நாட்டின் நலனுக்காகச் சண்டை பிடித்தால் இலாபமடையும் வல்லரசுகள்!

அமெரிக்காவும் ரஷ்யாவும் ஏதேனும் ஒரு நாட்டின் நலனுக்காகச் சண்டை பிடிக்க ஆரம்பித்தால் அந்தச் சண்டையால் அமெரிக்காவும் ரஷ்யாவும் மாறி மாறிக் கொழுத்த இலாபத்தை அடைந்துகொள்ளும். ஆனால் நடக்க வேண்டிய அத்தனை அவலங்களும் எந்த நாட்டின் நலனுக்காக என்று சண்டைக்கு இறங்கினார்களோ அந்த நாட்டுக்கும் அதன் அப்பாவி மக்களுக்குமே நடந்தேறும். அண்மைக்கால வரலாற்றில் உதாரணங்கள் ஏராளம். அவ்வாறே அமெரிக்காவை அல்லது ரஷ்யாவை நம்பி உதவி கோரிய எந்த ஒரு நாடும் இன்று வரை உருப்பட்டதாக அதாவது தலைநிமிர்ந்து நின்றதாக வரலாறில்லை.

முதலாலித்துவத்துக்கும் கம்யூனிஸத்துக்கும் இடையிலான அரசியல் சண்டையில் இந்த உலகுக்கோ மனித குலத்துக்கோ எந்த நலவும் வந்து சேராததைப் போன்றே இந்த இரண்டினதும் காப்பர்களான அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்குமிடையிலான சண்டையினாலும் குறித்த இரண்டு தரப்பையும் தவிர உலகுக்கு எந்த நன்மைகளும் வந்து சேரவில்லை. ரஷ்யாவின் அச்சுறுத்தலுக்காக அமெரிக்காவின் பக்கம் சாய்ந்தும் அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்காக ரஷ்யாவின் பக்கம் சாய்ந்தும் சொந்தக் காலில் நிற்க முடியாமல் நாசமாகிப் போன நாடுகளின் பட்டியல் நீளமானது. இந்த இரண்டு துருவ சாபக்கேடுகளாலும் உலகுக்குத் தர முடிந்தது யுத்தங்களும் அழிவுகளும் அனர்த்தங்களும் அடிமைத்தலையும் மாத்திரமே. ஆனால் தமது ஊடக வலிமையால் இஸ்லாமோபோபியா என்ற பேயை உருவாக்கி, அதைத் திரையாகப் பயன்படுத்தித் தமது வண்டவாளங்களை லாவகமாக மறைத்துக்கொண்டார்கள். இவ்வளவு காலமும் இந்த இரண்டு அரக்கர்களினதும் சண்டைக் களமாக மத்திய கிழக்கு, மத்திய ஆசியா, ஆபிரிக்கா போன்ற பிராந்தியங்கள் இருந்து வந்தன. தற்போது அந்தக் களம் ஐரோப்பாவை நோக்கி நகர ஆரம்பித்துள்ளது.

எப்படியோ எல்லாச் சண்டைகளிலும் அமெரிக்காவும் ரஷ்யாவும் மாறி மாறிக் கொழுத்த இலாபங்களை ஈட்டிக்கொள்கின்றன. எனவே இந்த இரண்டு அரக்கர்களும் திரைக்குப் பின்னால் சல்லாபிக்கின்றனவோ? அல்லது ஒரே இடத்திலிருந்துஇயக்குவிக்கப்படுகின்றனவோ!?என்ற ரீதியில் எழுகின்ற சந்தேகங்களில் நியாயமில்லாமலில்லை. இதை வெறுமனே conspiracy என்று தட்டிக்கழித்துவிட முடியாது.

குறைந்தபட்சம் மேலே குறிப்பிடப்பட்ட பிராந்தியங்களில், அதாவது முஸ்லிம் உலக விடயத்தில் இந்த இரண்டு சக்திகளின் நடவடிக்கைகளும் இவ்வாறுதான் அமைந்துள்ளன. உக்ரைன் விடயத்திலும் வித்தியாசமிருப்பதாகத் தெரியவில்லை.

துருக்கியின் முன்னாள் பிரதமர் நஜ்முத்தீன் அர்பகான் அவர்கள் அமெரிக்காவின் ஈராக் ஆக்கிரமிப்பு ஆரம்பித்த காலப்பகுதியில் ஆற்றிய ஓர் உரையின் போது “சிரியா இலக்காக மாறுகின்ற போது துருக்கியே உண்மையான இலக்காகும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்” என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கான பூகோளவியல் காரணிகளை மத்திய கிழக்கு அரசியல் தொடர்பாக நான் எழுதிய ஆக்கங்களில் அவ்வப்போது தொட்டுக்காட்ட முயற்சித்துள்ளேன். அர்பகான் போன்ற, பிராந்தியத்தை மிக நன்றாக அறிந்து வைத்திருந்த தூர நோக்குடைய ஒரு தலைவரின் எதிர்வு கூறல் வெறுமனே பத்து வருடங்களுக்குள் நிதர்சனமாகியது. ஏன் இதைக் கூறுகிறேன் என்றால் இன்று உக்ரைனில் ஐரோப்பாவின் கதவைத் தட்ட ஆரம்பித்திருக்கும் இந்தப் போரை வெறுமனே உக்ரைனுடன் தொடர்பான அல்லது முதலாலித்துவத்துக்கும் கம்யூனிஸத்துக்கும் இடையிலான முறுகலுடன் தொடர்பான ஒரு விடயமாகப் பார்க்க முடியாது. இதை இவ்வாறு காண்பித்து அமெரிக்க – ஐரோப்பாக் கூட்டுக்காக அல்லது ரஷ்யாவுக்காக வக்காளத்து வாங்கும் முயற்சியில் இறங்கியுள்ள இரண்டு சாராரையும் பார்த்துப் பரிதாபப்படவே முடியும்.

இரட்டைக் கோபுரத் தாக்குதலுடன் கோலாகலமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டு, ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பில் ஆரம்பித்து ஈராக், லிபியா, சிரியா, யெமன் என்று தொடர்கின்ற முடிவுறாத யுத்தங்கள், மத்திய கிழக்கு முழுவதும் நிகழ்ந்த ஆட்சி மாற்றங்கள், துருக்கியில் ஆட்சிக் கவிழ்ப்புக்காக மேற்கொள்ளப்பட்டு தோல்வியில் முடிவடைந்த இராணுவப் புரட்சி, தாயிஷ், போக்கோ ஹராம் என்று மத்திய கிழக்கு முழுவதும் காலான் கூட்டங்களைப் போன்று முளைத்த ஆயுதக் குழுக்கள், Brexit, கோவிட் 19, அத்துடன் ஆரம்பித்த உலகலாவிய பொருளாதார நெருக்கடி என்று தொடர்கின்ற இன்னோரன்ன விடயங்களை ஓரே சதுரங்கப் போட்டியில் நிகழ்கின்ற பல்வேறு நகர்வுகளாகப் பார்க்காதவர்கள் அல்லது பார்க்க முடியாதவர்கள் சர்வதேச அரசியல் பேசாமல் ஒதுங்கியிருப்பதே புண்ணியம். இன்று உக்ரைனில் நிகழ்வதும் அதன் தொடரே. இவை அனைத்தையும் சரியாக வாசித்து சரியான தீர்மானங்களை எடுக்காத நாடுகளும் நாட்டு மக்களும் புதிய உலக ஒழுங்கில் மீண்டும் அடிமைத்தலையையே தேர்ந்தெடுக்கப் போகிறார்கள்.

தீர்வதறியாத அவாவையும் பேராசையையும் பலப் பசியையும் அடிப்படையாகக் கொண்ட மேற்கு நாகரிகத்தால் இஸ்லாத்தைப் பொது எதிரியாக வைத்து எழுபது வருடங்கள் தமக்குள் சமாதானமாக வாழ முடிந்தது. அதற்கான விலையாக உலகுக்கு யுத்தங்களையும் வறுமையையுமே ஏற்றுமதி செய்தது. மேற்கு எந்த ஒரு நாட்டுக்கும் win-win கொள்கையோடு செல்லவில்லை.

முடியுமானவரை சுரண்டி, தான் மட்டும் வெல்ல வேண்டும் என்ற பேராசையோடே எல்லா இடங்களுக்கும் சென்றது. விளைவாக அநீதியையும் அவலங்களையுமே எல்லா இடங்களுக்கும் கொண்டு சென்றது. யுத்தங்கள் மூலமும் மண்டையைக் கழுவிக் காசுக்கு வாங்கிய ஆட்சியாளர்கள் மூலமும் மேற்கு இதை சாத்தியப்படுத்தியது. பின்னர் தம்மீது நல்லபிப்பிராயத்தை ஏற்படுத்துவதற்காகக் கோடிக்கணக்கில் செலவிட்டது. ஆனால் சென்ற இடங்களிலெல்லாம் தமது அநீதிகளுக்கு முன்னால் எதுவும் செய்ய முடியாமல் குமுறுகின்ற பெரும் பெரும் மக்கள் திறள்கள் உருவாவதை அவர்களால் தடுக்க முடியவில்லை. ஒரு சாதாரண ஆபிரிக்கக் குடி மகனோடு பேசினால் இந்தக் குமுறலின் வீரியத்தை உணர்ந்துகொள்ளலாம். இந்த மக்கள் திறள் பலம் பெறும் போது, அல்லது யாராவது தூய்மையாக அவர்களது கையைப் பிடித்துத் தூக்கிவிடும் போது அவர்களின் எதிர்வினை இலேசானதாக இருக்காது. அவர்கள் நூற்றாண்டு காலமாகத் தம்மீது இழைக்கப்பட்ட அநீதிகளைத் தட்டிக் கேட்கும் நாள் வரும் போது மேற்குக்கு ஆபிரிக்காவில் மூச்சு விடுவதற்கும் இடம் கிடைக்காது. ஐரோப்பா இந்த அநீதிகளுக்காக நஷ்டஈடு கொடுக்க வேண்டிய ஒரு காலம் வந்தால் ஐரோப்பா உள்ளாடைக்கும் யாசிக்க வேண்டிய நிலை வரலாம். அந்த அளவு கொள்ளையடித்துள்ளார்கள். துருக்கி ஆபிரிக்காவில் பழைய உளப்பூர்வமான உறவுகளைப் புதுப்பித்தவாறு உளக் குமுறலுடன் இருக்கும் மௌனமான பெரும்பாண்மையைப் பலப்படுத்தும் பணியையே செய்து வருகின்றது. மேற்கு துருக்கி விடயத்தில் இந்த அளவு அஞ்சுவதற்கான காரணம் இதுதான்.

கடந்த இருபது வருடங்களில் தன்னைச் சூழ நிகழ்ந்து வருகின்ற எந்த ஒரு யுத்தத்தையும் துருக்கி தானாகப் போய் ஆரம்பித்து வைக்கவில்லை. அனைத்துமே தத்தமது ஏகாதிபத்திய நலன்களுக்காக அமெரிக்காவாலும் ஐரோப்பாவாலும் ஆரம்பித்து வைக்கப்பட்ட யுத்தங்களாகும். எனவே எல்லாக் களங்களிலும் அநீதியான தரப்பாக இருப்பது இந்த வல்லாதிக்க சக்திகளே. இது காலணித்துவக் காலத்திலிருந்து தொடர்கின்ற அநீதி. துருக்கியைப் பொருத்தவரை மத்திய கிழக்கில் தனது சக்தியை மீறி ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த யுத்தங்களில் தலையிட்டே ஆக வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளான ஒரு நாடாகும். அந்த வகையில் ஈராக், சிரியா, ஆர்மேனியா, லிபியா, தாயிஷ், தற்போது உக்ரைன் என்று அனைத்து யுத்தங்களும் தன்னைச் சூழ நிகழ்ந்தாலும் துருக்கி அமைதியான, நிதானமான எட்டுகள் மூலம் பிராந்தியத்தில் அமெரிக்கா, ஐரோப்பா, ரஷ்யா போன்ற வல்லாதிக்க சக்திகளின் ஏகாதிபத்திய நலன்களுக்கு சிம்மசொப்பனமாகத் திகழ்ந்து வருகின்ற ஒரு நாடாகும். சிரியாவில் அமெரிக்கா, ரஷ்யா ஆகிய இரண்டு வல்லாதிக்க சக்திகளுக்கும் தமது இலக்குகளை முற்றாக அடைந்துகொள்ள முடியாமல் முட்டுக்கட்டை போட்டது. அவ்வாறே லிபியாவிலும் இறுதிக் கட்டத்தில் தலையிட்டு அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் போன்ற வல்லரசுகளின் நோக்கங்கள் நிறைவேறாமல் ஆப்பு வைத்தது. அவ்வாறே அஸர்பைஜானில் ரஷ்யாவை மீறி, தசாப்தகாலமாகத் தொடரும் ஆர்மேனிய ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டு வந்தது. அந்த வகையில் ஐரோப்பாவும் அமெரிக்காவும் தன்னை நம்பி வந்த உக்ரைனை ரஷ்யாவின் முன்னால் தள்ளிவிட்டு ஒளிந்துகொள்ளும் போது துருக்கி தனது நேச நாடுகளுக்கும் தன்னுடன் உடன்படிக்கை செய்துகொண்ட நாடுகளுக்கும் மிகப் பலமான ஒரு நம்பிக்கையாகத் திகழ்ந்து வருகின்றது. அமீரகம், சவூதி, எகிப்து, ஏன் இஸ்ரேல் என்று அண்மைக் காலமாகத் துருக்கியைப் பரம எதிரியாகச் சித்திரித்து வந்த நாடுகள் தற்போது துருக்கியுடனான உறவுகளைப் பலப்படுத்தும் போட்டியில் இறங்கியிருப்பதில் பிராந்திய ரீதியான காரணிகளுக்கப்பால் துருக்கி தனது நட்பு நாடுகளுக்குக் கொடுத்து வருகின்ற இந்த நம்பிக்கைக்கும் மிக முக்கியமான ஒரு பங்குள்ளது. பொய்யோ, உண்மையோ பலத்துக்குத்தான் எல்லாம் பணியும் என்பதே சர்வதேச அரசியலின் தாரக மந்திரம். இது வரை ஆக்கிரமிப்பாளர்களின், அநீதியாளர்களின் பக்கமே பலம் இருந்தது. ஒரு நூற்றாண்டாக முற்றிலும் அநீதியால் சூழப்பட்ட பிராந்தியத்தில் உண்மை, நீதி, நியாயத்தோடு பலத்தையும் கொண்ட ஒரு சக்தியாக, ஒரு நாடாக, ஒரு நம்பிக்கையாகத் துருக்கி மேலெழுந்து வருகின்றது. இதற்காகத் துருக்கி கொடுத்த விலை இலேசானதல்ல. துருக்கி இதில் வெற்றி பெற்றே ஆக வேண்டும். இல்லாவிட்டால் இன்னும் நீண்ட காலத்துக்குப் பிராந்தியத்தில் இரத்த ஆறே ஓடும். ஏகாதிபத்திய சக்திகளை எதிர்ப்பதாகக் கூறுபவர்கள் இன்று நிற்க வேண்டிய தரப்பு அமெரிக்காவோ ஐரோப்பாவோ ரஷ்யாவோ அல்ல; தெட்டத் தெளிவாகத் துருக்கியாகும். இதை ஐரோப்பிய இடதுசாரிகளோ மனிதாபிமானிகளோ அல்லது அவர்களது தாளத்துக்கு ஆடும் சர்வதேச ஊதுகுழல்களோ புரிந்துகொள்ளமாட்டார்கள். அவர்கள் துருக்கியை இன்னுமொரு ஏகாதிபத்திய சக்தியாக வர்ணித்துத் தமது அமெரிக்க, ஐரோப்பிய முதலாளிமாருக்கு விசுவாசமாக இருப்பார்கள்.

உக்ரைன் என்று தலைப்புப் போட்டுவிட்டு துருக்கி பற்றிப் பேசுவதாக நினைக்க வேண்டாம். பெரிய படத்தின் ஒரு மருங்கில் உள்ள மிகச் சிறிய ஒரு பகுதியே உக்ரைன். அதன் சரி மத்தியில் அனைத்தையும் ஒன்றோடொன்று தொடர்புபடுத்தும் புள்ளியில் இருப்பது துருக்கி ஆகும். துருக்கியை விட்டுவிட்டு துருக்கியைச் சூழ இடம்பெறுகின்ற எந்த ஒரு பிரச்சினையையும் பேச முடியாது. ஆப்கானிஸ்தானில் எரித்துவைக்கப்பட்ட இந்த யுத்தத் தீ துருக்கியைச் சுற்றியே பற்ற வைக்கப்பட்டுக்கொண்டுள்ளது. இதைத் துருக்கிக்குள் பற்ற வைக்கும் வரை ஓயமாட்டார்கள். ஐரோப்பாவும் நேட்டோவும் உக்ரைன் பிரச்சினைக்குள் துருக்கியையும் இழுத்துப் போட்டு துருக்கியையும் ரஷ்யாவையும் நேரடியாக எதிரெதிரே கொண்டு வருவதற்காக எடுக்கும் பிரயத்தனங்கள் இதற்குச் சான்று.

Copied

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *