற்கு மூன்று நாட்கள் மட்டுமே பாடசாலைகள் இடம்பெறுவதோடு, மருந்துகள், எரிபொருளுக்கான வரிசையில் நிற்பது அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்டதால், சுகாதார சேவைகளை அணுகுவது கடினமாக உள்ளதுடன், சுத்தமான குடிநீருக்கும் பற்றாக்குறை காணப்படுகின்றது.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் நன்கொடையாக வழங்கும் நிதியானது பாதிப்புக்குள்ளாகக்கூடிய 1.7 மில்லியன் இலங்கை சிறுவர்களுக்கு போசாக்கு, சுகாதாரம், பாதுகாப்பான குடிநீர், கல்வி, மனநல சேவைகளை ஆதரிப்பதற்காக UNICEF ஸ்தாபனத்தின் திட்டங்களுக்குச் செல்லும்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பெட் கம்மின்ஸ், இலங்கையர்களின் அன்றாட வாழ்க்கை எவ்வளவு பாதிக்கப்படுகிறது என்பது எமக்கு மிகவும் தெளிவாக தெரிந்தது. என்ன நடக்கிறது என்பதை குழுவினர் பார்த்தபோது, 50 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையில் இருக்கும் யுனிசெஃப் நிறுவனத்திற்கு, சிறுவர்கள் மற்றும் குடும்பங்களின் தேவைகளுக்கு ஆதரவாக அமையும் வகையில் எமது பரிசுத் தொகையை நன்கொடையாக வழங்குவது எளிதான முடிவாகும்.

இத்தொடரின் போது இலங்கை மக்கள் தங்களை அன்புடன் வரவேற்றதாக உணர்ந்ததாகவும், இந்த சுற்றுப்பயணம் சிறிய விதத்தில் அவர்களின் உற்சாகத்தை உயர்த்த உதவியதாகவும் ஆரோன் பிஞ்ச் தெரிவித்துள்ளார்.

ஒரு சுற்றுப்பயணத்தின் போது கிரிக்கெட்டை விட பெரிய நிகழ்வுகளை மேற்கொள்வது அவுஸ்திரேலிய அணிக்கு இது முதன் முறை அல்ல, 2021 இல் இந்தியன் பிரீமியர் லீக் ஒத்திவைக்கப்பட்ட வேளையில், இந்தியாவின் கொவிட்-19 நெருக்கடிக்கு உதவும் வகையில், பெட் கம்மின்ஸ் உடன் கிரிக்கெட் அவுஸ்திரேலியா இணைந்து ஒட்சிசன் விநியோகத்திற்காக 50,000 டொலர் நன்கொடை வழங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் UNICEF அவுஸ்திரேலியா பிரதான நிறைவேற்று அதிகாரி (CEO) டொனி ஸ்டுவர்ட், கடந்த வருடம் கொவிட்-19 டெல்டா அலையின் உச்சக்கட்டத்தின் போது இந்தியாவுக்கு உதவிய அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள், தற்போதைய நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்களுக்கு மீண்டும் தாராளமாக உதவியதற்காக அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியா இலங்கையுடன் வலுவான பிணைப்பைக் கொண்டுள்ளது. இந்த நன்கொடை இலங்கையின் குடும்பங்களின் நீண்டகால நல்வாழ்வை ஆதரிக்க நன்றியுடன் பெறப்படுகிறது. எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

2016 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கைக்கு முதன் முறை சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவுஸ்திரேலிய அணி, T20 தொடரை 2-1 என வென்றதோடு, ஒரு நாள் தொடரை இலங்கை 3-2 என கைப்பற்றியது. காலியில் இடம்பெற்ற இரண்டு டெஸ்ட் போட்டித் தொடரை 1-1 என சமன் செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *