ரயில்நிலைய உச்சியில் இருந்து குதித்த இளம் பெண் காப்பாற்றிய மக்கள்!

இந்திய தலைநகர் டெல்லியில் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற இளம் பெண்ணை சிஐஎஸ்எஃப் வீரர்கள் உயிருடன் காப்பாற்றிய சம்பவத்தில் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

டெல்லி அக்ஷர்தாம் மெட்ரோ ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை காலை 7.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

தற்கொலைக்கு முயன்ற 25 வயதாகும் அப்பெண், மெட்ரோ ரயில் நிலையத்தின் கட்டிடத்தின் மொட்டை மாடிக்கு ஏறி, அங்கிருந்து கீழே குதிக்க முயன்றுகொண்டிருந்தார். சில நிமிடங்களில் அவரை காப்பாற்றுவதற்கு மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (CISF) வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்துவிட்டனர்.

மொட்டை மாடியின் விளிம்பில் இருந்த பெண்ணைக் கவனித்த CISF ஊழியர்கள் அந்தப் பெண்ணை பின்வாங்கும்படி வற்புறுத்தினர். ஆனால் யாருடைய பேச்சையும் கேட்காமல் அவர் சில நிமிடங்களில் கீழே குதித்துவிட்டார்.

ஆனால் கீழே அவர் விழுந்த இடத்தில் CISF மற்றும் மெட்ரோ ஊழியர்கள் போர்வைகளை பயன்படுத்தி அப்பெண்ணை தரையில் விழாமல் காப்பாற்றிவிட்டனர். இதனால் அவர் சிறு காயங்களுடன் உயிருக்கு எந்த சேதமும் இன்றி தப்பினார்.

அவர் கீழே குதித்த, CISF மற்றும் மெட்ரோ ஊழியர்களால் அவர் காப்பாற்றப்பட்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவிவருகின்றன.

விழுந்த வேகத்தில் அப்பெண்ணின் கால்களில் சிறு காயங்கள் ஏற்பட்டது, அவர் லால் பகதூர் சாஸ்திரி மருத்துவமனைக்கு உடனடியாக சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மற்றபடி, அவர் நிலையாக இருக்கிறார் என்று உள்ளூர் பொலிஸ் தெரிவித்தது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *