மக்களுக்கு பயந்து ஓடி ஒளியும் மஹிந்த சரியும் ராஜபக்ச சாம்ராஜ்யம்!

கிட்டதிட்ட 13 ஆண்டுகளுக்கு பிறகு துப்பாக்கிச்சூடு, மரண ஓலம், திரும்பிய பக்கமெல்லாம் தீ என வன்முறை பூமியாக மாறி உள்ளது இலங்கை. அன்று ராணுவ மற்றும் அரசு அதிகாரத்தை கையில் வைத்து கொண்டு ராஜபக்சே குடும்பத்தினரால் தமிழர்கள் மீது தொடுக்கப்பட்ட கண்மூடித்தனமான தாக்குதலால் தமிழர்கள் பகுதி பற்றி எரிந்தது. திரும்பிய பக்கமெல்லாம் குண்டுமழை… ரத்த வெள்ளத்தில் சடலங்கள்… மரண ஓலங்கள்… சரணடைய வந்தவர்கள் சுட்டுக்கொலை… கொஞ்சமும் ஈவு இரக்கம் கூட காட்டாமல் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என கொடூரமாக சித்ரவதை செய்து கொன்று கொத்துக் கொத்தாக சாலையில் வீசினர். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பார்கள். இது, ராஜபக்சே குடும்பத்தினருக்கு சரியாக பொருந்துகிறது.

2009ம் ஆண்டு ஈழ தமிழர்களுக்கு எதிரான போரில் கிடைத்த வெற்றிக்கு, மகிந்தா ராஜபக்சேதான் காரணம் என்று தலையில் தூக்கி வைத்து கொண்டாடினர் சிங்களர்கள். இன்று அதே சிங்களர்களால், விரட்டி விரட்டி அடிக்கப்பட்டுள்ளார் மகிந்த ராஜபக்சே. ராணுவம், அரசு உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களும் கைக்குள் வைத்திருந்தாலும், மக்கள் போராட்டத்திற்கு முன்பு ஒன்றும் எடுபடவில்லை. அன்று தமிழர்கள், முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதத்தை தூண்டிவிட்ட ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிராக இன்று சிங்களர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என அனைவரும் ஓரணியில் திரண்டு ‘வெளியே ஓடு’ என்று குரல் கொடுக்க தொடங்கி உள்ளனர்.

‘இலங்கைக்கு ராஜா’ என்று வலம் வந்த ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிராக மக்கள் கொந்தளித்தது ஏன்? பிற நாடுகளிடம் பிச்சை எடுக்காத குறையாக இன்று இலங்கை கையேந்துவது ஏன்? அதிகாரத்தில் இருந்து இறங்க மறுத்து மக்கள் மீது ராஜபக்சே குடும்பத்தினர் தாக்குதல் நடத்துவது ஏன்? 3 வேலை கூட சாப்பிட முடியாமல் பசி பட்டினியால் மக்கள் தவிப்பது ஏன்? மக்களின் தேவையை நிறைவேற்ற வெளிநாட்டில் இருந்து பொருட்களை கூட இறக்குமதி செய்ய முடியாதது ஏன்? சுமார் 90 ஆண்டுகள் நாட்டை ஆண்ட ராஜபக்சே குடும்பத்தினர், நாட்டை சுமார் ரூ.4 லட்சம் கோடி கடன் கடலில் தத்தளிக்க விட்டது எப்படி? இதுபோன்று பல கேள்விகள் அடுக்கி கொண்டே போகலாம். இதற்கெல்லாம் காரணம் ராஜபக்சே குடும்பத்தினர்தான். இதையெல்லாம் அறிய வரலாற்றை ஒருமுறை திரும்பி பார்ப்போம். வாங்க போகலாம்.

* முதல் அரசியல் வாரிசு
இலங்கையை இன்று அழிவு பாதைக்கு கொண்டு சென்றுள்ள ராஜபக்சே குடும்பத்தினர் வரலாறு 1930ல் இருந்து தொடங்குகிறது. இலங்கை அரசின் அதிகார பதவியில் அமர்ந்த ராஜபக்சே குடும்பத்தின் முதல் உறுப்பினர் டான் மேத்யூ ராஜபக்சே. 1936ல் நடைபெற்ற இலங்கை அரச சபைத்தேர்தலில் 12,106 வாக்குகள் பெரும்பான்மையுடன் வென்று அம்பாந்தோட்டை மாவட்டத்திற்கான இரண்டாவது அரச சபையின் உறுப்பினராக தேர்த்தெடுக்கப்பட்டார். இவருடைய மறைவுக்கு பின், இவருடைய சகோதரர் டான் ஆல்வின் ராஜபக்சே 1947-1965 வரை எம்பியாக தேர்தெடுக்கப்பட்டு, அமைச்சராக பதவி வகித்துள்ளார். இவருடைய மகன், மகள்களான சமல், ஜெயந்தி, மகிந்த, கோத்தபய, சந்திரா, பசில், டட்லி, ப்ரீத்தி மற்றும் கந்தானி ஆகிய 9 பேரும் அவர்களது வாரிசுகள்தான். இவர்கள்தான் இத்தனை ஆண்டு காலம் இலங்கை மக்களை தவறாக வழிநடத்தி இன்று சோற்றுக்கே கையேந்தும் நிலைக்கு தள்ளிய பெருமைக்குரியவர்கள்.

* 2005ல் உச்சபட்ச அதிகாரம்
அமைச்சர், சபாநாயகர், எம்பி மற்றும் அரசாங்க பதவிகளை சுமார் 60 ஆண்டுகள் அலங்கரித்து வந்த ராஜபக்சே குடும்பத்தினர் நாட்டின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட அதிபர் பதவியை 2005ல் கைப்பற்றியது. 1998ம் ஆண்டுக்கு அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த கோத்தபய, பசில் ராஜபக்சே ஆகியோர் 2005ம் ஆண்டு அதிபர் பதவிக்கு மகிந்த போட்டியிடுவதையொட்டி இலங்கை திரும்பினர். 2005ம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிபர் பதவிக்கு மகிந்த ராஜபக்சே போட்டியிட்டார். அப்போது, ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிராக விடுதலை புலிகள் இயக்கம் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகிய அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, தேர்தலை புறக்கணித்தது. இது, ராஜபக்சே குடும்பத்தினருக்கு சாதகமாக அமைந்தது. இந்த தேர்தலில் வெறும் 2% வாக்குகள் வித்தியாசத்தில் மகிந்த ராஜபக்சே வெற்றி பெற்று அதிபரானார். தமிழ் அமைப்புகள் வாக்கு அளித்து இருந்தால், ரணில் விக்ரமசிங்கே அதிபராகி இருந்திருப்பார்.  

* அசைக்க முடியாத சக்தி
மகிந்த அதிபரான பிறகுதான் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுக்க தொடங்கியது ராஜபக்சே குடும்பம். மகிந்தா அதிபரானதும், கோத்தபயாவுக்கு ராணுவ அமைச்சர் பதவியும், பசில் ராஜபக்சேவுக்கு அதிபரின் ஆலோசகர் மற்றும் நிதியமைச்சராகவும், சமல் ராஜபக்சே சபாநாயகராகவும், சமல் மகன் சசிந்திரன் ராஜபக்சே மாகாண அமைச்சராகவும் நியமிக்கப்பட்டனர். மொத்தம் 7 கேபினட் அமைச்சர்கள் உட்பட 9 அமைச்சர்கள் பதவி ராஜபக்சே குடும்பத்தினரால் அலங்கரிக்கப்பட்டது. இதுதவிர காந்தானி மகன் நிபுண ரணவக்க நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்தெடுக்கப்பட்டார். இவ்வாறு குடும்ப பலத்துடன் வலம் வந்த மகிந்த, பிரிவினைவாதிகளை முடிவுக்கு கொண்டு வர திட்டமிட்டு 2007ம் ஆண்டு தமிழர்களுக்கு எதிரான நேரடி ஈழ போர் யுத்தத்தை தொடங்கினார்.

* தமிழர்கள் ெகான்று குவிப்பு
இதற்கு அவருடைய சகோதரரும், முன்னாள் ராணுவ அதிகாரியும், ராணுவ அமைச்சருமான கோத்தபய தலைமை பொறுப்பேற்று போரை நடத்தினார். தமிழர்கள் சித்ரவதை செய்யப்பட்டு கொன்றது, ராணுவ வீரர்களால் பெண்கள் பலாத்காரம்  செய்யப்பட்டது என எல்லா கொடூரங்களுக்கு சொந்தக்காரர் கோத்தபயதான். தமிழர்கள் பகுதியை ஒட்டு மொத்தமாக சிதைக்க உத்தரவிட்ட கோத்தபய, 2009ம் ஆண்டு உச்சக்கட்ட போரை முன்னெடுத்தார். இறுதியாக 2009 மே 18ம் தேதி விடுதலை புலிகளின் தலைவன் பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், போருக்கு முடிவுக்கு வந்ததாகவும் அறிவித்தார். போரின்போது இலங்கை ராணுவத்தின் போர் குற்றங்கள், சித்ரவதையின் உச்சம், மனிதாபிமானமற்ற நிலையில் பிரபாகரன் மகனை சுட்டுக் கொன்றது போன்ற பல அத்துமீறல்களை சர்வதேச ஊடகங்கள் வெளிச்சம் போட்டு காட்டியது. ஆனால், நாட்டின் 70% அதிகாரத்தை கையில் வைத்திருந்தாலும், காட்டுக்கு நான்தான் ராஜா என்று சுற்றி வந்த மகிந்த, இதுபற்றி துளியும் கவலைப்படாமல், இதெல்லாம் சர்வதேச சதி என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டு போனார்.

* மன்னர் போல் வலம்
இந்த போரில் வெற்றியடைந்த பின் சிங்கள மக்களால் தூக்கி வைத்து கொண்டாடப்பட்டது ராஜபக்சே குடும்பம். இதனால், மன்னர் போல் மாறிய ராஜபக்சே ஆடம்பர செலவு, அரசு பணத்தில் பிரசாரங்கள் என பணத்தை தண்ணீர்போல் செலவழித்தது. பல்வேறு ஊழல்களில் ஈடுபட தொடங்கியது. நிதியமைச்சராக இருந்த பசில் ராஜபக்சே அரசு பணி டெண்டரில் கட்டாயமாக 10% கமிஷன் கொடுக்க வேண்டும் என்ற எழுதப்படாத விதியை கொண்டு வந்தார். இதனால், மிஸ்டர் 10% என்று அன்போடு அழைக்கப்பட்டார்.

இதேபோல், பல்வேறு குற்றச்சாட்டுகளுடன்  2010ம் ஆண்டு தேர்தலை சந்தித்த மகிந்த, 58% வாக்குகள் பெற்று 2வது முறையாக அதிபரானார். இந்த ஆட்சியிலும் கோத்தபயாவுக்கு ராணுவ அமைச்சர் பதவி, பசிலுக்கு நிதியமைச்சர், மகிந்த மகன் நமலுக்கு விளையாட்டு துறை அமைச்சர் என குடும்பத்தினர் அமைச்சர் பதவிகள் நீண்டு கொண்டே போனது. போர் குற்றம், பல்வேறு முறைகேடு புகார்கள் என அனைத்தையும் மீறி 2வது முறையாக அதிபரானதால், இனிமேல் நம்மை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்ற ஆணவம் ராஜபக்சே குடும்பத்துக்கு தலைக்கேறியது.

இந்த ஆட்சி காலத்தில் அரசு துறை மட்டுமல்ல தனியார் துறையான விமானம், தொலைக்காட்சி, வர்த்தகம் என பல்வேறு தொழில்களில் ராஜபக்சே குடும்பம் கோலோச்சியது. நாட்டின் 70% வர்த்தகமும் ராஜபக்சே குடும்பத்தையே சார்ந்திருந்தது. இதனால், 2015ம் ஆண்டு நடந்த தேர்தலில் ராஜபக்சே குடும்பம் தோல்வியடைந்தது. அதிபராக மைதிரி பால சிறிசேனாவும், பிரதமராக ரணில் விக்ரகமசிங்கேவும் பதவியேற்றனர். இதையடுத்து நடந்த உள்ளாட்சி அமைப்புகள் ராஜபக்சே ஆதரவாளர்கள் வெற்றி முகம் கண்டதால், 2019ம் ஆண்டு தேர்தலை சந்திக்க தயாரானார் மகிந்த ராஜபக்சே.  

* அதிபரும், பிரதமரும்
இலங்கை அரசியலமைப்பு சட்டப்படி, 2 முறை அதிபரானவர் மீண்டும் அதிபராக போட்டியிட முடியாது. ருசி கண்ட பூனை சும்மா இருக்குமா என்ன? அதிபர் பதவி நமது குடும்பத்தை விட்டு போக கூடாது என்பதால், கோத்தபயாவை அதிபர் வேட்பாளராக களமிறங்கினார் மகிந்த. இந்த தேர்தலில் கோத்தபயா வெற்றி பெற்று அதிபரானார். பின்னர், மகிந்தாவை பிரதமராக நியமித்தார் கோத்தபய. முதன்முறையாக அதிபர் மற்றும் பிரதமர் பதவியில் ராஜபக்சே குடும்ப உறுப்பினர்கள் அமர்ந்தனர். இவர்கள் பதவியேற்ற சில மாதங்களில் ஈஸ்டர் பண்டிகையின்போது இலங்கையில் அடுத்தடுத்து 7 இடங்களில் குண்டு வெடித்து 270 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

இதனால், சர்வதேச சுற்றுலா பயணிகள் வர அஞ்சினார். தொடர்ந்து, கொரோனா ஊரடங்கால் நாட்டின் உள்நாட்டு உற்பத்தியில் பெரும் பங்கு வகித்த சுற்றுலா, தேயிலை தொழில், ஜவுளி ஆகிய தொழில்கள் முடக்கம், அன்னிய செலாவணி வரலாறு காணாத சரிவு போன்ற காரணங்களால் இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்தது. அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு, நிமிடத்திற்கு நிமிடம் விலைவாசி உயர்வு, பட்டினி கொடுமை போன்ற காரணங்களால் இலங்கையின் திரும்பிய பக்கமெல்லாம் வீதிகளில் மக்கள் போராட்டத்தில் குதித்தனர். எரிபொருள் தட்டுப்பாட்டால் பலமணி நேரம் மின்வெட்டை சந்தித்தது. மருத்துவமனைகளில் மருந்து இல்லை. பொருட்கள் வாங்கவும் பணம் இல்லை…கடன் கொடுக்கவும் பணம் இல்லை… நாட்டில் எதுவுமே இல்லாததால் திவாலாகும் நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டது. இதனால், கொதித்து எழுந்த மக்கள், அதிபர் கோத்தபய மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் ‘பதவியை விட்டு ஓடிடு’ என்று நாடு முழுவதும் கோஷம் எழுப்பினர்.

* நாடே கொந்தளிப்பு
சுமார் ஒருமாதமாக அதிபர் மாளிகை மற்றும் பிரதமர் இல்லம் முன்பு மாணவர்கள், புத்த துறவிகள், தொழிற்சங்கங்கள் என அனைத்து தரப்பு மக்களும்  தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால், வேறு வழியின்றி மகிந்தா பதவியை பறிக்க கோத்தபய முடிவு செய்தார். அதன்படி, நேற்று முன்தினம் மகிந்த பதவி விலகுவார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர் ஆதரவாளர்களை திரட்டி, பிரதமர் அலுவலகம் முன்பு மற்றும் காலி முகத்திடலிலும் போராடிய மக்கள் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தினார். இதில் 8 பேர் பலியாகினர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

* அடிப்பணிந்த மகிந்தா
இதனால் ஆவேசமடைந்த போராட்டக்காரர்கள், மகிந்தா ஆதரவாளர்களை விரட்டியடித்தனர். தொடர்ந்து, மகிந்த வீடு, அமைச்சர்கள், எம்பிக்கள், மேயர் வீடுகள் போராட்டக்காரர்களால் சூறையாடப்பட்டு தீயிட்டு கொளுத்தப்பட்டது. கொழும்பு புறநகரான நிடம்புவா பகுதியில் ஆளும் கட்சி எம்பி அமர கீர்த்தி அதுகோரலா ஆயிக்கணக்கான மக்களுக்கு பயந்து தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. நெருக்கடி முற்றியதால் இறுதியாக மக்களின் போராட்டத்திற்கு அடிபணிந்து மகிந்தா ராஜபக்சே தனது ராஜினாமா கடிதத்தை அதிபர் கோத்தபயவிடம் வழங்கினார். போராட்டக்காரர்களின் ஆவேசத்தில் சிக்கி சின்னப்பின்னவதில் இருந்து தப்பிக்க அமைச்சர்கள், எம்பிக்கள் பாதுகாப்பான இடத்தில் தஞ்சம் புகுந்தனர். போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. ஏற்கனவே போராட்டக்காரர்கள் மீது கடந்த ஒரு வாரங்களுக்கு முன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.

* சர்வாதிகாரம் சரிந்தது
சர்வாதிகாரம் என்றாவது ஒருநாள் நிச்சயம் சரியும். அதன்படி மகிந்தா சாம்ராஜ்ஜியம் சரிந்து உள்ள நிலையில் மக்களின் கோபத்துக்கு ராஜபக்சே குடும்ப முன்னோர்களின் கல்லறை கூட தப்பவில்லை. அன்றும், இன்றும் தனது சுயநலத்திற்காக மக்களை பலிகடவாக்கும் ராஜபக்சே குடும்பத்தை இந்த முறை நாட்டை விட்டே ஓட விட வேண்டும் என்று மக்கள் உறுதியாக உள்ளனர். மகிந்தாவை போல் கோத்தபய மக்களுக்கு அடிபணிந்து பதவியை விட்டு ஓடும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்பதே எதார்த்தம். மக்கள் ஒன்றுப்பட்டால் அரசாங்கமும் ஒன்றுமில்லை. அதிகாரமும் ஒன்றுமில்லை என்பதற்கு இலங்கையே சாட்சி.

* ஹெலிகாப்டரில் தப்பும் குடும்ப உறுப்பினர்கள்
மகிந்த ராஜபக்சே வசித்து வந்த பிரதமர் இல்லத்தை முற்றுகையிட்டு, மக்கள் போராட்டம் நடத்தி வந்ததால் அவர் வெளியேர முடியாமல் தவித்தார். நேற்று காலை ராணுவத்தினர் மக்களை கலைத்ததால், பிரதமர் மாளிகையை விட்டு வெளியேறிய மகிந்தா கடற்படை தளபதி வீட்டில் தஞ்மடைந்துள்ளார். மகிந்த மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஆளும்கட்சி எம்பிக்கள் பலர் ரத்மலான விமான நிலையம் வழியாக வெளிநாட்டிற்கு தப்பி செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியானதால், அங்கு மக்கள் குவிந்தனர். ராஜபக்சே குடும்பத்தினர் சாலை மார்க்கமாக சென்றால், அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதால், ஹெலிகாப்டர் மூலமாக குடும்ப உறுப்பினர்கள் தப்பி சென்றனர். மகிந்தாவின் மகன் நமல் ராஜபக்சேவின் மனைவி ஹெலிகாப்டர் பயத்துடன் தப்பி செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

* நாடு முக்கியம் அல்ல… பதவிதான் முக்கியம்…
கடும் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்க எந்தவொரு நடவடிக்கையும், அதிபர் கோத்தபய மற்றும் மகிந்தா எடுக்கவில்லை. மாறாக யாரிடம் கடன் கேட்கலாம், எந்த நாட்டிடம் கையேந்தலாம் என்று யோசித்து வருகின்றனர். பொருளாதாரத்தை மீட்க இதுவரை எந்த முக்கியமான முடிவும் எடுக்கவில்லை. மாறாக பதவியை காப்பாற்ற மட்டும் பல்வேறு ஆலோசனைகளை நடத்தி வருகின்றனர்.

* வன்முறையை தூண்ட ரூ.2,000
போராட்டக்காரர்களுக்கு எதிராக வன்முறையை தூண்ட மகிந்த ஆதரவாளர்கள் திட்டமிட்டே அவரது சொந்த ஊரில் இருந்து சுமார் 3,000 பேர் தலைநகர் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டனர். இவர்கள் ஒவ்வொருக்கும் தலா ரூ.2000 வழங்ககப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

* இடைக்கால அரசு அமைய 19வது சட்ட திருத்தம் தேவை
இலங்கையில் இடைக்கால அரசு அமைக்கும்படி அதிபர் கோத்தபய விடுத்த அழைப்பை, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா நிராகரித்துள்ளார். அதிபருக்கு கட்டுபாடற்ற அதிகாரம் அளிக்கும் 20வது அரசியலமைப்பு சட்ட திருத்தத்தை திரும்ப பெறுதல், நாடாளுமன்றத்துக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் 19வது சட்ட திருத்தத்தை மீண்டும் அமல்படுத்துவது, அதிபர் ஆட்சி முறையை ஒழிக்கும் நடவடிக்கையுடன் இடைக்கால அரசை குறைந்தபட்சமாக 18 மாதங்கள் தொடர்ந்து செயல்பட அனுமதித்தல் உள்ளிட்ட நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால் மட்டுமே இடைக்கால அரசு அமைப்பது பற்றி ஆலோசிக்கலாம் என்று பிரேமதாசா தெரிவித்துள்ளார். ஆனால், அதிபரின் அதிகாரத்தை குறைக்க ஒருபோதும் விரும்பாத கோத்தபய இந்த நிபந்தனையை ஏற்றுகொள்வாரா என்பது மில்லியன் டாலர் கேள்விதான். இதனால், இடைக்கால அரசு அமைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

* கோத்தபய ராஜினாமா செய்வாரா?
பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்ததுபோல், கோத்தபயவும் பதவியை விட்டு விலக வேண்டும் என்று எதிர்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ராஜபக்சே குடும்பத்தினர் யாரும் இன்றி புதிய அரசை அமைக்க வேண்டும் என்று நாடு முழுவதும் கோரிக்கை வலுத்து வருகிறது. இலங்கை அரசியலமைப்பு சட்டப்படி அதிபரை பதவியில் இருந்து நீக்குவதும் சுலபம் அல்ல. தொடர் கண்டன தீர்மானங்கள் கொண்டு வந்தே நீக்க முடியும். இதனால், மக்களின் போராட்டத்திற்கு மதிப்பளித்து கோத்தபயவும் வெளியேற வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது.

* மே மாதம் முடிந்த ஆதிக்கம்
மகிந்த ராஜபக்சே பதவி விலகிய பின் இலங்கையில் ஏற்பட்ட வன்முறையால் அவரது வீடு மற்றும் அமைச்சர்கள், எம்பிக்கள், மேயர் வீடுகள் சூறையாடப்பட்டு தீயிடப்பட்டது. ‘ரோம் நகரம் தீப்பற்றி எரிந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்தார்’ என்பதுபோல் இலங்கை தீப்பற்றி எரியும்போது, மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். 2009ம் ஆண்டு மே மாதம் 18ம் தேதி விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனை கொன்று ஈழ தமிழர் போர் முடிவுக்கு வந்ததாக மகிந்தா தலைமையிலான அரசு அறிவித்தது. சுமார் 13 ஆண்டுகளுக்கு பிறகு இதே மே மாதத்தில் மகிந்த ராஜபக்சேவின் சாம்ராஜ்ஜியத்தை முடித்து பதவியில் இருந்து மக்கள் விரட்டியடித்து உள்ளனர்.

நன்றி: தினகரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *