வைத்தியர் ஷாபியின் சம்பள கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை!

குருணாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியரான் ஷாபி சிஹாப்தீனின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சட்ட மா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

அனைத்து கொடுப்பனவுகளையும் வழங்குவதற்கு பொது நிர்வாக அமைச்சின் பணிப்பாளர் நாயகம் தீர்மானித்துள்ளதாக சட்ட மா அதிபர் இன்று (23) மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்தார். மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுமதி தர்மவர்தன ஆஜராகி இதனைத் தெரிவித்திருந்தார்.

குருணாகல் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சந்தன கெதங்கமுவவினால் தனக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி மகப்பேற்று மருத்துவர் ஷாபி சிஹாப்தீன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை பரிசீலித்த போதே இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்த மனுவானது, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த மனுவில் குருணாகல் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சந்தன கெதங்கமுவ மற்றும் சட்ட மாஅதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

பௌத்த மத பெண்களுக்கு மலட்டுத் தன்மை ஏற்படும் வகையிலான சத்திரசிகிச்சை செய்வதாக, வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் மீது குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு அது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதோடு, அவருக்கு எதிராக சட்ட விரோதமாக சொத்து சேர்த்ததாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு கட்டாய விமுறையில் அனுப்பப்பட்டு பின்னர் அவர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருந்தார்.

ஆயினும் குறித்த விடயங்கள் தொடர்பில் மேற்கொண்ட வழக்கு விசாரணைகளில் குறித்த குற்றச்சாட்டுகள் எவ்வித அடிப்படையுமற்றவை என நீதிமன்றம் அறிவித்ததோடு, அவர் நிரபராதி என அறிவித்து விடுதலை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய, அவர் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட வேளையிலும் பணி இடைநிறுத்தத்தில் இருந்த காலப்பகுதியிலும் அவருக்கு வழங்கப்பட வேண்டிய சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக சட்ட மாஅதிபர் தற்போது நீதிமன்றிற்கு அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *