மணமகளை அழைத்து வர சென்ற கார் ஆற்றில் விழுந்து மணமகன் உள்பட 9 பேர் பலி!


ராஜஸ்தான் மாநிலம் பர்வாராவில் இருந்து மத்திய பிரதேசத்தில் உள்ள உஜ்ஜயினிக்கு மணமகளை அழைத்து வர மணமகன் உள்பட 9 பேர் நேற்றிரவு காரில் புறப்பட்டனர். கோட்டா நயபுரா தானா பகுதி வழியாக கார் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாம்பல் ஆற்றில் விழுந்தது. காரில் பயணம் செய்த அனைவரும் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். இரவு நேரம் என்பதால் வெகு நேரத்திற்கு பிறகு இச்சம்பவம் போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீஸ், மாவட்ட நிர்வாகம், மீட்பு குழுவினர் விரைந்தனர். ஆற்றில் மூழ்கிய காரை கிரேன் உதவியுடன் மீட்டனர்.

காரில் சிக்கியிருந்த 7 உடல்களையும், ஆற்றில் இருந்து 2 உடல்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மாவட்ட எஸ்பி விசாரணை நடத்தி வருகிறார். விபத்தில் மணமகன் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், ‘கோட்டாவில் திருமண ஊர்வலத்தின் கார் சம்பல் ஆற்றில் விழுந்து மணமகன் உட்பட 9 பேர் உயிரிழந்தது மிகுந்த வருத்தமும், துரதிர்ஷ்டமும் அளிக்கிறது. கலெக்டரிடம் பேசி, சம்பவம் குறித்து முழு தகவல் கிடைத்தது. உயிரிழந்தவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். இந்த இழப்பை தாங்க கடவுள் அவர்களுக்கு வலிமை அளிக்கட்டும், இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *