அரச வருமானத்தை அதிகரிக்க தொலைபேசி சேவை VAT வரிகளில் திருத்தம்!

செலவுகளை ஈடு செய்யவும், அத்தியாவசிய அரச சேவைகளை தடையின்றி மேற்கொள்ளவும், ரூ. 695 பில்லியன் குறைநிரப்பு மதிப்பீடொன்றை பாராளுமன்றில் சமர்ப்பிக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நேற்று (30) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அரசாங்க வருமானத்தை அதிகரிக்கும் பொருட்டு, இறைவரி, VAT வரி, பந்தயம் மற்றும் சூதாட்ட வரிகள் மற்றும் நிதி முகாமைத்துவ சட்டங்களை திருத்த, பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்த யோசனைக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நேற்று (30) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட 8 முக்கிய தீர்மானங்கள் வருமாறு

1. பாராளுமன்றத்தில் குறைநிரப்பு மதிப்பீடொன்றை சமர்ப்பித்தல்
நிலவுகின்ற நெருக்கடியான பொருளாதார சூழல் காரணமாக பொதுமக்கள் முகங்கொடுக்க நேரிட்டுள்ள அழுத்தங்களை இயலுமான வரையில் குறைப்பதற்காக சமுர்த்திப் பயனாளிகள், பெருந்தோட்ட மக்கள், ஓய்வூதியர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கு 2022 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் அரசாங்கத்தால் சலுகைப் பக்கேஜ் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டது.

அதற்கான செலவுகளை மேற்கொள்வதற்கும், அத்தியாவசிய அரச சேவைகளைத் தடைகளின்றி தொடர்ச்சியாக மேற்கொண்டு செல்வதற்குத் தேவையான நிதியைப் பெற்றுக்கொள்வதற்காகவும் குறைநிரப்பு மதிப்பீடொன்றை சமர்ப்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, 695 பில்லியன் ரூபாய் நிதியொதுக்கீடு தேசிய வரவு செலவுத்திட்டத் திணைக்களத்தின் ‘வரவு செலவுத்திட்ட சலுகைச் சேவைகள் மற்றும் திடீர் தேவைகளின் பொறுப்பு’ கருத்திட்டத்தின் கீழ் ஒதுக்குவதற்காக பாராளுமன்றத்திற்கு குறைநிரப்பு மதிப்பீட்டை சமர்ப்பிப்பதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2. பொருளாதார உறுதிப்பாட்டிற்காக வருமானத்தை அதிகரித்தல்
2019 ஆம் ஆண்டிறுதியில் இலகு வரிக்கொள்கையை அறிமுகப்படுத்தி சேர் பெறுமதி வரி, தனிநபர் வருமான வரி, கூட்டு வருமான வரி போன்ற வரிகளில் வரிவீதத்தைக் குறைப்பதற்கும், சேர் பெறுமதி வரி மற்றும் தனிநபர் வருமான வரியை குறைப்பதற்கும் அரசாங்கத்தால் மேற்கொண்ட தீர்மானத்தால் அரச வருமானம் குறிப்பிடத்தக்களவு குறைவடைந்துள்ளது.

அவ்வாறே, மொத்த தேசிய உற்பத்தி வீதமாக வரவு செலவுப் பற்றாக்குறை மற்றும் அரச கடன் அதிகரிப்பதற்கும் குறித்த தீர்மானம் காரணமாக அமைந்துள்ளது.

இந்நிலைமையின் கீழ் அரச வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் கீழ்க்காணும் சட்டங்களை திருத்தம் செய்வதற்குத் தேவையான சட்டமூலங்களைத் தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

  • 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உண்ணாட்டரசிறைச் சட்டம்
  • 2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க சேர் பெறுமதி வரிச் சட்டம்
  • 2011 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க தொலைத்தொடர்பு அறவீட்டுச் சட்டம்
  • 1988 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க பந்தயங்கள் மற்றும் சூதாட்ட வரிச் சட்டம்
  • 2003 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க நிதி முகாமைத்துவ (பொறுப்புச்) சட்டம்

3. மொத்தத் தேசிய உற்பத்தியை (GDP) கணிப்பிடல்
பொருளாதாரத்தின் உண்மையான கட்டமைப்பை சரியான வகையில் அடையாளங் காணல், பொருளாதார வளர்ச்சி வேகம் தொடர்பான பெறுமதிகளை சரியான வகையில் மதிப்பீடு செய்தல், தேசிய கணக்குகள் தொடர்பாக ஏற்புடைய சர்வதேச நிறுவனங்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய பரிந்துரைகள் மற்றும் பொறிமுறைகளைக் கையாளல் போன்ற விடயங்களைக் கருத்தில் கொண்டு குடிசன மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தால் 05 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேசிய கணக்குகள் மதிப்பீடு செய்யும் அடிப்படை ஆண்டு இற்றைப்படுத்தப்படும்.

அதற்கமைய, தேசிய கணக்குகளைத் தயாரிக்கும் போது தற்போது அடிப்படையாகக் கொண்டுள்ள 2010 ஆண்டுக்குப் பதிலாக அடிப்படை ஆண்டாக 2015 ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குடிசன மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தால் 2015 ஆம் ஆண்டை அடிப்படை ஆண்டாகக் கொண்டு 2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2021 ஆம் ஆண்டு வரையான காலாண்டு மற்றும் ஆண்டுக்கான கணக்கு மதிப்பீடுகளைத் தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கைகளை வெளியிட்டு, 2022 முதலாம் காலாண்டு தொடக்கம் தொடர்ந்து வரும் காலங்களில் 2015 ஆம் ஆண்டை அடிப்படை ஆண்டாகக் கொண்ட தேசிய கணக்கு மதிப்பீடுகளை வெளியிடுவதற்கும், நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை உடன்பாடு வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளது.

4. 2022-2024 ஆண்டு காலப்பகுதிக்கான உலக நிதியத்துடனான ஆரம்ப ஒப்பந்தம்
உலகளாவிய சுகாதாரப் பிரச்சினையாக தோன்றியுள்ள எயிட்ஸ், காசநோய் மற்றம் மலேரியா போன்ற தொற்றல்லா நோய்கள் 03 இனையும் ஒழிக்கும் நோக்கில் 2002 ஆம் ஆண்டில் ‘எயிட்ஸ், காசநோய் மற்றும் மலேரியாவுடன் போராடுவதற்கான உலக நிதியம்’ தாபிக்கப்பட்டுள்ளது.

2003 ஆம் ஆண்டு தொடக்கம் அந்நிதியத்தின் மூலம் இலங்கைக்கு 114 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியைப் பெற்றுக் கொள்வதற்காக 24 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அவற்றில் சுகாதார அமைச்சுடன் 15 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இலங்கை தேசிய சர்வோதய சங்கம், வெப்பமண்டல சுற்றாடல்சார்  நோய்கள் மற்றும் சுகாதாரம் சார்ந்த தனியார் கம்பனி மற்றும் இலங்கை குடும்பத் திட்டமிடல் சங்கம் ஆகிய நிறுவனங்கள் ஏனைய ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டுள்ளன.

சுகாதார அமைச்சு 88.3 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கான ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளதுடன், அவற்றில் 2021 ஒக்ரோபர் 31 ஆம் திகதியாகும் போது 71 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கல்களை பயன்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

உலக நிதியம் 2022 – 2024 ஆம் ஆண்டு காலப்பகுதிக்காக மேலும் 9.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்குவதற்கு உடன்பாடு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, குறித்த வழங்கலை பெற்றுக் கொள்வதற்காக அவ் ஒப்பந்தங்களில் கையொப்பமிடுவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள படிமுறைகள் தொடர்பாக சுகாதார அமைச்சர் அமைச்சரவைக்கு தெளிவூட்டியதுடன், அமைச்சரவை அதற்கு உடன்பாடு தெரிவித்துள்ளது.

5. 2022 தென்மேற்குப் பருவக்காற்று காலத்தில் வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பல் கூட்டுத்தாபனத்தின் உலர் மொத்த சரக்குக் கப்பல்களை (Dry Bulk Vessel) சேவையில் அமர்த்துதல் 
இலங்கை கப்பல் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான Mv.Ceylon Breeze  மற்றும் Mv.Ceylon Princess  ஆகிய இரண்டு கப்பல்களையும் 2022 தென்மேல் பருவக்காற்றுக் காலத்தில் சர்வதேச வாடகை சந்தையில் சேவையில் ஈடுபடுத்துவதற்கான விருப்பக் கோரல் கோரப்பட்டுள்ளது.

அதற்கமைய, அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தரப் பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய, குறித்த இரண்டு கப்பல்களையும் வணிக முகாமைத்துவப் பொறிமுறையின் கீழ் குறித்த காலப்பகுதியில்  சேவையில் அமர்த்துவதற்கான ஒப்பந்தத்தை சிங்கப்பூரின் M/s Wallem Shipping Pre Ltd. இற்கு வழங்குவதற்காக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.   

6. ஆய்வுகூட உபகரணங்கள், நுகர்வுப் பொருட்கள் மற்றும் தாக்குப் பொருட்கள் விநியோகத்திற்காக விலைமனுக்கோரல் சமர்ப்பித்துள்ள விநியோகத்தர்களுக்கு கொடுப்பனவுகளைச் செலுத்தல்
நாட்டில் நிலவுகின்ற பொருளாதார நெருக்கடி நிலைமையால் வெளிநாட்டு செலாவணிகளில் ஏற்படுகின்ற திடீர் அதிகரிப்புக்களுக்கமைய கடன்பத்திரங்களை திறந்துள்ள மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்களை வெளிப்புறப்படுத்துவதற்கு சுங்க ஒப்புதல் வழங்கும் தினத்தில் நிலவுகின்ற செலாவணி விகிதத்திற்கமைய கொடுப்பனவுகளை செலுத்துவதற்காக 2022 ஏப்ரல் மாதம் 25 அம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஆய்வுகூட உபகரணங்கள், நுகர்வுப் பொருட்கள் மற்றும் தாக்குப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக கடன்பத்திரங்களைத் திறந்துள்ள விநியோகத்தர்களுக்கு குறித்த பொறிமுறையைப் பின்பற்றி கொடுப்பனவுகளைச் செலுத்துவதற்கும், தற்போது அரச மருந்துகள் கூட்டுத்தாபனத்தால் விலைமனுக் கோரப்பட்டு விலைமுறிகள் திறக்கப்பட்டுள்ள பெறுகைகள் உள்ளடங்கலாக, ஏனைய ஏற்புடைய கொடுப்பனவுகளை மேற்கொள்கின்ற தினத்தில் நிலவுகின்ற செலாவணி விகிதத்தை அடிப்படையாகக் கொண்டு செலுத்தல்களை மேற்கொள்வதற்கும் சுகாதார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

7. 1971 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க தொழிலாளர்களின் தொழில்களை முடிவுறுத்தல் (விசேட ஏற்பாடுகள்) சட்டம் மற்றும் 1950 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க கைத்தொழில் பிணக்குகள் சட்டம் போன்றவற்றை திருத்தம் செய்தல்
1971 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க தொழிலாளர் தொழில் முடிவுறுத்தல் (விசேட ஏற்பாடுகள்) சட்டம் மற்றும் 1950 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க கைத்தொழில் பிணக்குகள் சட்டம் போன்ற சட்டங்களின் கீழ் வழங்கப்படுகின்ற இசைவுத் தீர்ப்புக்கள் மற்றும் தீர்ப்புக்களுக்கு எதிராக மேன்முறையீடுகள், மீளாய்வு மற்றும் எழுத்தாணை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் போது பிணைப்பொறுப்புத் தொகையொன்றை வைப்புச் செய்யக்கூடிய வகையில் குறித்த ஏற்பாடுகளை வகுப்பதற்கு இயலுமான வகையில் குறித்த சட்டங்களைத் திருத்தம் செய்வதற்காக 2021 மார்ச் மாதம் 08 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளது. குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

8. 1969 ஆம் ஆண்டின் முதலாம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகளை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பித்தல்
சட்டபூர்வமற்ற வெளிநாட்டு நாணய வணிக நடவடிக்கைகள் அதிகரிப்பதைத் தடுப்பதற்காகவும் மற்றும் சரக்குகள் சுங்க விடுவிப்பின் போதான இறக்குமதிக்கான குறைந்த செலவுச்சிட்டையை சமர்ப்பிக்கப்படுவதைத் தடுக்கும் நோக்கிலும், இலங்கை மத்திய வங்கியின் மூலம் தெரிவு செய்யப்பட்ட ஒருசில கொடுப்பனவு முறைகளுக்கு மட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

திறந்த கணக்கு கொடுப்பனவு முறை, சரக்கு விற்பனையின் பின்னர் பணம் கொடுப்பனவு முறை, கொடுப்பனவின் பின் ஆவணச் செலுத்தல் முறை, ஏற்றுக்கொள்ளலின் அடிப்படையில் ஆவணச் செலுத்தல் முறை ஆகியவற்றை மட்டுப்படுத்தக் கூடிய வகையில் 1969 ஆம் ஆண்டின் முதலாம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ‘2022 ஆண்டின் 07 ஆம் இலக்க கொடுப்பனவு முறைகளுக்கான இறக்குமதிக் கட்டுப்பாட்டு ஒழுங்குவிதிகள்’ மேற்கொள்ளப்பட்டு 2022 ஆம் ஆண்டு மே மாதம் 06 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள அத்தகைய ஒழுங்குவிதிகள் வெளியிடப்பட்ட திகதியிலிருந்து ஒரு மாதகாலத்தில் அமைச்சரவை அங்கீகாரத்துடன் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.

அதற்கமைய, 2022ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க செலுத்தல் முறைகளுக்கான இறக்குமதிக் கட்டுப்பாட்டு ஒழுங்குவிதிகளை பாராளுமன்ற அங்கீகாரத்திற்கு சமர்ப்பிப்பதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *