ஜோசப் ஸ்டாலினுக்குப் பிணை!

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டார்.

தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்வதற்கு அவருக்குக் கொழும்பு – கோட்டை நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஜோசப் ஸ்டாலின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளால் சமர்ப்பிக்கப்பட்ட நகர்த்தல் பத்திரத்தைப் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட கொழும்பு கோட்டை நீதிவான் பிணை வழங்குவதாக அறிவித்தார்.

கொழும்பு, லங்கா வங்கி மாவத்தையில் கடந்த மே மாதம் 28ஆம் திகதி நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் ஜோசப் ஸ்டாலின் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

இம்மாதம் 3ஆம் திகதி இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் அவர் இருந்தபோது கொழும்பு – கோட்டைப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

அவர் கைதுசெய்யப்பட்டமைக்கு எதிராக உள்நாட்டிலிருந்தும், சர்வதேசத்திலிருந்தும் பல தரப்பினர் கடும் கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர். அதேவேளை, ஜோசப் ஸ்டாலினின் விடுதலையை வலியுறுத்தி நாடெங்கும் ஆசிரியர் சமூகத்தினர் தொடர் போராட்டங்களையும் முன்னெடுத்து வந்திருந்தனர். இந்நிலையில், அவர் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டார்.

ஜோசப் ஸ்டாலின் கைதுசெய்யப்பட்ட நிமிடத்திலிருந்து பிணையில் விடுவிக்கப்படும் வரைக்கும் தொடர்ச்சியாகப் போராடிய சட்டத்தரணிகளுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் நன்றி தெரிவித்துள்ளார்.

– Ariyakumar Jaseeharan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *