உலக சனத்தொகையில் இந்தியாவுக்கு முதல் இடம்?

ஐக்கிய நாடுகள் சபையின் சமீபத்திய கணிப்புகளின்படி, உலக மக்கள் தொகை 2030 ஆம் ஆண்டில் சுமார் 8.5 பில்லியனாகவும், 2050 ஆம் ஆண்டில் 9.7 பில்லியனாகவும் வளரக்கூடும் என்று கணக்கிட்டுள்ளது.

மேலும், இது 2080களில் சுமார் 10.4 பில்லியன் மக்கள் தொகையை கொண்டிருக்கும் என்றும் 2100 வரை அந்த நிலையில் இருக்கும் என்றும் அறிக்கையின் மூலம் தெரிவித்து உள்ளது. மக்கள் தொகை பெருக்கம் குறித்து ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கூறும்போது, உலக மக்கள்தொகை நாள் இன்று கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு பூமியில் மக்கள்தொகை எட்டு பில்லியனாக அதிகரிப்பதை எதிர்பார்க்கிறோம். இது நமது பன்முகத்தன்மையைக் கொண்டாடுவதற்கும், நமது பொதுவான மனிதகுலத்தை அங்கீகரிப்பதற்கும், ஆரோக்கியத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களைக் கண்டு வியப்பதற்கும் ஒரு சந்தர்ப்பமாகும்.

நீட்டிக்கப்பட்ட ஆயுட்காலம் மற்றும் தாய் மற்றும் குழந்தை இறப்பு விகிதங்கள் வியத்தகு முறையில் குறைக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், இது நமது கிரகத்தை கவனித்துக்கொள்வதற்கான நமது அனைவருக்குமான பொறுப்பை நினைவூட்டுகிறது.

மேலும், ஒருவருக்கொருவர் நமது கடமைகளை நாம் இன்னும் எங்கே இழக்கிறோம் என்பதைப் பற்றி சிந்திக்க ஒரு தருணம். என்று அவர் கூறினார்.

ஐநாவின் அறிக்கையின் படி, 2023 ஆம் ஆண்டில் உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடான சீனாவை இந்தியா விஞ்சும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

2022 இல் தலா 1.4 பில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகையுடன், சீனாவும் இந்தியாவும் இந்த பிராந்தியங்களில் மிகப்பெரிய மக்கள்தொகையைக் கொண்டுள்ளன.

அறிக்கையின்படி, சீனாவின் 1.426 பில்லியனுடன் ஒப்பிடுகையில், 2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகை 1.412 பில்லியனாக உள்ளது.

இது 2023 ஆம் ஆண்டில் இந்தியா சீனாவை மிஞ்சும் என்றும், 2050 ஆம் ஆண்டில் இந்திய மக்கள் தொகை 1.668 பில்லியனாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அப்போது சீன மக்கள்தொகை 1.317 பில்லியனாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

2022 ஆம் ஆண்டில் உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட இரண்டு பகுதிகள் கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவாகும்.

உலக மக்கள்தொகையில் 2.3 பில்லியன் மக்கள், (29 சதவீதம்) அங்கு இருப்பார்கள்.

மேலும், மத்திய மற்றும் தெற்கு ஆசியா, 2.1 பில்லியனுடன், மொத்த உலக மக்கள்தொகையில் 26 சதவீதமாக இருப்பார்கள் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *