2 வருட ஆட்சியை விட கோட்டாவின் அடுத்த 3 வருடம் படுமோசமாக இருக்கும்!

தற்போதைய நிர்வாகத்தின் அடுத்த மூன்று ஆண்டுகள், முதல் இரண்டு ஆண்டுகளை விட மிகவும் பயனற்றதாகவும், திறனற்றதாகவும் இருக்கும் என்று தேசிய மக்கள் சக்தி கூறுகிறது.

களுத்துறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, கடந்த இரண்டு வருடங்களாக அரசாங்கம் வெற்றியடையவில்லை என்பதை அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் கதையை மாற்ற முயற்சிப்பது துரதிஷ்டவசமானது என பாராளுமன்ற உறுப்பினர் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் கணிசமான காலத்திற்கு நாட்டை பாதிக்கும் பாரிய பிரச்சினைகளை தோற்றுவித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாடு எதிர்கொள்ளும் தற்போதைய பிரச்சினைகள் தற்போதைய நிர்வாகத்தால் மட்டுமல்ல, இதற்கு முன்னர் நாட்டை ஆட்சி செய்த அரசாங்கங்களாலும் உருவாக்கப்பட்டவை என்றும் கூறினார்.

தற்போதைய சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்க்க, முறையான அணுகுமுறை தேவை என்றார்.

பொருளாதாரம் தொடர்பில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க, வாகனங்களை இயக்க அனுமதித்தால் தொடர்ச்சியாக மின்சாரம் வழங்க முடியாது எனவும், தடையில்லா மின்சாரம் வழங்கினால் வாகனங்களை இயக்க எரிபொருள் கிடைக்காது எனவும் எரிசக்தி அமைச்சர் கூறியதாக தெரிவித்தார்.

தற்போது தினமும் இரண்டு மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதாகவும், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்திற்குள் அது மேலும் மோசமடையக்கூடும் என்றும் அவர் கூறினார்.

தற்சமயம் பொதுமக்கள் இருளில் இருப்பதாகவும், எரிபொருள் சுத்திகரிப்பு நிலையங்கள் இன்மையால் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதில் இருந்து தடுக்கப்பட்டுள்ள நிலையில், பால் மாவை கொள்வனவு செய்வதற்கு பொதுமக்கள் வரிசையில் நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் திஸாநாயக்க குறிப்பிட்டார்.

எனவே நாடும் மக்களும் தற்போது பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர் என்றார்.

மேலும், நாட்டை நடத்துபவர்கள் நிதி மோசடி மற்றும் பொது நிதியை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அவ்வாறான முறையில் நாட்டை ஆள முடியாது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *