இரண்டாம் உலக போரில் இறந்த மாலுமிக்கு 80 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதி அஞ்சலி!

இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற காலகட்டத்தில் அமெரிக்கா மீதான முத்து துறைமுக தாக்குதலில் உயிர் நீத்த மாலுமி 80 ஆண்டுகள் கழித்து அடக்கம் செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அமெரிக்காவில் நடைபெற்றிருக்கிறது.

இரண்டாவது உலகப்போர் நடைபெற்ற காலத்தில் ஜப்பான் அமெரிக்காவின் முத்து துறைமுகத்தைத் தாக்கியது. இதுவே போரில் அமெரிக்கா தீவிரமாக ஈடுபடக் காரணமாக அமைந்தது. இந்த தாக்குதலில் தான் ஜார்ஜ் கில்பெர்ட் எனும் மாலுமி ஒருவர் உயிர் நீத்தார். அப்போது அவருக்கு வயது 20.

பெரிய ஆயுதங்களை இயக்கும் 2ம் வகுப்பு ஃபயர் கன்ட்ரோல் மேனாக யுஎஸ்எஸ் ஒக்லஹோமா (USS Oklahoma) எனும் கப்பலில் பணியாற்றியிருக்கிறார். இவர் இன்டியானாவிலிருந்து நேவியில் சேர்ந்தார் என்று DPAA ( Defense POW/MIA Accounting Agency) இணையதளத்தின் சுயவிவரப்பக்கம் கூறுகிறது. DPAA என்பது அமெரிக்க ராணுவ வீரர்களைத் தடய அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் ராணுவப் பதிவுகளைப் பயன்படுத்தி அவர்களை அடையாளம் காணும் ஒரு ஏஜென்சியாகும்.

1941 டிசம்பர் 7ம் தேதி யூஎஸ்எஸ் ஒக்லஹோமா கப்பல் டோர்பெடஸ் எனும் நீரில் மூழ்கி தாக்கும் ஏவுகணையால் தாக்கப்பட்டது. இந்த தாக்குதலில் மாலுமிகள் கடற்படை வீரர்கள் என 429 பேர் மரணித்தனர். அதில் ஜார்ஜ் கில்பெர்ட்டும் ஒருவர்.

கில்பெர்டின் உடல் மீட்கப்பட்டது. எனினும் அவர் அடையாளம் தெரியாத நபராகப் பசிபிக் தேசிய நினைவு கல்லறையில் புதைக்கப்பட்டார். அவரது குடும்பத்தாருக்கு அவர் புதைக்கப்பட்ட விவரம் கூட தெரிந்திருக்காது.

2015ம் ஆண்டு DPAA -க்கு கப்பலில் இறந்த மாலுமிகளை அடையாளம் காண்பதற்கான அனுமதி வழங்கப்பட்டது. இராணுவ வீரர்களின் சுயவிவரப்பக்கத்துடன் அறிவியல் தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி மானுடவியல் மற்றும் மைட்டோகாண்ட்ரியல் டிஎன்ஏ பகுப்பாய்வு போன்ற முறைகள் மூலம் அவரது உடலை அடையாளம் கண்டது ஏஜென்சி.

2020 ஆகஸ்டில் அடையாளம் காணப்பட்ட கில்பெர்டின் உடல் கடந்த திங்கள் கிழமை குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. கிட்டத்தட்ட 80 ஆண்டுகள் கழித்து நடந்த இறுதி அஞ்சலியில் அவரின் பேத்தி ஷெல்லி கோஃப் மற்றும் அவரது இரண்டு மகன்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *