உக்ரேன் இராணுவத்தில் இணைந்த தமிழக மாணவன்!

உக்ரேன்- ரஷ்யா இடையேயான போர் கடந்த 13 நாட்களுக்கு மேலாக  நீடித்து வரும்  நிலையில், உக்ரேனில் இருந்து இந்தியர்களை மீட்கும் பணியில் இந்திய அரசு  தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.

இந்நிலையில் தமிழக மாணவர் ஒருவர் உக்ரேனுக்கு ஆதரவாக அந்நாட்டு இராணுவத்தில் இணைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையை சேர்ந்த சாய் நிகேஷ் என்ற பொறியியல் மாணவரே இவ்வாறு உக்ரேன் இராணுவத்தில் இணைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவர் கடந்த 2019 ஆம்  ஆண்டு உக்ரேனின் கார்கிவ் நகரில் உள்ள பிரபல பல்கலைக்கழத்தில் இணைந்துள்ளார்.

இந்நிலையில்  சாய் நிகேஷீக்கு சிறுவயது முதலே இந்திய இராணுவத்தில் இணைய வேண்டும் என்ற ஆர்வம் இருந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

இதற்கான முயற்சிகளை அவர் மேற்கொண்ட போதும் அவரது உயரம் காரணமாக அவர் இராணுவத்தில் இணைய முடியாமல் போனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்தே அவர் உக்ரேனுக்கு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் உக்ரேன்- ரஷ்யா போர் ஏற்பட்டதை அடுத்து அவரை தொடர்பு கொண்ட பெற்றோர், அங்கிருந்து புறப்பட்டு இந்தியாவிற்கு வருமாறு அழைத்தனர்.

எனினும் இந்தியா வர மறுத்த அவர் உக்ரேன் இராணுவத்தில் இணைந்து ரஷ்யாவுக்கு எதிராக தான் போரிட்டு வருவதாகக்  கூறியுள்ளளார்.

இதை கேட்டதும் பதறி போன பெற்றோர் அவரை உடனடியாக இந்தியா வருமாறு அழைத்துள்ளனர்.

ஆனாலும் அவர் வர மறுப்பு தெரிவித்ததுடன், நான் பாதுகாப்பாக தான் இருக்கிறேன் என்று தெரிவித்து வந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக அவரை தொடர்பு கொள்ள முடியாததால் அச்சமடைந்த அவரது பெற்றோர் ”தங்கள் மகன் உக்ரேன் இராணுவத்தில் சேர்ந்த விவரத்தை இந்திய வெளியுறவு துறைக்கு தெரிவித்து அவரை மீட்டு தருமாறு கோரிக்கை விடுத்தனர்.

உக்ரேனில் இருந்து மக்கள், மாணவர்கள் திரும்பி வரும் நிலையில் தமிழக மாணவர் ஒருவர் உக்ரேனுக்கு ஆதரவாக போரில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *