இந்தியாவிலிருந்து பிரித்தானியாவிற்கு பஸ் சேவை!

இந்தியாவில் இருந்து வரும் செப்டெம்பர் மாதம் முதல், லண்டனுக்கு மீண்டும் பேருந்து சேவை தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்தின் பயணக்கட்டணமாக 15 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் இருந்து பிரித்தானியாவின் லண்டன் நகருக்கு கடந்த 2021ஆம் ஆண்டு, மே மாதம் பேருந்து சேவையை தொடங்க Adventures Overland டிராவல்ஸ் என்ற நிறுவனம் திட்டமிட்டிருந்தது.

இந்த அறிவுப்பு வெளியான சிலநாள்களிலேயே சுமார் 40,000 நபர்கள் இந்த பயணத்திற்கு தங்கள் பெயர்களை பதிவு செய்து இருந்தனர்.

ஆனால் அப்போது கொரோனா பரவல் தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தால் இந்த திட்டத்தை அந்த நிறுவனம் கைவிட்டது.

இதையடுத்து தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால், வரும் செப்டெம்பர் மாதம் முதல் இந்த பேருந்து சேவை திட்டத்தை தொடங்க மீண்டும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் இருந்து புறப்படும் இந்த பேருந்து சேவையானது, மியான்மர், தாய்லாந்து, சீனா, கஜகஸ்தான், ஜெர்மனி, பெல்ஜியம், பிரான்ஸ் என 18 நாடுகள் வழியாக சுமார் 20,000 கிலோமீட்டர் தூரம் கடந்து 70 நாட்களில் பிரித்தானியாவின் லண்டன் நகரை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சாலைவழி பயணத்தின் இடையே வரும் நீர்நிலைகளை கடப்பதற்கு பெரிய படகுகள் பயன்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

20 படுக்கைகள் மட்டுமே கொண்ட இந்த பேருந்தில் உணவு உண்ணும் வசதி போன்ற அனைத்து வசதிகளும் வழங்கப்படும் எனவும், இந்த பேருந்து பயணத்துக்கு சுமார் 15 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து லண்டனுக்கு தொடங்கப்பட உள்ள இந்த பேருந்து சேவையானது முதல்முறை அல்ல, ஏற்கனவே கடந்த 1957ஆம் ஆண்டு இந்தியாவின் கொல்கத்தாவில் இருந்து லண்டனுக்கு டபுள் டக்கர் பேருந்து சேவை தொடங்கப்பட்டது.

இந்த பேருந்து சேவை பல நாடுகளில் ஏற்பட்ட எல்லை பிரச்சனைகள் மற்றும் விபத்துகளின் காரணமாக 1976 ஆம் ஆண்டு இந்த பேருந்து சேவை நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *